செய்திகள் :

BB Tamil 8 Day 12: வெடித்த விவகாரம்; சர்ச்சையான அவார்ட் ; வெளியேறப்போவது யார்?

post image
‘சின்னக் காலா இருந்தாலும் நல்லாயிருக்குடா’ என்று ‘காக்கா பிரியாணி’ நகைச்சுவைக் காட்சியில் விவேக் சொல்லுவார். அதைப் போலவே இன்றைய எபிசோடில் எப்படியோ கொஞ்சம் சுவாரசியம் வந்து விட்டது. இப்படியே வண்டியை நகர்த்திச் சென்றால் கூட இந்த சீசனை ஒருமாதிரி காப்பாற்றி விடலாம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 12

சூரியன் உதிக்கும் காட்சியில் காமிராவை வைத்து நாளைத் துவக்கினார் பிக் பாஸ். கனமழை ஆபத்து சென்னைக்கு விலகியது என்பதைச் சொல்ல விரும்பினாரா அல்லது ஏதாவது அரசியல் குறியீடா என்று தெரியவில்லை. ‘போட்டுத் தாக்கு’ என்று காதுகளை அதிரடியாகத் தாக்கும் வகையில் அலறிய வேக்அப் பாடலுக்கு மக்கள் வெறிகொண்டு இறங்கி குத்தி ஆடினார்கள்.

‘இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசிக்கு ’ நிகரான ஐடியாக்களை யோசித்து டாஸ்க்காக பெண்களுக்குத் தருகிறார் ரஞ்சித். கூடவே டி.ஆர் மாதிரி ‘ஜிம்க்கு ஜிக்கு... ஹாங்.. ‘ஜிம்க்கு ஜிக்கு..’ என்று வாயாலே மியூசிக்கும் போடுகிறார். தோசை மாவு இருக்கும் பாத்திரத்தை யாராவது ஒருவரின் தலையில் வைத்து அதிலிருந்து எடுத்துதான் சமைக்க வேண்டும் என்பது ரஞ்சித்தின் விநோதமான டாஸ்க். தலையால் சுமக்கும் பணியை அன்ஷிதா ஏற்றுக் கொண்டார். பெண்களின் விரோதத்தைச் சம்பாதிக்க விரும்பாமல், வாயால் மியூசிக் போட்டு ரஞ்சித் அவர்களை குஷிப்படுத்த, சுனிதா அந்த இசைக்கு நடனம் ஆட... கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

சுனிதா - ரஞ்சித்

பிபி அவார்டு ஷோவின் வில்லங்க விருதுகள்

BB அவார்ட்ஸ் என்பதெல்லாம், கோள் மூட்டி விடுவதற்காக பிக் பாஸ் பயன்படுத்தும் முக்கியமான ஆயுதங்களில் ஒன்று. இந்த சீசனில் ஆரம்பத்திலேயே அந்த முக்கியமானஆயுதத்தை பிக் பாஸ் கையில் எடுக்கிறார் என்றால் எத்தனை நெருக்கடியில் அவர் இருக்க வேண்டும்?!

அன்ஷிதா

ஐந்து பிரிவுகளில் அவார்டு இருக்கும். ஆண்களும் பெண்களும் பரஸ்பரம் இந்த விருதைத் தர வேண்டும். பெற்றுக் கொள்பவர் தன்னுடைய கருத்தைச் சொல்ல வேண்டும். தீபக்கும் தர்ஷாவும் தற்காலிகமாக அவரவர்களின் அணிக்குச் சென்று விடலாம். ‘யாருக்கு தரலாம்’ என்கிற ஆலோசனை இரு அணியிலும் பரபரப்பாக நடந்தது. ‘சொம்பு தூக்கி’ என்கிற விருதை அன்ஷிதாவிற்கு தரலாம் என்று முன்மொழிந்தார் அர்னவ். இது பிறகு சர்ச்சையாக மாறியது. அதைப் பற்றி பிறகு விரிவாக பார்ப்போம்.

வில்லங்கமான அந்த விருது விழா ஆரம்பித்தது. முதலில் ஆண்கள் அணி ஆரம்பித்தது. ரிவர்ஸில் நடந்து வந்த ரஞ்சித், ‘ஆடியன்ஸாக உட்கார்ந்து பார்க்கிறார்’ என்கிற விருதை பவித்ராவிற்கு தந்தார். முகம் மாறினாலும் ‘தப்பான ஆளை தேர்ந்தெடுத்திருக்கீங்க. எனக்கு செட் ஆகாது” என்று வலுக்கட்டாயமான புன்னகையுடன் சொல்லி வாங்கிச் சென்றார், பவித்ரா.

