Asirvad Microfinance -க்கு RBI விதித்த தடை, Manappuram Finance பங்கு விலை சரியும...
17 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் உயிருடன் கண்டுபிடிப்பு!
17 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் தற்போது உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிகார் மாநிலத்தின் டியோரியா பகுதியைச் சேர்ந்த நாதுனி பால் (வயது 50) எனும் நபர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்து காணாமல் போனார். அப்போது, அவரது மாமா மற்றும் அவரது சகோதரர்கள் 4 பேர் சேர்ந்து நாதுனியின் நிலத்துக்காக அவரைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி மற்றொரு உறவினர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கொலையாளிகள் எனக் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் சுமார் 8 மாதக் காலம் சிறைத் தண்டனை அனுபவித்தனர். இதில் தற்போது அவரது மாமா உயிரிழந்துவிட்ட நிலையில் மீதமுள்ளவர்கள் பிணையில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜன.6 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் காவல் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஒரு நபர் கடந்த 6 மாதமாக ஜான்சியில் வாழ்ந்து வருவதை அறிந்து அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்நபர் பிகார் மாநில ஆவணங்களில் இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிக்க:26வது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதி தற்கொலை! அதுவும்..
இதனைத் தொடர்ந்து, அந்நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பெயர் நாதுனி பால் என்றும் சிறு வயதிலேயே பெற்றோர் இழந்த அந்நபரது மனைவியும் பிரிந்து சென்றதினால் அவர் தனது வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாகக் கூறியுள்ளார். மேலும், அவர் பிகாரிலுள்ள தனது சொந்த ஊருக்கு சென்று 16 ஆண்டுகள் ஆகினறது என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர், நாதுனி பால் உயிருடன் இருப்பது குறித்து அம்மாநில காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த குற்றம்சட்டப்பட்ட அவரது உறவினர்கள், ஒரு வழியாக இந்த கொலை பழியிலிருந்து தாங்கள் விடுதலை பெற்றுள்ளதாகக் கூறி கண்ணீர் விட்டு அழுதனர்.
இருப்பினும், இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதினால் நாதுனி பாலை ஜான்சி காவல் துறையினர், பிகார் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.