APOLLO: இந்தியாவில் முதன் முறையாக முதுகுத்தண்டு உணர்திறன் நரம்புகளைத் தூண்டும் வெற்றிகர சிகிச்சை
இந்தியாவில் முதன் முறையாக அப்போலோ கேன்சர் சென்டர் – ல் நாட்பட்ட வலிக்கான நிவாரண மேலாண்மையில் முதுகுத்தண்டு உணர்திறன் நரம்புகளைத் தூண்டும் வெற்றிகர சிகிச்சை ஓமன் நாட்டைச் சேர்ந்த 30 வயதான நோயாளிக்கு புதிய வாழ்க்கையை வழங்கியிருக்கிறது.
வலி மேலாண்மையை மறுவரையறை செய்யும் முயற்சியில் ஒரு புரட்சிகர நிகழ்வாக சென்னை, அப்போலோ கேன்சர் சென்டரில் (ACC) பணியாற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை நிபுணர்கள் மற்றும் வலி மேலாண்மை சிறப்பு நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு முதுகுத்தண்டு உணர்திறன் தூண்டல் சாதனத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் முதுகுத்தண்டு உணர்திறன் நரம்புகளைத் தூண்டும் அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. இதன்மூலம் ஓமன் நாட்டைச் சேர்ந்த 30 வயதான நோயாளிக்கு நாட்பட்ட வலியிலிருந்து நிவாரணத்தை வழங்கி அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிற சிகிச்சைகள் பயனளிக்கத் தவறியிருக்கும்போது நாட்பட்ட, நரம்புடன் தொடர்புடைய வலியால் அவதியுறும் நபர்களுக்கு புதிய சிகிச்சை முறைகளுக்கான கதவுகளை இந்த புதுமையான செயல்முறை திறந்து வைத்திருக்கிறது. வலி மேலாண்மையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்படுவதை குறிக்கும் இந்நிகழ்வு, உடல்நல சிகிச்சையில் புத்தாக்கம் மற்றும் சிகிச்சை வசதிகளில் இந்தியாவின் மேம்பட்ட திறன்களை உலகறியச் செய்கிறது.
விரைச்சிரையில் உருவான ஒரு கட்டிக்கான அறுவைசிகிச்சையை ஓமன் நாட்டில் செய்ததற்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இடுப்புகவட்டை மற்றும் மேற்புற தொடைப்பகுதியில் கடுமையான வலி தொடர்ந்து இந்நோயாளிக்கு இருந்து வந்திருக்கிறது. விரிவான மதிப்பாய்வு மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மருத்துவக் குழுவின் முயற்சிகளுக்குப் பிறகு, கீழ்ப்புற வயிற்று சுவர் மற்றும் மேற்புற தொடையுடன் சந்திக்கின்ற பகுதியில் சேதமடைந்த ஒரு நரம்பின் காரணமாக, இந்த கடுமையான வலி இந்நோயாளிக்குத் தோன்றுவது கண்டறியப்பட்டது. முதன்மையான உணர்திறன் நரம்பு, முதுகுத்தண்டிலிருந்து தொடங்கி, தசைகளின் வழியாக கடந்து சென்று கவட்டைப் பகுதியை சென்றடைகிறது. இப்பகுதியில் இந்நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோது, இந்நரம்பு சேதமடைந்ததன் காரணமாக கடுமையான வலி உருவாகி தொடர்ந்து இருந்திருக்கிறது, அடிவயிறு சார்ந்த கவட்டைப் பகுதியில் நரம்புக் குத்துவலி என்றும் இது அறியப்படுகிறது.
மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு அதிகமாக நீடிக்கும் வலியானது, நாட்பட்ட வலி என வரையறுக்கப்படுகிறது; உலகளவில் இலட்சக்கணக்கான நபர்களை பாதிக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனை இது. இந்த நோய் ஏற்படுத்தும் உலகளாவிய சுமை மீதான ஆய்வின்படி, நாட்பட்ட வலியானது, உலக மக்கள்தொகையில் 20% நபர்கள் வரை பாதிக்கிறது. இந்தியாவில் இத்தகைய நாட்பட்ட வலி, வயதுவந்த நபர்களில் சுமார் 19% வரை பாதிப்பதாகவும், இதன்மூலம் அவர்களது வாழ்க்கைத்தரம் மற்றும் உற்பத்தி திறன் கணிசமாக பாதிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. இந்த நோயாளிக்கு ஏற்பட்டதைப் போல அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய நரம்பு வலி நேர்வுகள், வழக்கமான வலி நிவாரண உத்திகளின் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு பெரும்பாலும் மிகச் சிரமமானது; எனவே புதுமையான தீர்வுகளுக்கான அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்நோயாளிக்கான வலியைத் தணிப்பதற்காக தங்களது அனுபவம் மற்றும் புத்தாக்கத்தின் அடிப்படையில் ACC – ஐ சேர்ந்த முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை மற்றும் வலி நிவாரண சிறப்பு நிபுணர்களின் குழு, இந்நோயாளியின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கியது. நோயாளியின் முதுகுத்தண்டில் உணர்திறன் நரம்புகளைத் (DRG) தூண்டுவதற்கு ஒரு முதுகுத்தண்டு முடுக்கியைப் பொருத்தியதன் வழியாக சேதமடைந்த நரம்பிலிருந்து உருவாகும் வலி உணர்வுகளை மருத்துவக் குழு வெற்றிகரமாக தடுத்திருக்கிறது. நரம்பு சேதத்தினால் வலி உருவாகின்ற நோயாளிகளுக்கும் மற்றும் நாட்பட்ட மற்றும் சமாளிக்க இயலாத வலியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பயனளிக்கும் ஒரு சிகிச்சை முறையை, வழக்கத்திற்கு மாறான இந்த புரட்சிகரமான மருத்துவ செயல்முறை வழங்குகிறது.
“கடும் வேதனை தந்த இரண்டு ஆண்டுகள் மற்றும் நம்பிக்கையிழப்பிற்குப் பிறகு, வலியில்லாத ஒரு வாழ்க்கையை இறுதியாக இப்போது நான் எதிர்கொள்கிறேன்” என்று இந்நோயாளி (தனது பெயர் வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை) கூறினார். இப்பிரச்சனைக்கு தீர்வுகாண நானும், எனது குடும்பத்தினரும் கடும் சிரமப்பட்டோம். இப்போது வலியிலிருந்து, இறுதியாக விடுதலை பெற்றிருப்பது ஒரு அற்புதம் போல தோன்றுகிறது. அப்போலோ கேன்சர் சென்டரின் மருத்துவர்களது சிகிச்சைத்திறன் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக எனது வாழ்க்கையை மீண்டும் புதிதாக கட்டமைப்பதை இப்போது என்னால் தொடங்க முடியும்.” என்று அவர் மேலும் கூறினார்.
சென்னை, அப்போலோ கேன்சர் சென்டர் – ன் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை முதுநிலை நிபுணர் டாக்டர். அப்பாஜி கிருஷ்ணன் மற்றும் வலி நிவாரண சிறப்பு நிபுணர் டாக்டர். ஆனந்த் முருகேசன் ஆகியோர் கூறியதாவது: “கவட்டைப் பகுதியில் உள்ள நரம்பில் ஏற்பட்ட சேதமானது, அப்பகுதியில் தாங்க முடியாத வலியை விளைவித்து, மிக எளிமையான செயல்பாட்டைக் கூட மிக கடினமானதாக மாற்றிவிடக்கூடும். வழக்கமான அனைத்து சிகிச்சை வழிமுறைகளையும் முயற்சித்த பிறகு, இந்த நோயாளிக்கு நீடித்து நிலைக்கின்ற நிவாரணத்தை வழங்குகின்ற ஒரு சரியான தீர்வை கண்டறிய நாங்கள் உறுதியாக இருந்தோம். DRG தூண்டல் வழியாக, நரம்பு வலி உருவாகின்ற பிரச்சனையின் வேரை இலக்காக குறிவைத்ததன் வழியாக வலியிலிருந்து நிவாரணம் அளிக்கின்ற, நகர்வுத்திறனை மேம்படுத்துகின்ற எங்களால் முடிந்தது. குறைவான ஊடுருவல் உள்ள ஒரு புதுமையான அணுகுமுறையை பயன்படுத்துவதன் மூலம் மிகக்குறைந்த காலஅளவிற்குள் இத்தகைய நோயாளிகள் இயல்புநிலைக்கு திரும்புமாறு ஏதுவாக்க இயலும்.”
