Doctor Vikatan: சாட்டையடி, உண்ணாவிரதம்.... தன்னைத்தானே வருத்திக்கொள்வது எத்தகைய ...
AUSvIND: அசத்திய ஆஸியின் டாப் 3; கம்பேக் கொடுத்த இந்திய பௌலர்கள் - முதல் நாளில் என்ன நடந்தது?
மெல்பர்னில் நடந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. கான்ஸ்டஸின் அதிரடி ஆட்டம், கோலியின் ஆங்க்ரி மோட், பும்ராவின் கம்பேக் என இன்றைய நாள் முழுவதுமே படு சுவாரஸ்யமாக சென்றிருந்தது. ஆஸ்திரேலிய அணியும் 300 ரன்களை கடந்திருக்கிறது. இந்திய அணியும் விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்திருக்கிறது. முதல் நாளில் என்ன நடந்தது?
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்தான் டாஸை வென்று பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. கில்லை ட்ராப் செய்துவிட்டு வாஷிங்டன் சுந்தரை உள்ளே கொண்டு வந்திருந்தார்கள். ஆக, இரண்டு ஸ்பின்னர்களோடு இந்திய அணி களமிறங்கியது. ஒரு முழுமையான பேட்டரை ட்ராப் செய்தது இந்திய அணியின் பேட்டர்கள் மீது கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கப் போகிறது என்கிற உறுத்தலோடுதான் முதல் நாள் தொடங்கியது.
ஆஸ்திரேலிய அணியில் கான்ஸ்டஸை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். ஓப்பனராகவும் இறங்கினார். பெரும் நெருக்கடிக்கு மத்தியில்தான் கான்ஸ்டஸை ஆஸ்திரேலிய அணி மெல்பர்ன் டெஸ்ட்டுக்கு அழைத்து வந்தது. முதல் மூன்று டெஸ்ட்களிலும் ஆஸ்திரேலியாவின் ஓப்பனர்கள் சோபிக்கவே இல்லை. 6 இன்னிங்ஸ்களில் மெக்ஸ்வீனி 72 ரன்களையும் கவாஜா 63 ரன்களையும் மட்டுமே எடுத்திருந்தனர். குறிப்பாக, பும்ராவுக்கு எதிராக இருவருமே கடுமையாக திணறியிருந்தனர். பும்ரா மட்டுமே 8 முறை இவர்கள் இருவரையும் இந்தத் தொடரில் மட்டுமே ஆட்டமிழக்கச் செய்திருந்தார். இதனால்தான் மெக்ஸ்வீனியை டிராப் செய்துவிட்டு கான்ஸ்டஸை அணியில் எடுத்தார்கள். கான்ஸ்டஸூக்கு ஒரே ஒரு டாஸ்க்தான் கொடுக்கப்பட்டது. நியூபாலில் பும்ராவை சமாளித்து நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டும். இது இமாலயச் சவாலென எல்லாருக்குமே தெரியும். ஆனால், கான்ஸ்டஸ் நம்பிக்கையோடு ஆடினார்.
தனது அறிமுகப் போட்டியில் முதல் பந்தையே உலகின் அபாயகரமான பௌலரான பும்ராவுக்கு எதிராக எதிர்கொள்கிறோம் என்கிற பதற்றம் கான்ஸ்டஸூக்கு இல்லவே இல்லை. முதல் பந்தையே நிதானமாக லீவ் செய்தார். முதல் ஓவரின் அத்தனை பந்துகளையும் பார்த்து ஆடினார். ரன் கணக்கை தொடங்கவில்லை. ஆனாலும், பரவாயில்லை. பும்ராவுக்கு எதிராக ஒரு 19 வயது இளைஞன் ஒரு ஓவர் முழுக்க சர்வைவ் ஆனதே பெரிய விஷயமாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால், கான்ஸ்டஸின் பார்வையில் ஒரு தீர்க்கம் இருந்தது. பேக்வர்ட் ஸ்கொயரில் தட்டி விட்டு தனது முதல் சர்வதேச ரன்னையே பும்ராவுக்கு எதிராகத்தான் எடுத்தார். இதன்பின்தான் ஆட்டமே ஆரம்பித்தது.
