'அண்ணாமலைக்கு வரவேற்பா?' - கொந்தளித்த BJP சீனியர்கள்! | Cyclone Fengal | Seeman ...
20 ஆண்டுகளாக மூக்கில் தங்கியிருந்த பகடை; அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்!
வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியான் பகுதியைச் சேர்ந்தவர் சியோமா என்ற 23 வயது இளைஞர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான தும்மல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு பாரம்பரிய சீன மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை தோல்வி அடைந்த நிலையில் பிரபலமான மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒவ்வாமை மற்றும் நாசி அலர்ஜி இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், அவரது நாசியில் ஏதோ ஒரு பொருள் அடைத்துக்கொண்டிருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து நாசியை எண்டோஸ்கோபி மூலம் பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாசி' குழியில் 2 செ.மீ அளவுள்ள பகடை (Dice) இருப்பதைக் கண்டறிந்தனர்.
இது பற்றி சியோமாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் யாங் கூறுகையில், "நான் நாசிக்குழிக்குள் எண்டோஸ்கோபி செய்து பார்த்தபோது, சுரப்பிகளால் மூடப்பட்ட ஒரு வெள்ளை நிறத்தை நான் கண்டேன், நான் அதை வெளியே எடுத்தபோது அது 2 செ.மீ அளவுள்ள பகடை என தெரிய வந்தது. இது நீண்ட காலமாக நாசிக்குழிக்குள் இருந்ததால், அது ஓரளவு அரிக்கப்பட்டிருந்தது.
சியோமா மூன்று அல்லது நான்கு வயது குழந்தையாக இருக்கும்போதே, இந்த பகடை தற்செயலாக அவருடைய மூக்கினுள் சென்றிருக்கலாம். ஆனால், அது எப்படி நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பகடையைச் சுற்றியுள்ள திசுக்கள் நீண்ட காலமாக இணைக்கப்பட்டிருப்பதால் அவற்றை அகற்றுவது எளிதல்ல. அதிர்ஷ்டவசமாகத்தான், அறுவை சிகிச்சை மூலம் பகடை வெற்றிகரமாக அகற்றப்பட்டது. குழந்தைகள் தங்களது மூக்கில் ஏதாவது பொருள்களை போட்டுக்கொள்கிறார்களா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். குரல்வளை குழி அல்லது காற்றுப்பாதை வழியாக அந்தப் பொருள்கள் உள்ளே சென்று விட்டால் மூச்சுத்திணறல் ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தாகலாம்'' என்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...