டி.ஒய். சந்திரசூட் முதல் சேகர் யாதவ் வரை... 2024 - இல் நீதிபதிகளும் நீதித்துறையும்!!
நீதித்துறையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஓய்வு, அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவின் சர்ச்சைப் பேச்சு, புதிய குற்றவியல் சட்டங்கள், நீதிதேவதையின் தோற்றத்தில் மாற்றம் எனப் பல நிகழ்ந்துள்ளன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாகக் கருதப்படும் இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக இருக்கும் நீதித்துறை, நாடாளுமன்றம் / சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறையில் விலகி சுதந்திரமாகச் செயல்படக் கூடியது.
ஆனால், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய நீதித் துறையை நாடே திரும்பிப் பார்த்த, விமர்சித்த சம்பவங்கள் 2024 ஆம் ஆண்டில் அரங்கேறியுள்ளன.
நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற டி.ஒய். சந்திரசூட், தனது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்குப் பாராட்டுகளும் விமர்சனங்களும் பெற்றிருந்தாலும், ஓய்வுபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்னதாக அவரின் சில செயற்பாடுகள், கருத்துகள் விமர்சனத்துக்கு உள்ளாகின.
நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் அவர் மனைவி கல்பனா தாஸ் அழைப்பின் பேரில் அவரது வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டது நீதித்துறையின் நடுநிலைமை மீதான நம்பகத் தன்மையை இழக்கும் வகையில் அமைந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
”குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலும், அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்குள் அரசு செயல்படுவதை உறுதி செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்களின் இந்தச் செயலானது நீதித்துறைக்கு மிக மோசமான சமிக்ஞை” என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் விமர்சித்தார்.
அதேபோல், மகாராஷ்டிர அரசியல் வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் அமர்வில் விசாரணையில் உள்ள நிலையில், எதிர்த் தரப்பில் உள்ள மோடியை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து இருப்பதால் எங்களுக்கு நியாயம் கிடைக்குமா என்று சந்தேகம் எழுவதாக உத்தவ் தாக்கரே சிவசேனை தரப்பு விமர்சனத்தை முன்வைத்தது.
இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலளித்த டி. ஒய். சந்திரசூட், “அரசியல் தலைவர்களுடன் நிகழும் சந்திப்பின்போது தொடர்புடைய வழக்குகள் மற்றும் நீதித்துறை சார்ந்த விஷயங்கள் பேசப்படாது. நீதித்துறை மீது அரசியல் தலைவர்கள் வைத்துள்ள மரியாதை அவர்களின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
நீதித்துறைக்கான நிதியை நீதிபதிகள் ஒதுக்குவதில்லை. அரசுகள்தான் ஒதுகின்றன. நீதிமன்றக் கட்டடங்கள், நீதிபதிகளுக்கான வீடுகளுக்கு அரசு நிதி தேவை. இதற்காக மாநில முதலமைச்சர்களை தலைமை நீதிபதிகள் சந்திக்க வேண்டியுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக நான் இருந்துள்ளேன். அப்போது நான் முதல்வர் வீட்டுக்குச் செல்வதும் முதல்வர் எனது வீட்டுக்கு வருவதும் சகஜமாக நடக்கும். கடிதம் மூலம் சந்திப்புகளை நடத்த முடியாது. இந்த சந்திப்புகளின்போது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து முதல்வர் எந்தக் கேள்வியும் கேட்கமாட்டார், எனவே நீதித்துறை பணிகளில் எந்த பாதிப்பும் இருக்காது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் அயோத்தி பிரச்னையைக் கிளப்பி, ஓய்வுபெறும் வரை டிரெண்டிங்கிலேயே நீடித்தார் டி.ஒய். சந்திரசூட்.
பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி ராமஜன்ம பூமி – பாபர் மசூதி தீர்ப்பு 2019, நவ. 9-ஆம் தேதி வழங்கப்படுவதற்கு முன்னதாக கடவுள் முன் அமர்ந்து, இதற்குத் தீர்வு கிடைக்க வழிவகை செய்யுமாறு வேண்டினேன் என்று டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டது சர்ச்சையானது.