அப்போலோ ஆஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் செயலாக்க துணைத் தலைவர் டாக்டர். ப்ரீத்தா ரெட்டி பேசுகையில், “இந்த முன்னோடித்துவ அறுவைசிகிச்சையானது, மருத்துவ புத்தாக்கத்தில் முதன்மை நாடாக இந்தியாவின் சிறப்பான திறனை சுட்டிக்காட்டுகிறது. மனித நலவாழ்விற்கு இன்றியமையாத அடிப்படை அம்சமாக வலியற்ற வாழ்க்கை அல்லது வலியிலிருந்து நிவாரணம் பெறுவது இருக்கிறது. எனினும், உலகெங்கிலும் எண்ணற்ற நோயாளிகள் பயனளிக்காத சிகிச்சைகள் மற்றும் நரம்பு சேத வலிக்கு திறன்மிக்க விருப்பத்தேர்வுகள் இல்லாமையால் நாட்பட்ட வலியால் தொடர்ந்து அவதிப்படுகின்றனர். இந்த சாதனை சிகிச்சையின் மூலம் எமது மருத்துவமனைக்கும், இந்தியாவிலும் மற்றும் உலகளவிலும் சுகாதார செயல்தளத்திலும் ஒரு சிறந்த முன்னுதாரணத்தை நாங்கள் நிறுவியிருக்கிறோம். எங்கள் அனைவருக்குமே இதுவொரு பெருமைமிகு தருணமாகும்; உடல்நல சிகிச்சையை மேலும் மேம்படுத்தி வழங்குவதில் இந்தியாவில் அர்ப்பணிப்பு குறித்து எடுத்துக்கூறும் ஒரு சக்தி வாய்ந்த செய்தியாக இது இருக்கிறது.” என்று கூறினார்.
அப்போலோ ஆஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் நிர்வாக இயக்குனர் மிஸ். சுனிதா ரெட்டி பேசுகையில், “முன்னோடித்துவ புத்தாக்கங்களின் மூலம் தர அளவுகோல்களை தொடர்ச்சியாக மறுவரையறை செய்யும் நாங்கள் மேம்பட்ட முதுகுத்தண்டு சிகிச்சையில் முதன்மை வகிப்பதில் அப்போலோ மருத்துவமனையில் நாங்கள் பெருமை கொள்கிறோம். முதுகுத்தண்டுக்கான ரோபோ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கும் ஆசியாவின் முதல் மருத்துவ மையமாகவும் மற்றும் ரோபோட்டிக் உதவியுடன் இதுவரை 500-க்கும் அதிகமாக வெற்றிகர அறுவைசிகிச்சைகளை செய்திருக்கும் நாங்கள் விரைவாக குணமடைவதை ஏதுவாக்க குறைவான ஊடுருவல் உள்ள மருத்துவ செயல்முறைகளை புரட்சிகரமானதாக ஆக்கியிருக்கிறோம். இந்தியாவில் முதன் முறையாக வெற்றிகரமான முதுகுத்துண்டு உணர்திறன் நரம்புகளைத் தூண்டும் அறுவைசிகிச்சை செயல்முறையை மேற்கொண்டிருக்கும் இந்த மைல்கல் நிகழ்வு, சிகிச்சையில் புரட்சிகர நிலைமாற்ற தீர்வுகளை வழங்குவதில் எமது தளராத அர்ப்பணிப்பிற்கு சான்றாக இருக்கிறது. புதுமையான வலி மேலாண்மை உத்திகளை வழங்குவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு நம்பிக்கையை மீண்டும் வழங்கவும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் நாங்கள் முயற்சிக்கிறோம்; அதை சாதிப்பது இயலும் என்று நம்புகிறோம்.” என்று கூறினார்.
வழக்கமான மருந்துகள் தேவைப்படக்கூடிய பாரம்பரிய சிகிச்சைகளைப் போல் அல்லாமல், ஒரு நிலைமாற்றத்தை உருவாக்கும் அணுகுமுறையாக DRG தூண்டல் சிகிச்சைகள் இருக்கிறது. மிகக் குறைவான தழும்பு உருவாக்கம் மற்றும் அதிவேக மீட்சியோடு நீண்டகால நிலைப்புத்தன்மையுள்ள வலி நிவாரணத்தை வழங்கும் திறனை இந்த அணுகுமுறை கொண்டிருக்கிறது. இந்த நரம்பு தோன்றும் இடத்தில் தூண்டல் சாதனம் பதியம் செய்யப்படுவதால், அறுவைசிகிச்சைக்குப் பிறகு உடனடியாகவே வலி நிவாரணத்தை நோயாளிகள் பெற முடியும்; அறுவைசிகிச்சைக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே இயல்பான செயல்பாடுகளை அவர்களால் மேற்கொள்ள முடியும். நரம்புசேத வலியினால் அவதியுறும் நோயாளிகளுக்கு இந்த புரட்சிகர மருத்துவ செயல்முறை ஒரு மிகப்பெரிய முன்னேற்ற நடவடிக்கையாக இருக்கும். நாடெங்கிலும் மற்றும் அதையும் கடந்து பிற நாடுகளில் வலி மேலாண்மையில் ஒரு புதிய பாதையை இது திறந்து வைக்கும் என்பது நிச்சயம்.