Basics of Share Market 16: வருடாந்திர அறிக்கை (Annual Report) பற்றி தெரிந்துகொள்வோமா?!
ஒரு பங்கை வாங்கும் முன்பு, அந்த நிறுவனத்தின் தர அடிப்படையிலான மற்றும் எண்ணிக்கை அடிப்படையிலான அளவீடுகளை பார்க்க வேண்டும் என்று கடந்த இரண்டு அத்தியாயங்களில் கூறியிருக்கிறோம். 'எல்லாம் சரி தான்... அதெப்படி தெரிஞ்சுக்கறது?' என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழுந்திருக்குமே...அதற்கு உதவுவது தான் 'வருடாந்திர அறிக்கை' (Annual Report).
ஒவ்வொரு நிறுவனமும் தங்களது செயல்பாடுகள், லாபம், நஷ்டம், வளர்ச்சி ஆகியவற்றை தொகுத்து வருடாந்திர அறிக்கை வெளியிடும். இதை வைத்து நாம் கடந்த இரண்டு அத்தியாயங்களில் கூறியதை தெரிந்து கொள்ளலாம். இது நிறுவனத்தில் இருந்தே வருவதால், இது மிக மிக நம்பகமான சோர்ஸ் என்று கூறலாம்.
வருடாந்திர அறிக்கை 100-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டிருக்கும். நாம் அத்தனையையும் படிக்க வேண்டும் என்பதில்லை.
நிறுவனம் சம்மந்தமான தகவல்கள்,
கார்ப்பரேட் தகவல்கள்,
நிறுவனத்தின் தலைவர் என்ன சொல்கிறார்?,
நிறுவனத்தின் இயக்குனர்கள் என்ன சொல்கிறார்கள்?,
யார் யார் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள்?,
கார்ப்பரேட் நிர்வாகம் (Corporate Governance),
மேனேஜ்மெண்ட் ஆய்வு,
ஒட்டுமொத்த நிதி அறிக்கை
இவைகளை படித்தாலே போதுமானது. இதன் மூலம் நிறுவனம் எப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறது, அடுத்தடுத்து என்ன பிளான்கள் வைத்திருக்கின்றன, இவர்களுக்கு நல்ல பங்குதாரர்கள் உள்ளனரா, நிதி நிலை எப்படி இருக்கிறது ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும்.
இந்த வருடாந்திர அறிக்கை நிறுவனத்தின் வலைதளம், BSE அல்லது NSE வலைதளம், மூன்றாம் நபர் வலைதளம் ஆகியவற்றிலும் இருக்கும். அவைகளில் இருந்து டவுண்லோட் செய்து தெரிந்துகொள்ளலாம்.
'இதை ஏன் படிக்க வேண்டும்?' என்று நினைக்காமல், முதலீடு செய்வதற்கு முன்பு, கட்டாயம் இந்த அறிக்கையை படியுங்கள். ஏனெனில் நீங்கள் முதலீடு செய்யப்போவது உங்கள் பணம்...உங்கள் எதிர்காலம்.
நாளை: நல்ல பங்குகளை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்?!