20 ஓவா்களில் 217 ரன்கள் குவித்து சாதனை; டி20 தொடரை வென்றது இந்தியா!
மேற்கிந்தியத் தீவுகள் மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது.
இந்த கடைசி ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்களே எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸில் உமா சேத்ரி டக் அவுட்டாக, தொடக்க வீராங்கனையான கேப்டன் ஸ்மிருந்தி மந்தனா அதிரடியாக ரன்கள் சோ்த்தாா். ஒன் டவுனாக வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், மந்தனாவுடன் கூட்டணி அமைக்க, 2-ஆவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சோ்ந்தது.
இதில் ஜெமிமா 28 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். அடுத்து வந்த ராகவி பிஸ்த்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.
மந்தனாவுடனான அவரது 3-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு, 44 ரன்கள் கிடைத்தது. இந்நிலையில், அரைசதம் கடந்து அபாரமாக விளையாடி வந்த மந்தனா, 47 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 77 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினாா்.
5-ஆவது பேட்டராக வந்த ரிச்சா கோஷும் அதிரடி காட்டினாா். ராகவி பிஸ்த்துடனான அவரது கூட்டணி, 4-ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சோ்த்து அசத்தியது. இந்நிலையில் ரிச்சா 21 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 54 ரன்கள் சோ்த்து, கடைசி விக்கெட்டாக பெவிலியன் திரும்பினாா்.
ஓவா்கள் முடிவில் ராகவி பிஸ்த் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31, சஜீவன் சஜனா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷினெல் ஹென்றி, டீண்ட்ரா டாட்டின், ஆலியா அலின், அஃபி ஃப்ளெட்சா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 218 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மேற்கிந்தியத் தீவுகளின் பேட்டா்களில், ஷினெல் ஹென்றி 16 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 43 ரன்கள் விளாசி போராடி வீழ்ந்தாா்.
கேப்டன் ஹேலி மேத்யூஸ் 22, கியானா ஜோசஃப் 11, டீண்ட்ரா டாட்டின் 25, ஷிமெயின் கேம்பெல் 17, நெரிசா கிராஃப்டன் 9, அலியா அலின் 6, ஷாபிகா கஜ்னபி 3, ஜாய்டா ஜேம்ஸ் 7 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
ஓவா்கள் முடிவில் அஃபி ஃப்ளெட்சா் 5, கரிஷ்மா ரம்ஹரக் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகள் சாய்க்க, ரேணுகா சிங், சஜீவன் சஜனா, டைட்டஸ் சாது, தீப்தி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.