செய்திகள் :

2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசியல்

post image

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முழுதாக இருப்பது 2025 ஆம் ஆண்டு மட்டுமே என்ற நிலையில் இப்போதே கூட்டணிக் காய்ச்சல் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. 'குருவி' படத் தயாரிப்பாளர் - நடிகர் உதயநிதியும் ஹீரோவாக நடித்த விஜய்யும் இரு துருவங்களாக மாறுவார்களோ என்று தோன்றச் செய்கிறது 2024!

மக்களவைத் தேர்தல்

2024 மே மாதத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில் முதல்முறையாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்தது. மாநிலங்களவையில் ஒரு இடம் தருவதாக திமுக உறுதியளித்ததையடுத்து திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தது மக்கள் நீதி மய்யம்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது, தேனி தொகுதியில் மட்டும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். ஆனால், 2024 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது. அதிமுகவுடன் தேமுதிகவும் பாஜகவுடன் பாமகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், இரு கூட்டணிகளும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஸ்டாலின்...

தேர்தலில் திமுக அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைவிட அதிமுக, பாஜக கூட்டணிகளின் தோல்வி குறித்துதான் அதிகம் விமர்சிக்கப்பட்டது. இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டிருந்தால் ஓரிரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறினர். ஒருசில தொகுதிகளின் வாக்கு விவரங்களும் அவ்வாறே இருந்தன.

அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் 2023 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு 15 மாதங்களாக புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு, நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் செப். 26 ஆம் தேதி உத்தரவிட்டது.

அவர் சிறையில் இருந்த காலத்தில் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு 58 முறை அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஜாமீனில் வெளியே வந்தவுடனே அவர் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார். முன்பு பதவி வகித்த அதே மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறைகளே அவருக்கு வழங்கப்பட்டது.

அமைச்சாான செந்தில் பாலாஜி...

துணை முதல்வர் உதயநிதி

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின், அடுத்த ஆண்டே, அதாவது 2022-ல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரானார்.

அடுத்து 2024 செப்டம்பர் மாதமே நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் உதயநிதியைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர்களே பேசிப் பரபரப்பை ஏற்படுத்தினர். சொல்லிவைத்தாற்போல, அடுத்தடுத்து நகர்த்தல்கள் நடந்தன. துணை முதல்வராக செப். 28 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.

தாய், தந்தையுடன் தனயன்...

திமுகவினர் இதனை வரவேற்றாலும், வாரிசு அரசியல் என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றன.

ஆனால், துணை முதல்வர் உதயநிதி, பல இடங்களிலும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குப் பதிலாக இடம்பெற்று வருகிறார்.

அமைச்சரவையிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின், துரைமுருகனுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு மூன்றாமிடம் வழங்கப்பட்டுள்ளது.

சமீபமாக சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஏரிகளில் ஆய்வு, ஃபென்ஜால் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுதல், நிவாரணம் வழங்குதல் என மக்களை நேரடியாகச் சென்று சந்தித்து வருகிறார்.

அரசின் முக்கிய திட்டங்களைத் தொடக்கிவைப்பது, முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, மாவட்டங்களில் ஆய்வுகள் என மும்முரமாக இருக்கிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இணையாக வைத்தே உதயநிதியைப் பார்க்கின்றனர் மூத்த அமைச்சர்கள். நிகழ்ச்சிகளிலும் அதேயளவுக்கு உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்படுகிறார்.

மேலும் இம்மாத தொடக்கத்தில், மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக உதயநிதி ஸ்டாலினை நியமித்தது தமிழக அரசு. திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையி்ன் அமைச்சர் என்ற முறையில் உதயநிதி அலுவல்சாரா துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்து ஆய்வுக்கூட்டங்களிலும் அவருக்கு அடுத்தபடியாக அமர்ந்தே கலந்துகொள்கிறார்.