அயோத்தி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வில் டி.ஒய். சந்திரசூட்டும் ஒருவர்.
இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் தொடர்ச்சியாக முஸ்லிம்களிடம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை, ராமர் இங்குதான் பிறந்தார் என்று ஹிந்துக்கள் நம்புவதால் அவர்களுக்கே வழங்கலாம், முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்ள சற்றுத் தொலைவில் இடம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
சந்திரசூட்டின் கருத்தை விமர்சித்த காங்கிரஸ், இதேபோன்று பிற வழக்குகளிலும் அவர் வேண்டியிருந்தால் சாமானியர்கள் பணத்தைச் செலவழிக்காமல் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நீதியைப் பெற்றிருப்பார்கள், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை மற்றும் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவது நின்றிருக்கும் எனத் தெரிவித்தது.
ஏற்கெனவே அயோத்தி வழக்கின் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய், ஓய்வுபெற்ற பிறகு மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக பதவியேற்றுள்ளார். தற்போது சந்திரசூட்டும் ஓய்வுபெற்றுவிட்டார், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ்
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்வதற்குத் தடை விதிக்கப்பட்டு முறையே 1966, 1970 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆணைகளை மறுபரிசீலனை செய்த பாஜக அரசு, கடந்த ஜூலை மாதம் அதற்கான தடையை நீக்குவதாக அறிவித்தது.
இது நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்று நினைத்தாரோ என்னவோ, விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) விழாவில் கலந்துகொண்டு அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசிய பேச்சு சமீபத்தில் சர்ச்சையாக வெடித்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கூட்டத்தில் பேசிய சேகர் யாதவ், 'இது ஹிந்துஸ்தான் (இந்தியா) என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, பெரும்பான்மையினரின் (ஹிந்துக்களின்) விருப்பப்படி இந்த நாடு செயல்படும். இதுதான் சட்டம். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தும் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கூற முடியாது. பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது' என்று கூறினார்.
இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 55 எம்பிக்கள் கையெழுத்திட்டு சேகர் யாதவை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானத்தைத் தாக்கல் செய்தனர்.
இதனிடையே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
ஆனால், சேகர் யாதவிடம் நேரில் விசாரணை நடத்திய கொலீஜியம், வார்த்தைகளில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வெறும் எச்சரிக்கையுடன் விட்டுவிட்டது.
புதிய குற்றவியல் சட்டங்கள்
ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சிகள் உள்பட பல தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தாண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஆங்கிலேயா் காலச் சட்டங்களின் அடிப்படையைக் கொண்டு நீதியை எட்டுவதற்கான சாமானிய மக்களின் பாதையில் எளிமையைப் புகுத்தும் நோக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவல் துறையிடம் இணையவழியாக புகாா்களை பதிவு செய்தல், மின்னணு முறையில் சம்மன் அனுப்புதல், தீவிர குற்றச் சம்பவங்களில் நிகழ்விட ஆதாரங்கள் சேகரிப்பைக் கட்டாயம் விடியோ பதிவு செய்வது ஆகியவை புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய சிறப்பம்சங்கள் என்பது அரசுத் தரப்பு வாதம்.
ஆனால் புதிய குற்றவியல் சட்டத்தில், தேசத் துரோகம் என்பது நீக்கப்பட்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருங்கிணைப்புக்குத் தீங்கு விளைவிப்பது போன்றவை குற்றங்களாக சேர்க்கப்பட்டுள்ளன என்று பிரதான குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசத் துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆனால், தற்போது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் கடுமையாக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதச் சட்டப் பிரிவுகளின் (யுஏபிஏ) கீழ் இருந்த கடுமையான பிரிவுகள் தற்போது குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்பு யுஏபிஏ கீழ் கைது செய்யப்பட்டால்தான், கைதானவர்கள் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.
