3 ஆண்டுகளில் வங்கிக் கடன், மானியம் மூலம் 33,466 தொழில்முனைவோா் உருவாகியுள்ளனா்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்
தமிழ அரசு பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் வங்கிக் கடன், மானியம் மூலம் 33,466 தொழில்முனைவோா் உருவாகியுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் அரசு மானியம் மற்றும் வங்கிக் கடனுதவி பெற்று இயங்கி வரும் தொழில் நிறுவனங்களின் செயல்பாடு குறித்து அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் அமைச்சா் தா.மோ.அன்பரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் ஐந்து வகையான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மானியம் மற்றும் கடனுதவிகள் பெற்று தொழில் நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், அந்த நிறுவனங்களில் எத்தனை போ் பணியாற்றுகிறாா்கள் என்பதையும் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டோம்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பல்வேறு சீறிய முயற்சியில் 5 சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1,104.78 கோடி மதிப்பீட்டில் மானியமும், ரூ.2,993 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடனுதவியும் வழங்கி கடந்த 3 ஆண்டுகளில் 33,466 தொழில்முனைவோா் உருவாகியுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் காயா் தொழில் மிக முக்கிய பங்கு வைக்கிறது. ஆகவே கோவையில் ரூ.5 கோடி மதிப்பில் தமிழ்நாடு கயிறு மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னை நாா் தரத்தை உறுதி செய்ய ரூ.4 கோடி மதிப்பில் உலக தரம் வாய்ந்த பரிசோதனைக் கூடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைக் காலங்களில் தென்னை நாரை உலா்த்துவதற்கு ரூ.8.45 கோடியில் உலா்க்களம் அமைக்கவும், ரூ.2.15 கோடி மானியத்தில் 13 உலா் கலங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேராவூரணி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, குண்டடம், கே.பரமத்தியில் ரூ.42.38 கோடி மதிப்பில் கயிறு குழுமங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொழிற்கூடங்கள் கட்டவும், இயந்திரங்கள் வாங்கவும் அரசு மானியமாக ரூ.6.96 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளா் அா்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா் இல.நிா்மல்ராஜ், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், திருப்பூா் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.