விஜய்யின் அரசியல் நுழைவானது தேர்தலில் திமுகவுக்கு கடும் போட்டியைத் தரும் என்பதாகப் பேசப்படும் நிலையில், ஒரு கூட்டத்தில் விஜய் பேசியது பற்றிக் கேட்டபோது, 'நான் சினிமா நிகழ்ச்சிகள் பார்ப்பதில்லை' என்று தடாலடியாகப் பதிலளித்துச் சென்றார்.

அமைச்சரவை மாற்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.

துறைகள் மாற்றம்: உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத் துறையும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த சிவ.வீ. மெய்யநாதனுக்குப் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையும் வனத் துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத் துறைக்கும், ஆதிதிராவிடர் நலத் துறையைக் கையாண்டு வந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கப்பட்டன.

புதிய அமைச்சர்கள்...

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு பால் வளத்துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதித் துறையுடன் சுற்றுச்சூழல் துறை கூடுதலாகவும் ஒதுக்கப்பட்டது.

அடுத்து, அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

உயர்கல்வித் துறை அமைச்சராக கோவி. செழியனும் சுற்றுலாத் துறை அமைச்சராக பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும் புதிதாக இணைந்தனர்.

செஞ்சி மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மை நலத் துறை, ஆவடி நாசருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிறை செல்வதற்கு முன்னதாக செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மீண்டும் அவருக்கே ஒதுக்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, 5-ஆவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | 2024 - டி.ஒய். சந்திரசூட் முதல் சேகர் யாதவ் வரை... நீதிபதிகளும் நீதித்துறையும்!

அண்ணாமலை vs தமிழிசை

அதிமுக-பாஜக கூட்டணி முறிந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலை பாஜக தனித்துச் சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அண்ணாமலைக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் மோதல் உருவானது. இபிஎஸ் குறித்து மோசமாக விமர்சித்திருந்த அண்ணாமலைக்குத் 'தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம்' என தமிழிசை மறைமுகமாக அறிவுரை கூறியிருந்தார்.

மேலும், அதிமுக - பாஜக இணைந்து போட்டியிட்டிருந்தால் சில தொகுதிகளில் வென்றிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர் தமிழிசை. கோவை தொகுதியில் அண்ணாமலையும் தோல்வியுற்றார்.

தன்னை சந்தித்த அண்ணாமலைக்குத் தான் எழுதிய நூலைப் பரிசளித்த தமிழிசை சௌந்தரராஜன்.

பல சூழ்நிலைகளில் கட்சி சார்ந்து அண்ணாமலை எடுக்கும் முடிவுகள் குறித்து தமிழிசை அப்போது பேசியிருந்தார். எனினும் கட்சியின் தலைவர் என்ற முறையில் அண்ணாமலைக்கு முடிவெடுக்க உரிமை உண்டு என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலைக்கும் தமிழிசைக்கும் மோதல் என பல விமர்சனங்கள் கருத்துகள் எழுந்தபோது, அண்ணாமலை மீது தலைமையிடத்துக்குப் பல்வேறு புகார்களும் சென்ற நிலையில்தான் அண்ணாமலை நேரடியாக சென்று தமிழிசையை சந்தித்துப் பேசி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அண்ணாமலை மீது பல விமர்சனங்கள் வந்தாலும் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்று வாக்கு விகிதத்தை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.

அண்ணாமலை லண்டன் பயணம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் தொடர்பான உயர்படிப்பு படிப்பதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டன் சென்றார். 3 மாத காலம் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற நிலையில் நவம்பர் இறுதியில் தமிழகம் திரும்பினார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுவாரா என கேள்வி எழுந்த நிலையில், அவர் லண்டனில் இருந்தபடியே கட்சிப் பணிகளையும் கவனித்துக்கொள்வார் என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதன்படியே, அவரும் தற்போது லண்டனில் இருந்து திரும்பி மீண்டும் முழுவீச்சில் கட்சிப் பணிகளைத் தொடங்கிவிட்டார். 2025 ஜனவரி மாதம் தமிழகத்தில் கிராமங்கள்தோறும் நடைப்பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பை ஏற்படுத்திய திருமாவளவன்

அக்டோபர் 2-ஆம் தேதி விசிக மது ஒழிப்பு மாநாடு நடைபெறும் என விசிக அறிவித்த சில நாள்களில், 'மது ஒழிப்பு மாநாட்டில் எந்தக் கட்சியும் பங்கேற்கலாம், அதிமுகவும் பங்கேற்கலாம், இது மக்கள் நலன் சார்ந்தது' என அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இதனால் திமுக - விசிக கூட்டணியில் விரிசலா எனக் கேள்வி எழும்பியது.

