பிக் பாஸ் 8: செளந்தர்யா மீது புகார் தெரிவிக்கும் போட்டியாளர்கள்!
40 ஹெலிகாப்டர், 15 விமானம்... மகாராஷ்டிரா தேர்தலில் பறந்து பறந்து பிரசாரம் செய்த தலைவர்கள்..!
மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக நடந்து வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளையோடு முடிகிறது. இந்த முறை மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து பிரசாரம் செய்ய அரசியல் தலைவர்களுக்கு குறுகிய நேரமே இருந்தது.
இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு அதிக அளவில் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தால் பிற்பகல்தான் அரசியல்வாதிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார்கள். ஆனால் ஒரே கட்டமாக நடைபெறுவதால் அரசியல் கட்சி தலைவர்கள் காலை 8 மணிக்கே தேர்தல் பிரசாரத்திற்கு தயாராகிவிடுகின்றனர். இதனால் ஹெலிகாப்டர்களும், விமானங்களும் காலையிலேயே தயாராகிவிடுகின்றன.
மகாராஷ்டிரா பறந்து விரிந்த மாநிலமாக இருப்பதால் காரில் சென்று பிரசாரம் செய்வது சரியாக இருக்காது. எனவே இத்தேர்தல் பிரசாரத்திற்கு அதிக அளவில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தியுள்ளனர். தேர்தல் பிரசாரத்திற்கு 40 ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 விமானங்களை அரசியல் தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஹெலிகாப்டர்களும், விமானங்களும் தினமும் 250 இடங்களில் தரையிறங்கி இருக்கிறது.
வெளியிடத்தில் வந்த முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சிறப்பு விமானத்தில் சென்று பிரசாரம் செய்தனர். அவர்கள் மகாராஷ்டிராவின் கிராம பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்துள்ளனர். இந்த ஆண்டு தேசிய கட்சிகள் மட்டுமல்லாது மாநில கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் கூட ஹெலிகாப்டரை முன்பதிவு செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன.
விமானமாக இருந்தாலும், ஹெலிகாப்டராக இருந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.4 லட்சத்தில் இருந்து 6 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேவை அதிகரிக்கும் போது இக்கட்டணம் அதிகரிக்கலாம். பா.ஜ.கவில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எப்போதும் ஹெலிகாப்டரில் சென்றே பிரசாரம் செய்கிறார். அதே சமயம் மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே, பங்கஜா முண்டே, நிதின் கட்கரி ஆகியோர் தேவைப்பட்டால் மட்டுமே ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவர். சிவசேனா(ஷிண்டே)வில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் மட்டும் எப்போதும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர்.
மற்ற தலைவர்கள் தேவைப்படும்போது மட்டுமே ஹெலிகாப்டர் பயன்படுத்துகின்றனர். தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியில் சரத்பவார், சுப்ரியா சுலே, எம்.பி.அமோல் கோலே ஆகியோர் எப்போதும் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்கின்றனர். மற்ற தலைவர்கள் தேவை ஏற்பட்டால் மட்டுமே ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகின்றனர். அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித்பவார் மட்டுமே அடிக்கடி ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகிறார். காங்கிரஸ் கட்சியில் நானாபட்டோலே, பாலாசாஹேப் தோரட், அமித் தேஷ்முக் ஆகியோரும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவில் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, எம்.பி.சஞ்சய் ராவுத் ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகின்றனர்.
இத்தேர்தல் பிரசாரத்திற்கு விமானம் மற்றும் ஹெலிகாப்டருக்கு மட்டும் அரசியல் கட்சிகள் ரூ.550 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கின்றன. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் ஹெலிகாப்டர்களால் வழக்கமான விமான சேவையும் வெகுவாக பாதித்தது. மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் ஹெலிகாப்டர்களை இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெண் பைலட் சவிதா சிங் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அரசியல் தலைவர்கள் ஹெலிகாப்டரில் ஏறியவுடன் பெண் பைலட்டை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த சம்பவங்கள் அதிக அளவில் நடந்திருந்திருக்கிறது. பெண் பைலட் சரியாக ஓட்டுவாரா என்று அரசியல் தலைவர்கள் அச்சம் அடைந்த சம்பவங்களும் நடந்திருக்கிறது.
பவன் ஹன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சவிதா சிங் விமானப்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றி இருக்கிறார். அதோடு வழக்கமான பயணிகள் ஹெலிகாப்டர்களை 17 ஆண்டுகள் இயக்கிய அனுபவம் வாய்ந்தவர். அவர் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் அரசியல் தலைவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார். இது குறித்து சவிதா சிங் கூறுகையில்,''பெரும்பாலான நேரங்களில் ஹெலிகாப்டரில் என்னை பார்த்தவுடன் வி.ஐ.பி.கள் ஆச்சரியம் அடைவதுண்டு. ஒரு முறை மூத்த கேபினட் அமைச்சர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். அவர் என்னிடம் பாதுகாப்பாக என்னை கொண்டு போய் சேர்த்துவிடுவாயா என்று கேட்டார். உடனே உங்களுக்கு பாதுகாப்பில் பயம் இருந்தால் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.
ஹெலிகாப்டர்களை இயக்கும் போது தினமும் 5 முதல் 6 இடங்களில் இறக்கவேண்டியிருக்கும். அதிகமான நேரங்களில் ஹெலிகாப்டரை நிறுத்திவிட்டு வி.ஐ.பியின் வரவுக்காக காரில் காத்திருப்பேன். ஹெலிகாப்டரில் பெண் பைலட் இருப்பதை பார்த்து சில நேரங்களில் கூட்டத்தில் ஆரவாரம் செய்வார்கள்''என்றார். மொத்தம் 7 ஆயிரம் மணி நேரம் ஹெலிகாப்டர்களை இயக்கிய அனுபவம் பெற்ற சவிதா சிங் தற்காலிக ஹெலிகாப்டர் தளம், கடலில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளங்களிலும் ஹெலிகாப்டர்களை இறக்கி அனுபவம் பெற்றவர் ஆவார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb