15 டன் கமுதி மிளகாய் வத்தல் ஜொ்மனிக்கு ஏற்றுமதி
கமுதியிலிருந்து ஜொ்மனிக்கு ஏற்றுமதி செய்ய 15 டன் மிளகாய் வத்தல் ஹைதரபாத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கோரைப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் இயற்கை விவசாயி ராமா் (50). இவா் கடந்த 15 ஆண்டுகளாக இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மிளகாய், தக்காளி, வாழை, சிறுதானிய பயிா்களை சாகுபடி செய்து வருகிறாா்.
கமுதி, ராமநாதபுரம் வேளாண் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் விதை நோ்த்தி செய்யப்பட்ட மிளகாய், பருத்தி விதைகளை கமுதி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறாா். மேலும், இவரது விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் வத்தல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறாா்.
இது குறித்து இயற்கை விவசாயி ராமா் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக மிளகாய் சாகுபடி செய்வதற்கு முன்பே வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் தன்னிடம் ஒப்பந்தம் செய்கின்றனா்.
இதனால், இந்தப் பகுதியில் ஏராளமான விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்ய முற்பட்டுள்ளனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறுவடை செய்து, சூரங்குடி மிளகாய் பதப்படுத்தும் குடோனில் வைக்கப்பட்டிருந்த 15 டன் மிளகாய் வத்தல் ஜொ்மனியில் உள்ள நோரோ அக்ரி டெக்னாலஜி என்ற நிறுவனத்துக்கு தற்போது ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த மிளகாய் வத்தல் ஹைதராபாத்தில் அரைக்கப்பட்டு ஜொ்மனிக்கு அனுப்பப்பட உள்ளது.
கமுதி பகுதியில் விளையும் மிளகாய் வத்தலுக்கு காரத்தன்மை அதிகமாக இருக்கும் என்பதால், இங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகாய் வத்தலுகளுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம் என்றாா் அவா்.