அடுத்து இதனை வலுப்படுத்தும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில், 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு!' என்ற தலைப்பில் பழைய விடியோவொன்றைப் பகிர்ந்தார் திருமாவளவன். இது அரசியலில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாகத் தமிழிசை சௌந்தராஜன் உள்ளிட்ட பாஜகவினர், திருமாவளவன் மற்றும் அவரது கட்சி குறித்து குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

திருமாவளவன் - விஜய் சர்ச்சை

சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகிய இருவரும் கலந்துகொள்ளவிருந்த நிலையில், அரசியல் விமர்சனங்கள் எழுந்ததால் திருமாவளவன் இதில் கலந்துகொள்ளவில்லை.

சர்ச்சைகளை, அரசியல் விமர்சனங்களைத் தவிர்க்கவே இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என்று தொல். திருமாவளவன் விளக்கமளித்தார். மறுபக்கம், திமுகவின் அழுத்தத்தின் காரணமாகவே திருமாவளவன் பங்கேற்கவில்லை என்று விஜய் கூறியிருந்த நிலையில், திமுகவிடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை என்றும் திருமாவளவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜயுடனும் விஜய் கட்சியுடனும் எந்த முரண்பாடும் இல்லை என்றும் விமர்சனங்களுக்குப் பதில் அளித்திருந்தார்.

காலியாகிறதா நாம் தமிழர் கட்சி?

2010 ஆம் ஆண்டு நடிகர், இயக்குநர் சீமானால் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில்கூட நாம் தமிழர் கட்சி, அதிக வாக்கு விகிதம் பெற்று தேசிய அந்தஸ்த்தைப் பெற்றது.

சீமான்

ஆனால், மறுபக்கம் கோவை, தருமபுரி, நெல்லை, நாகை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகி வருகின்றனர். கட்சி நிர்வாகிகளையும் அவர்களின் கருத்துகளையும் சீமான் மதிப்பதில்லை, கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறார் என்று பொதுவாக அனைத்து நிர்வாகிகளாலும் கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் விலகல் 2026 பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் - சீமான் கருத்து மோதல்

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது சீமான் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் பேசி வந்தார். ஏன், விஜய் அரசியலுக்கு வர பயப்படக் கூடாது என்றெல்லாம் அறிவுரைகளையெல்லாமும் வழங்கி வந்தார்.

ஆனால், அக்டோபர் இறுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்குப் பிறகு விஜய்யை சீமான் கடுமையாக விமர்சித்தார்.

விஜய் | சீமான்

தமிழ் தேசியத்துக்கு விஜய் முக்கியத்துவம் அளிப்பார் என்று சீமான் எதிர்பார்த்த நிலையில், தமிழ் தேசியம், திராவிடம் இரண்டையும் தனது கொள்கையில் குறிப்பிட்டார் விஜய்.

'இந்த இரண்டும் வேறு வேறு, கட்சிக் கொள்கையில் இந்த இரண்டும் இருக்க முடியாது, விஜய் தனது கொள்கைகளை மாற்ற வேண்டும் அல்லது எழுதிக் கொடுப்பவரை மாற்ற வேண்டும், வில்லனும் கதாநாயகனும் எவ்வாறு ஒன்றாக முடியும்? அண்ணன் என்ன.. தம்பி என்ன.. எதிரி எதிரிதான்!' என விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்தார் சீமான். இதுவும் அரசியலில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

எனினும் நவம்பர் மாதம் சீமான் பிறந்த நாளுக்கு 'சகோதரர் சீமான்' என விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியதா தவெக?