தர்ஷா குப்தா

‘டிராமா க்வீன்’ - இந்த விருது பெண்களில் யாருக்கு? பார்வையாளர்களுக்கே அது நன்றாகத் தெரிந்திருக்கும் போது கூடவே இருந்து அவஸ்தைப்படும் ஆண்களுக்குத் தெரியாதா, என்ன? யெஸ்.. பெரும்பாலான சமயங்களில் கண்ணைக் கசக்கி இம்சையைக் கூட்டும் தர்ஷாவிற்குத்தான் அது வழங்கப்பட்டது.

அர்னவ் தந்த விருதால் வருத்தப்பட்ட அன்ஷிதா

‘சொம்பு தூக்கி’ என்கிற விருது அன்ஷிதாவிற்கு அறிவிக்கப்பட்ட போது அவருடைய முகம் மாறியது. என்றாலும் சமாளித்துக் கொண்டு ‘இதை அர்னவ்வின் கையினால் வாங்குவதை பெருமையாக நினைக்கிறேன். ஏன்னா, மத்தவங்களை விட அவனுக்குத்தான் என்னைப் பத்தி நல்லாத் தெரியும்’ என்று சிரித்து சமாளித்துச் சென்றார்.

‘க்ரூப்புல டூப்பு’ என்கிற பட்டத்தை சவுந்தர்யாவிற்கு தீபக் வழங்கியது பொருத்தமான தேர்வு. ‘டம்மி பாவா’ என்கிற விருதிற்கான முன்னுரையை முத்து விரிவாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே ‘அது எனக்குத்தானே.. தெரியும்டா டேய்” என்கிற மாதிரி எழுந்து வந்து விட்டார் ஜாக்குலின். ஆனால் லெஃப்ட் இண்டிகேட்டர் ரைட் சைடில் வண்டியைத் திருப்பிய முத்துவின் குறும்பு ரசிக்க வைத்தது. ‘டம்மி பாவா’ விருதைப் பெருமையுடன் பெற்றுச் சென்றார் ஜாக்குலின்.

ஜெஃப்ரி

இப்போது பெண்கள் அணி பழிவாங்கும் நேரம். வயதில் இளைவர்களாக இருக்கும் சாச்சனாவிற்கும் ஜெஃப்ரிக்கும் இடையே ஒரு ‘எனிமி லேயர்’ ஓடிக் கொண்டிருக்கிறது. ‘Audience Watching’ விருதை ஜெஃப்ரிக்குத் தந்தார் சாச்சனா. ‘இதுதான் நான் வாங்கிய முதல் அவார்ட். என் டிஷர்ட்ல டிசைன் இல்லாம காலியா இருந்தது. அதுல ஒட்டிக்க யூஸ் ஆகும்’ என்று கூடுதல் உற்சாகத்துடன் ப்ளஸ் பாயிண்ட்டாக மாற்றிப் பேசிய ஜெஃப்ரியை ஆண்கள் அணி கைத்தட்டிப் பாராட்டியது. ‘டிராமா கிங்’ என்கிற விருது தீபக்கிற்கு தரப்பட்டது. `சொம்பு தூக்கி' என்கிற பெருமை அருணிற்கு வழங்கப்பட்டது. `டம்மி பாவா' பட்டத்தை முத்துவிற்கு தர்ஷா வழங்கினார். “எனக்கு இது தரப்படலைன்னாதான் நான் பதட்டமாகியிருப்பேன். நான் வேகமா முன்னேறது அவங்களைப் பயப்பட வைக்குது’ என்று நீட்டி முழக்கி முத்து பேச “அப்படிப் போடு..” என்று ஆண்கள் அணி அவருடைய பேச்சுத் திறமையை வியந்து கைத்தட்டியது.

‘சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு?’

பொதுவாக இந்த விருது விழாவில் கண்ணீர், ஆத்திரம், சண்டை போன்ற விஷயங்கள் தவறாமல் நடக்கும். அந்த அளவிற்கு அவமானப்படும்படியான வாசகங்களை எழுதி ஏடாகூடமாக கோள் மூட்டியிருப்பார் பிக் பாஸ். சீசன்களைத் தொடர்ந்து பார்க்கிற போட்டியாளர்கள் எதற்கும் தயாராகி விட்டார்கள் போலிருக்கிறது. எனவே இந்த விருது விழாவில் கண்ணீரோ, கோபமோ இல்லை. எல்லோருமே வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் சிரித்து சமாளித்தார்கள்.

