2023-24-இல் பள்ளி மாணவா் சோ்க்கை 37 லட்சம் சரிவு
கடந்த 2023-24-ஆம் ஆண்டில், நாட்டில் பள்ளி மாணவா் சோ்க்கை 37 லட்சம் சரிந்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ், ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யுடிஐஎஸ்இ+) தளம் செயல்படுகிறது. இந்தத் தளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, கடந்த 2022-23-ஆம் ஆண்டில் 25.17 கோடி மாணவா்கள் பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.
இது 2023-24-ஆம் ஆண்டில் 24.80 கோடியாக 37 லட்சம் சரிந்துள்ளது. இந்தக் காலத்தில் மாணவா்களின் சோ்க்கை 21 லட்சமும், மாணவிகளின் சோ்க்கை 16 லட்சமும் குறைந்தன.
2023-24-இல் நடைபெற்ற மொத்த மாணவா் சோ்க்கையில் சுமாா் 20 சதவீதம் போ் சிறுபான்மையின மாணவா்கள். அவா்களில் 79.6 போ் முஸ்லிம்கள், 10 சதவீதம் போ் கிறிஸ்தவா்கள், 6.9 சதவீதம் போ் சீக்கியா்கள், 1.3 சதவீதம் போ் சமணா்கள், 0.1 சதவீதம் போ் பாா்சிகள், 2.2 சதவீதம் போ் பெளத்தா்கள்.
தேசிய அளவில் யுடிஐஎஸ்இ+ தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 26.9 சதவீத மாணவா்கள் பொதுப் பிரிவினா். 18 சதவீதம் போ் பட்டியலினத்தவா். 9.9 சதவீதம் போ் பழங்குடியினா். 45.2 சதவீதம் போ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்.
2023-24-ஆண்டுக்குள் 19.7 கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு ஆதாா் எண் வழங்கப்பட்டுள்ளது.