ஜெயலலிதாவுக்குப் பிறகு இபிஎஸ் 4 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தார். கருணாநிதிக்குப் பிறகு மு.க. ஸ்டாலின் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசியலுக்கு வந்து சிறிது காலத்திலேயே தனது பெயரை அரசியலில் கூறுமளவுக்கு முத்திரை பதித்து, பின்னர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஆண்டு இறுதியில் மறைந்தார்.

தவெக தலைவர் விஜய்

இதையும் படிக்க | சொல்லப் போனால்... மட்டையா, மரக்கலமா, விஜய்யின் த.வெ.க.?

இந்தவொரு சூழ்நிலையில் கடந்த பிப். 2 ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் விஜய் அறிவித்தார்.

'விஜய் மக்கள் இயக்கம் தன்னால் முயன்ற வரையில் பல்வேறு நலத் திட்டங்களை செய்து வந்தாலும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பால் மட்டும் முடியாது, அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது' என்று தான் கட்சி தொடங்குவதற்கான விளக்கத்தையும் கூறினார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு என்று கட்சியின் பெயரான 'தமிழக வெற்றிக் கழகம்' என்பதையும் அறிவித்தார்.

கடந்த ஆக.22 ஆம் தேதி தவெக-வின் கட்சிக் கொடியை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்து கொடியையும் ஏற்றி வைத்தார். கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறம், நடுவில் மஞ்சள் நிறம், கொடியின் நடுவில் வாகை மலர், மலரின் இருபுறமும் யானை இருக்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னர் கட்சிப் பாடலையும் வெளியிட்டார்.

இதையடுத்து கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த அக். 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சுமார் 8-12 லட்சம் பேர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

கொள்கைத் தலைவா்களாக பெரியாா், காமராஜா், அம்பேத்கா், வேலு நாச்சியாா், அஞ்சலை அம்மாள் ஆகியோரை ஏற்றுள்ளதாக அறிவித்தார் விஜய்.  சேரர், சோழர், பாண்டியர், தமிழன்னை கட்-அவுட்களும் மாநாட்டில் இடம்பெற்றிருந்தன. இதன் மூலமாக ஒட்டுமொத்தமாக அனைத்து சமூகத்தினரின் வாக்குகளையும் பெற விஜய் முயற்சிக்கிறார் என்று பேசப்பட்டது.

மாநாட்டில் கொள்கைகளை அறிவித்த விஜய், திராவிடமும், தமிழ்த் தேசியமும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரு கண்கள் என்றார். மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம், இருமொழிக் கொள்கை ஆகியவற்றை முன்னிறுத்திய அவர், மறைமுகமாக தமிழகத்தில் ஆளும் திமுகவையும் மத்தியில் ஆளும் பாஜகவையும் விமர்சித்தார்.

தவெக மாநாட்டுத் திடல் முகப்பு...

இதையும் படிக்க | யாா் வாக்குகளை பிரிக்கப் போகிறாா் விஜய்?

பெரியாரை ஏற்றுக்கொண்டாலும், கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்கவில்லை என அறிவித்து மேடையில் பகவத் கீதை, பைபிள், திருக்குரான் ஆகியவற்றை பெற்றுக்கொண்டது, கூட்டணியில் இடம்பெற்றுள்ளோருக்கு ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என அறிவித்தது, தமிழகத்தில் பரவலாக அனைத்து சமூகத்தினரும் மாநாட்டில் கலந்துகொண்டது, இளைஞர்கள் அதிகமாக கலந்துகொண்டது என நேர்மறையான விமர்சனங்கள் வந்தன.

அதேநேரத்தில் ஒரு நடிகருக்கு கூட்டம் கூடுவது சாதாரணமானதுதான், ஒரு படத்தில் பேசுவது போலவே விஜய் பேசினார், கொள்கைகளில் தெளிவில்லை, பேச்சில் குழந்தைத்தனமான சில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம் என எதிர்மறையான கருத்துகளும் வந்தன.

எனினும், விஜய்யின் மாநாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஜெயித்தவர் என்றால் எம்ஜிஆர் மட்டும்தான். விஜயகாந்தையும் சொல்லாம். மற்றபடி, ரஜினிகாந்த் முதல் தற்போது அரசியலில் இருக்கும் கமல்ஹாசன் வரை அரசியலில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது உண்மைதான்.

