28 Years Later: ஐபோனில் படம் பிடிக்கப்பட்ட பிரபல படத்தின் சீக்குவல்! - ஜாம்பியாக கிலியன் மர்ஃபி?
கடந்த இரு தினங்களாக இணையத்தை ஒரு ஹாரர் படத்தின் காணொளி ஆக்கிரமித்திருக்கிறது.
நேற்று முன்தினம் வெளியான `28 years later' என்ற திரைப்படத்தின் டிரைலர் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த டிரைலரின் இறுதியில் ஒரு ஜாம்பி எழுவதுபோல் காட்சிபடுத்தி திகில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
அந்த காணொளியைப் பகிர்ந்து `அது நம் ஆதர்ச நாயகன் கிலியன் மர்ஃபிதான். படத்திற்காக முழுமையாக உருமாறியிருக்கிறார். அசல் ஜாம்பி போலவே மாறியிருக்கிறார். அவரின் உருவமே திகில் உணர்வை கொடுக்கிறது' என பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், அந்த உருவத்தில் இருப்பது கிலியன் மர்ஃபிதான் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இத்திரைப்படத்திற்கும் கிலியன் மர்ஃபிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. ஆம், `28 days later', `28 weeks later' போன்ற திரைப்படங்களின் சீக்குவல்தான் இத்திரைப்படம். `28 days later' திரைப்படத்தின் கதாநாயகனே கிலியன் மர்ஃபிதான். அதை வைத்து இத்திரைப்படத்துடன் அவரை கனெக்ட் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
`Post Apocalyptic' ஹாரர் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. `Post Apocalyptic' என்றால் உலகம் அழிந்ததற்குப் பிறகு நடக்கக்கூடிய விஷயங்கள். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அடுத்தாண்டு ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் இத்திரைப்படம் முழுவதையும் ஐபோனில் படம் பிடித்திருக்கிறார்கள். ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மொபைலை பயன்படுத்தி இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குநர் டேனி பாயில் இயக்கியிருக்கிறார். இவர்தான் நமக்கு மிகவும் பரிச்சயமான `ஸ்லம்டாக் மில்லினியர் (Slumdog Millionaire)' திரைப்படத்தை இயக்கியவர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...