எனவே இந்த விருது சம்பவம் சர்ச்சையில்லாமல் நடந்து முடிந்தது என்று முடிப்பதற்குள்ளாகவே அன்ஷிதாவால் அதை மாற்ற வேண்டியிருக்கிறது. மேடையில் செயற்கையான சிரிப்புடன் விருதை பெற்றுக் கொண்டாலும் அன்ஷிதா அதனால் மனம் புண்பட்டிருக்கிறார் என்பதை அவரது அழுகையின் மூலம் தெரிந்தது. ‘சொம்பு தூக்கி’ என்கிற பட்டம் கூட அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லையாம். அந்த விருதை ‘அர்னவ்’ தந்ததுதான் அவருக்கு பெரிய வருத்தமாம்.

‘நான் யாருக்கும் சொம்பு தூக்கியதில்ல. ஒரு பிரெண்டா அர்னவ்விற்கு இது நல்லாத் தெரியும். தெரிஞ்சிருந்தும் அவன் கையால தந்திருக்க வேண்டாம். அதாம்ப்பா எனக்கு வருத்தம்” என்பதுதான் அன்ஷிதாவின் ஃபீலிங்.

‘ஏம்ப்பா.. அர்னவ்.. ஏன் அப்படிச் செஞ்சே.. பாரு.. எப்படி ஃபீல் பண்றா.. நீ இதை அவாய்ட் பண்ணியிருக்கலாம்ல?” என்று அன்ஷிதாவிற்கு ஆதரவாக சுனிதாவும் ஜாக்குலினும் வந்தார்கள். அன்ஷிதாவும் வருத்தம் கலந்த அழுகையுடன் அர்னவ்விடம் இதைப் பற்றி விவாதித்தார்.

பெரும்பாலும் ஜென் மோடில் இருக்கும் அர்னவ், இந்த விஷயத்தை ஹாணடில் செய்த விதம் அத்தனை கூலாக இருந்தது. ‘என்ன பண்ண முடியும்.. இது பேசி முடிவு பண்ண விஷயம். இதுவொரு கேம். பிரெண்ட்ஷிப் வேற. கேம் வேற.. அன்ஷிதா வெளில யாருக்கும் சொம்பு தூக்கியதில்லை. அது எனக்கு நல்லாத் தெரியும். ஆனா வீட்டுக்குள்ள அவ அப்படிப் பண்ற மாதிரி ஃபீல் ஆகுது” என்றெல்லாம் அர்னவ் நிதானமாக விளக்கம் சொன்னாலும் பெண்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக அன்ஷிதாவிற்காக ஓவர் சப்போர்ட் செய்தார் சுனிதா. ‘சொம்பு தூக்கி’ விருதை இவருக்குத் தந்திருக்காலாமோ என்கிற அளவிற்கு சுனிதாவின் ஆதரவு இருந்தது.

பிக் பாஸ் வீடு

‘நான்தான் இந்த விருதிற்கான பெயரை முன்மொழிந்தேன்’ என்கிற தகவலை அர்னவ் அப்படியே மூடி மறைத்து விடுவாரோ என்று பார்த்தால்.. இல்லை. எப்படியும் பஞ்சாயத்து நாளில் வெளியாகி விடும் என்று நினைத்தாரோ, என்னமோ ‘நானும்தான் அன்ஷிதா பெயரைச் சொன்னேன்’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார்.

ஆனால் என்னதான் அர்னவ் கூலாக இருந்தாலும் அது திட்மிட்ட நடிப்போ என்று தோன்றுகிறது. முதல் வாரத்தில் அன்ஷிதாவின் பெயரை நாமினேட் செய்தவர் அர்னவ்தான். இப்போது ‘சொம்பு தூக்கி’ விருதை அன்ஷிதாவிற்கு முன்மொழிந்தவரும் அர்னவ்தான். ‘எனக்கும் அன்ஷிதாவிற்கும் பெரிய சம்பந்தமில்லை’ என்பதை உலகத்திற்கு காட்டத்தான் இத்தனை நடிப்பா கோப்பால்,?” என்று கேட்கத் தோன்றுகிறது.