ஆனால், புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டாலே அவர்களாகவே இல்லை என நிரூபிக்க வேண்டும். சாதாரணப் போராட்டங்களைகூட அரசுக்கு எதிரான செயல்பாடு எனக் கூறி யுஏபிஏ கீழ் கைது செய்ய முடியும்.
இது பேச்சு சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைத்ததற்கு தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நீதிதேவதை சிலை
உலக வரலாற்றில் முதல்முறையாக நீதிதேவதை சிலையின் கண்கட்டை அவிழ்த்துவிட்டுச் சீர்திருத்தம் செய்திருக்கிறார் தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட்.
இந்திய நீதித்துறையில் காலனித்துவ முறையை மாற்றும் வகையில் குற்றவியல் சட்டங்களுக்கு பெயர்களை மாற்றி திருத்தம் கொண்டுவந்ததை போன்று, தன் பங்குக்கு நீதி தேவதை சிலையில் திருத்தங்களை கொண்டுவந்தார் டி.ஒய். சந்திரசூட்.
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், திறக்கப்பட்ட கண்களுடன், அரசியல் சாசன புத்தகத்தை ஏந்திய புதிய ‘நீதி தேவதை’ சிலையை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் திடீரென்று ஒருநாள் திறந்துவைத்தார்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்கத்திடம் கலந்தாலோசனையோ தகவலோ பகிரப்படவில்லை என்பது மூத்த வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டு.
நீதி தேவதையின் கண்கள் மூடப்பட்டதற்கான காரணம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், நீதி என்பது பணம், அரசியலுக்கு அப்பாற்பட்டது, இது எதுவும் நீதியை பாதிக்கக் கூடாது என்பதாகும்.
மேலும், நீதி தேவதையின் இடது கையில் உள்ள வாள், வரலாற்று ரீதியில் அநீதியைத் தண்டிக்கவும், அதிகாரத்தை நிலை நாட்டுவதையும் குறிக்கிறது.
உலக நாடுகள் பெரும்பாலும், நீதிக்குரிய கிரேக்கக் கடவுளான இந்த ஜஸ்டிஸியாவின் சிலையைதான் நீதிக்கான சின்னமாக பின்பற்றுகிறார்கள்.
இத்தகைய சூழலில், நீதி தேவதை கண்ணில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணியும் அகற்றப்பட்டு, இடது கையில் வாளுக்கு பதிலாக அரசியல் சாசனப் புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புடவை, நெற்றியில் திலகத்துடன் இந்திய பாரம்பரிய தோற்றத்துடன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்துக்கான காரணமாக, வாள் என்பது வன்முறையின் அடையாளம், ஆனால், நீதிமன்றங்கள் அரசியல் சட்டப்படி தீர்ப்புகளை வழங்குகின்றன, எனவே வாளுக்குப் பதிலாக அரசியல் சாசனம் என்று டி.ஒய்.சந்திரசூட் சொன்னதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திடீர் மாற்றத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் சங்கம் கொண்டுவந்த தீர்மானத்தில், “இந்த நாட்டின் நீதி நிர்வாகத்தில் வழக்குரைஞர்களுக்கும் இணையான பங்கிருக்கிறது. அதிரடியாகச் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது; அவர்களாகவே முடிவு செய்துகொண்டுவிட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் நீதித்துறையின் மேலும், நீதிபதிகளின் மேலும் ஆண்டுதோறும் வந்து கொண்டேதான் இருக்கின்றன.
வருகின்ற 2025-ஐ உச்சநீதிமன்றத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா எப்படி கொண்டு செல்வார், வாராணசி ஞானவாபி மசூதி – காசி விசுவநாதர் கோவில், மதுராவிலுள்ள ஷாஹி ஈத்கா – கிருஷ்ண ஜன்மபூமி போன்று வரிசையாக காத்துக் கொண்டிருக்கும் வழக்குகளை எப்படி கையாளப் போகிறது நீதிமன்றங்கள் என்ற எதிர்பார்ப்புகளை முன்வைத்துவிட்டு விடைபெறுகிறது 2024!