பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவில் ‘இறுதிச் சடங்கு’: குஜராத் தொழிலதிபரின் வினோத ச...
Ayushman Bharat: 70 வயதுக்கு மேல் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு... பதிவு செய்வது எப்படி?
70 வயது மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்ச மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கான இலவச மருத்துவக் காப்பீடு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுப்படுத்தப்பட்டு, தற்போது, இந்த திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களும் பயன்பெற உள்ளனர்.
70 வயதுக்கு மேல் அனைவருக்கும்...
ஆயுஷ்மான் பார்த் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேல் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் பயன்பெறலாம். இதில் பயன்பெற, வருமானம் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிறந்த தேதிப்படி 70 வயது பூர்த்தி ஆகியிருந்தாலே போதுமானது.
மற்ற மருத்துவக் காப்பீடு திட்டம் இருந்தாலும்...
தனியார் மருத்துவக் காப்பீடு வைத்திருக்கும் மூத்த குடிமக்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். ஆனால், வேறு எதாவது அரசு மருத்துவக் காப்பீடு திட்டம் வைத்திருந்தால் மட்டும், எந்த திட்டம் வேண்டும் என்பதை முன்னரே தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இருக்கும் குடும்பத்தில் 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இருந்தால், அவர்களுக்கென தனி ரூ.5 லட்ச மருத்துவக் காப்பீடு டாப் அப் வழங்கப்படும். ஆனால், இந்த டாப் அப்பில் வேறு குடும்ப உறுப்பினர்கள் யாரும் பயன்பெற முடியாது.
எப்படி பதிவு செய்ய வேண்டும்?
இந்த திட்டத்திற்கு PMJAY, ஆயுஷ்மான் பாரத் ஆகிய செல்போன் செயலி மூலமே பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்த மூத்த குடிமக்களுக்கு தனி மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், தற்போது 12,696 தனியார் மருத்துவமனைகள் இணைந்துள்ளன. இதில் எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியும்.
இந்த திட்டம் மூலம் 6 கோடி பேரும், 4.5 கோடி குடும்பங்களும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.