Basics of Share Market 14: ஒரு நிறுவனத்தைப் பற்றி எப்படி தெரிந்துகொள்ள வேண்டும்?
பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம் என்று வைத்துகொள்வோம்.
இப்போது ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்க விரும்புகிறோம். எடுத்த உடனே, காசைப் போட்டு விட முடியுமா? காசு போடுவதற்கு முன்னால், சில ஆய்வுகள் தேவை. அதைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த ஆய்வுகளை, தர அடிப்படையிலான ஆய்வு, எண்ணிக்கை அடிப்படையிலான ஆய்வு என்று இரண்டாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
முதலில், தர அடிப்படையிலான ஆய்வு பற்றித் தெரிந்துகொள்வோம். ராஜின் துணி கடையையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அவர் எப்படி தொழில் செய்கிறார், கஸ்டமர்களுடன் அவருக்கு உள்ள உறவு போன்ற அவரது 'பிசினஸ் மாடலை' முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
பின்னர், 'ராஜ் யார்?' என்று தெரிந்துகொள்ள வேண்டும். பங்கில் முதலீடு செய்ய எதற்கு அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம். அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அவரது பெர்சனல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லவில்லை. அவர் முன்பு என்ன தொழில் செய்திருக்கிறார்? அந்தத் தொழில் எப்படிப் போயிருக்கிறது? இதே தொழிலைத் தான் செய்திருக்கிறார் என்றால் அதில் எப்படி செயல்பட்டிருக்கிறார்? இக்கட்டான சூழல்களில் அவர் என்ன முடிவு எடுத்திருக்கிறார்? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
எந்த நிறுவனம் என்றாலும், பின்பற்றும் நெறிமுறைகள் என்பது மிக மிக முக்கியம். நெறிமுறை இல்லாது அல்லது தவறி நடக்கும் நிர்வாகம் எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். அதனால் கட்டாயம் இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து, இன்றைய உலகத்தில் போட்டிகள் மிக அதிகம். அதையெல்லாம் தாண்டி ஒரு நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்படுவது மிகவும் சிரமம். அதனால், மார்க்கெட்டில் இருக்கும் போட்டிகளைச் சமாளிக்க இந்த நிறுவனம் என்ன உத்திகளை கையாள்கிறது... இப்படி தனித்துவமாக நிற்கிறது ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
துணிக்கடை போன்ற எது சார்ந்த நிறுவனமாக இருந்தாலும், எதிர்காலத்தில் அதற்கான மதிப்பு மற்றும் வளர்ச்சி இருக்கிறதா என்று பார்க்கவும்.
மேலே சொன்னவற்றை முதலில் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வளவு ஆராய்ச்சி தேவையா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நம் சொந்த காசை முதலீடு செய்யும்போது, கவனம் மிக மிக அதிகம்.
நாளை: எண்ணிக்கை அடிப்படையிலான ஆய்வு எப்படி செய்ய வேண்டும்?!