எம்ஜிஆரும் விஜயகாந்தும் மக்களோடு நெருக்கமாக இருந்தவர்கள். பொதுநல செயல்பாடுகளில் அதிகம் ஈடுபட்டவர்கள். ஆனால், விஜய் தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளில் இதுவரை பெரிதாக ஈடுபாடு காட்டியதில்லை. விஜய் மக்கள் இயக்கம் சில சமூகப் பணிகளில் ஈடுபட்டிருப்பதைத்தவிர. கடந்த ஆண்டு முதல்முறையாக 10,12 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவியருக்கு மாவட்டவாரியாக பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கும் விழாவை நடத்தினார்.

நல உதவி வழங்கும் விஜய்...

சமீபமாக ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவர்களை வேறு மாவட்டங்களில் இருந்து பனையூரில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து நிவாரணப் பொருள்கள் வழங்கியது பேசுபொருளானது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தான் செல்வதால் ஏற்படும் கூட்டத்தைத் தவிர்க்கவும் பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசவுமே இவ்வாறு செய்ததாக விஜய் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, கட்சி மாநாட்டுக்குப் பிறகும் விஜய், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து பெரிதாக எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு மட்டுமே கண்டனம் தெரிவித்திருந்தார்.

எனவே, கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட விஜய், அரசியலுக்கு வந்திருப்பது பெரிய விஷயமாக இருந்தாலும் அவர் அரசியலில் இன்னும் முழுமையாக இறங்கவில்லை என்பதே பரவலான கருத்தாக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கும் நிலையில் வரும் காலங்களில் அவர் எவ்வாறு செயல்படுவார் என்பதைப் பொருத்திருக்கலாம் 2025 ஆம் ஆண்டின் தமிழக அரசியல் போக்கு.

டி.ஒய். சந்திரசூட் முதல் சேகர் யாதவ் வரை... 2024 - இல் நீதிபதிகளும் நீதித்துறையும்!!

நீதித்துறையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஓய்வு, அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவின் சர்ச்சைப் பேச்சு, புதிய குற்றவியல் சட்டங்கள், நீதிதேவதையின் தோற்றத்தில் மாற்றம் எனப் ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... அதானியில் தொடங்கி அம்பேத்கர் வரை!

நவ. 25 முதல் டிச. 20 வரையிலான நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது. மக்களவை 54.5 சதவிகிதமும் மாநிலங்களவை 40 சதவிகிதமும் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாக (ஆங்கிலத்தில் Productivity – ப... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஒரு அயோத்தி போதாதா?

காக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற நல்லிணக்கத்தைக் காக்கக் கூடிய திசை நோக்கியதொரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக விசாரணை நீதிமன்றங்கள் எந்தவொரு ஆணை... மேலும் பார்க்க

மனித உரிமை நாள்: நினைக்கபட வேண்டிய இந்தியர்கள்!

‘மனித உரிமைகள்’ (Human Rights) என்ற இரு எளிய சொற்கள்தான் பூமிப்பரப்பெங்கும் நம்காலத்தில் வாழும் மனித இனத்தின் “பொது மொழி”யாகியுள்ளது ( lingua franca of humanity).மனித உரிமைகள் என்ற இரு சொற்கூட்டுதான் ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!

கூடங்குளம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை, பரந்தூர் பசுமை விமான நிலையம் என்ற வரிசையில் அடுத்து வந்திருக்கிறது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!மதுரை மாவட்டம் ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... மருத்துவத்துக்கு மருத்துவம்! டிரம்ப் அதிரடி

2025 ஆண்டிலிருந்து அடுத்த நான்கு ஆண்டுகள் அமெரிக்காவை ஆளப் போகிறவர்களின் பட்டியலில் ஒவ்வொருவராக அறிவித்துக்கொண்டிருக்கிறார் அதிபர் (தேர்வு) டொனால்ட் டிரம்ப்.டிரம்ப் அரசில் நலவாழ்வு மற்றும் மக்கள் சேவை... மேலும் பார்க்க