பும்ராவின் விசைக்கு எதிராக பேட்டை விடவே தயங்கும் பேட்டர்களுக்கு மத்தியில் கான்ஸ்டஸ் ஸ்கூப் ஷாட்களையும் ரேம்ப் ஷாட்களையும் முயன்றார். எதுவுமே பேட்டில் படவில்லை. இன்னும் கொஞ்சம் நேர்த்தி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என தோன்றியது. ஆனாலும் கான்ஸ்டஸின் துணிச்சல் வியக்க வைத்தது. அந்த துணிச்சலுக்கான பயன் 7 வது ஓவரில் விளைந்தது. அந்த ஓவரில் மட்டும் 3 ரேம்ப் ஷாட்கள். இரண்டு பவுண்டரிக்கள் மற்றும் ஒரு சிக்சர். நடப்புத் தொடரில் பும்ராவுக்கு எதிராக ஒரு பேட்டர் அடிக்கும் முதல் சிக்சர். வெகு சமீபத்தில் பும்ராவை எந்த வீரரும் இப்படி ஆதிக்கமாக எதிர்கொண்டு பார்க்கவே இல்லை. பும்ரா பதற்றமானார். இந்திய அணி பதற்றமடைந்தது. கோலி வேண்டுமென்றே கான்ஸ்டஸின் மீது மோதி ஸ்லெட்ஜ்ஜிங் செய்தார். அப்போதும் கான்ஸ்டஸ் ஓயவில்லை. பும்ரா வீசிய அடுத்த ஓவரில் 18 ரன்கள்.
டி20 இல் ஆடுவதைப் போல வெகு இலகுவாக ரேம்ப் ஷாட்களை ஆடினார். பும்ராவின் லெந்தை குலைத்ததுதான் கான்ஸ்டஸின் வெற்றி. குட்லெந்தில் ஆங்கிள் இன் டெலிவரிக்களாக வீசி எட்ஜ் எடுப்பதுதான் பும்ராவின் பலம். ஆனால், கான்ஸ்டஸ் அடித்த அடியில் பும்ரா அந்த லெந்தை கைவிட்டார். டி20 போல ஓவரின் 6 பந்துகளை 6 விதவிதமான லெந்த்களில் வீசினார். இது கான்ஸ்டஸூக்கு கூடுதல் சௌகரியமாகிவிட்டது. வழக்கமாக 3 ஸ்லிப்களை வைத்து அட்டாக் செய்யும் ரோஹித் கான்ஸ்டஸூக்கு 2 ஸ்லிப்களை மட்டுமே வைத்து டீப்பில் பீல்டர்களை பரப்பினார். கான்ஸ்டஸூக்கு எதிராக சீக்கிரமே தற்காப்பு மனநிலைக்கு வந்து சேர்ந்தது இந்திய அணி.
கான்ஸ்டஸ் செய்த இன்னொரு நல்ல விஷயம் பும்ராவின் முதல் ஸ்பெல்லில் பெரும்பாலான ஓவர்களை அவரே எதிர்கொண்டு விட்டார். 9 வது ஓவரில்தான் கவாஜா பும்ராவுக்கு எதிராக முதல் பந்தையே எதிர்கொண்டார். இதனால் அவரின் விக்கெட்டும் காக்கப்பட்டது.
பும்ரா மட்டுமல்ல சிராஜையும் க்ரீஸை விட்டு வெளியே வந்து ஸ்பின்னர்களை ஆடுவதைப் போல ஆடினார். 52 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நின்று பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என எதிர்பார்க்கையில் ஜடேஜாவின் பந்தில் lbw ஆகி 60 ரன்களில் வெளியேறினார். ஆனாலும் அவர் செய்ய வேண்டிய வேலையைக் கச்சிதமாக செய்து முடித்துவிட்டார். ஆஸ்திரேலியாவுக்குத் தேவையான அந்த தொடக்க மொமண்டம் கிடைத்துவிட்டது. அத்தோடு பாக்ஸிங் டே டெஸ்ட்டின் முதல் செஷனிலேயே ஆஸி அணிக்கு ஒரு புதிய ஸ்டாரும் கிடைத்திருந்தார்.
கான்ஸ்டஸ் அவுட் ஆன பிறகு கவாஜாவும் லபுஷேனும் முதல் செஷனைத் தட்டித் தட்டி முடித்து விட்டனர். இரண்டாம் செஷன் தொடங்கியது. இரண்டாம் செஷனை இரண்டு பகுதியாக பிரித்தால் முதல் பாதி முழுவதும் ஆஸ்திரேலியாவே ஆதிக்கம் செலுத்தியது. கவாஜாவும் லபுஷேனும் நின்று நன்றாக ஆடினார். கான்ஸ்டஸை வீழ்த்தியிருந்த ஜடேஜாவையும் திறம்பட சமாளித்தனர்.
கவாஜா இந்தத் தொடரில் முதல் முறையாக அரைசதத்தையும் கடந்தார். இந்தக் கூட்டணியை பும்ராதான் பிரித்தார். தனது முதல் இரண்டு ஸ்பெல்களையும் விக்கெட் இன்றி முடித்த பும்ரா இந்த மூன்றாவது ஸ்பெல்லில் கவாஜாவை வீழ்த்தினார். குட் லெந்த்தில் வந்த பந்தை மிட் விக்கெட்டில் மடக்கி அடிக்க முயன்று 57 ரன்களில் ராகுலிடம் கேட்ச் ஆனார். நான்காவது விக்கெட்டுக்கு ஸ்மித் களமிறங்கினார். ஸ்மித்தும் லபுஷேனும் மீண்டும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்தத் தொடர்ல் இருவருமே இதுவரைக்கும் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால், இன்று இருவருமே அட்டாக் செய்து ஆடினார். ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக ஆடினர். ஜடேஜாவுக்கு எதிராகத் தொடர்ந்து பவுண்டரிக்களை அடித்தனர். லபுஷேன் அரைசதத்தையும் கடந்தார். ஆனால், கான்ஸ்டஸை போல கவாஜாவை போல லபுஷேனும் பெரிய இன்னிங்ஸை ஆடத் தடுமாறினார். அப்போதுதான் தனது ஸ்பெல்லைத் தொடங்கியிருந்த வாஷிங்டன் சுந்தருக்கு எதிராக இறங்கி வந்து அடிக்க முயன்று வட்டத்தைத் தாண்டாமல் கேட்ச் ஆகினார்.
லபுஷேன் 72 ரன்களை எடுத்திருந்தார். இதன்பிறகு இந்த கடைசி செஷனில் இந்திய அணிக்கு வேக வேகமாக மூன்று விக்கெட்டுகள் கிடைத்தது. லபுஷேன் விக்கெட் கிடைத்தவுடனேயே ரோஹித் பும்ராவை அவரது அடுத்த ஸ்பெல்லுக்கு அழைத்து வந்தார். இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஹெட்டை பும்ரா இங்கே டக் அவுட் ஆக்கினார். ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் இன்னாக பும்ரா வீசிய பந்து வெளியே திரும்பும் என தவறாக கணித்து ஹெட் லீவ் செய்ய முயன்றார். ஆனால், பந்து உள்ளே திரும்பி ஆப் ஸ்டம்பின் பெய்ல்ஸை மட்டும் தட்டிச் சென்றது. இந்தியாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனை கிடைத்தது. அதேவேகத்தில் மிட்செல் மார்ஷையும் பும்ரா அவுட் ஆக்கினார். நல்ல ட்ரைவ் ஒன்றை ஆடிய மார்ஷ் ஒரு குட் லெந்த் பந்தை ஷார்ட் பிட்ச் என நினைத்து அரைகுறையாக ஷாட் ஆடி வெளியேறினார். 246 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஆஸி இழந்திருந்தது. புதிய பந்தை எடுப்பதற்கு முன்பாக சௌகரியமாக கிடைத்த சில வாய்ப்புகளில் அலெக்ஸ் கேரி கொஞ்சம் ஸ்கோர் செய்தார். ஸ்மித் அரைசதத்தை கடந்தார்.
81 வது ஓவர் முடிந்த சமயத்தில் புதிய பந்து கொடுக்கப்பட்டது. இந்த முறை பும்ராவுக்கு துணையாக இன்னொரு முனையில் ஆகாஷ் தீப்புக்கு பந்தை கொடுத்தார் ரோஹித். முதல் புதிய பந்திலேயே ஆகாஷ் தீப்புக்கு ஓவரை கொடுத்திருக்கலாம், தவறிவிட்டார். இங்கே கிடைத்த வாய்ப்பை ஆகாஷ் தீப் பயன்படுத்திக் கொண்டார். புதிய பந்தில் அவர் வீசிய முதல் பந்திலேயே அலெக்ஸ் கேரியை வீழ்த்தினார். சில நிமிடங்களில் இன்றைய நாளும் முடிந்தது. ஸ்மித் 68 ரன்களிலும் கம்மின்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி 311-6 என்ற நிலையில் இருக்கிறது.
எஞ்சியிருக்கும் விக்கெட்டுகளை இரண்டாம் நாளின் முதல் செஷனிலேயே இந்திய பௌலர்கள் வீழ்த்த வேண்டும்.அப்போதுதான் போட்டி இந்தியாவின் கைக்குள் இருக்கும்.