ஆண்கள் அணியின் வெற்றியைக் கெடுத்து சொதப்பிய தர்ஷா

‘நாமினேஷன் ஃப்ரீ பாஸிற்கான’ கடைசி சுற்று ஆட்டத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். பொருட்களின் பெயர்களை முதலில் பார்த்துக் கொண்டு பிறகு அவற்றைப் பார்த்த வரிசையில் நினைவுப்படுத்திக் கொண்டு அடுக்க வேண்டும். ஒவ்வொரு அணியில் இருந்தும் மூன்று நபர்கள் செல்லலாம். பெண்கள் அணியில் இருந்து முதலில் சென்ற தர்ஷிகா, பெயர்களை வரிசையாக வாசித்து அவற்றிற்கு ஒரு இணைப்புகளை ஏற்றிக் கொண்டது புத்திசாலித்தனம்.

‘அங்கயும் சேத்துக்க மாட்றாங்க. இங்கயும் சேத்துக்க மாட்றாங்க’ என்று அனத்தும் தர்ஷா “இதுக்காவது போட்டுமா?” என்று கேட்க, ஆண்கள் அனுமதித்தார்கள். ஆனால் முதல் பொருளையே தவறாக வைத்து தடுமாறி சொதப்பினார் தர்ஷா. ‘போச்சு.. செத்தேன். கலாய்ச்சே சாகடிக்கப் போறாங்க’ என்று பிறகு புலம்பினார். தனக்கு எந்த ஆட்டம் சரியாக வருமோ அதற்கு வாதாடி செல்வதுதான் நல்லது.

மற்றவர்களும் இந்த ஆட்டத்தில் சொதப்ப, முத்து மட்டும் பதினைந்து பொருட்களையும் சரியாக வைத்து அசத்தினார். அனைவரும் படபடப்பாக அமர்ந்திருக்க முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஒரேயொரு மதிப்பெண் வித்தியாசத்தில் பெண்கள் அணி வெற்றி பெற்றது. அவர்களுக்கே நாமினேஷன் ஃப்ரீ பாஸ். பாவம் முத்துவின் உழைப்பு வீண். தர்ஷா அல்லாமல், நினைவுத்திறன் அதிகமாக உள்ள வேறு எவராவது சென்றிருந்தால் ஆண்கள் அணி வெற்றி பெற்றிருக்கும்.

முத்துக்குமரன் - ரஞ்சித் - அர்னவ்

‘யாரைக் காப்பாத்தப் போறீங்க.. சொல்லுங்க?” என்று பெண்கள் அணியிடம் கேட்டார் பிக் பாஸ். “என்னை ஏற்கெனவே கட்டம் கட்டியிருப்பாங்க. ஒருமுறை காப்பாத்தி விடுங்க கேர்ல்ஸ்…” என்று ஆரம்பத்திலேயே உருக்கமான வேண்டுகோளை வைத்தார் ஜாக்குலின். ‘இது உங்களின் உழைப்பு. நான் ஆண்கள் அணியில்தான் இருந்தேன். எனவே எனக்குத் தேவையில்லை’ என்று நேர்மையாகச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார் தர்ஷா. சவுந்தர்யாவும் சாச்சனாவும் ‘எப்படியும் எங்களுக்குத் தர மாட்டீங்க. தெரியும்’ என்கிற மாதிரியே சம்பிரதாயத்திற்கு வேண்டுகோள் வைத்தார்கள்.

நாமினேஷனில் இல்லாத மற்ற பெண்கள் கூடி கலந்து பேசி இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டு ஜாக்குலினை காப்பாற்ற முடிவு செய்தது நல்ல விஷயம். பெண்கள் அணியில் சற்றாவது ஆக்டிவ்வாக இருப்பது ஜாக்குலின்தான்.

அழுகையைத் தொடர்ந்த பெண்கள் அணி

அன்ஷிதாவைத் தொடர்ந்து அடுத்த அழுகையை ஆரம்பித்தது சாச்சனா. நாமினேஷனில் அவர் காப்பாற்றப்படாததால் வருத்தம் போலிருக்கிறது. ‘நான் ஒரு த்ரோபால் பிளேயர். பந்து எறியற ஆட்டத்திற்கு என்னை அனுப்பியிருக்கலாம்.’ என்று அவர் கண்ணைக் கசக்க “முன்னமே சொல்லியிருக்க வேண்டியதுதானே..சரி. விடு.. இன்னமும் எத்தனையோ ஆட்டம் இருக்கு’ என்று இதர பெண்கள் அவரைச் சமாதானப்படுத்தினார்கள். ‘நீ என்னைப் பார்த்து சிரிச்சே.. எனக்கு ஹர்ட் ஆகுது’ என்று இன்னொரு பக்கம் தர்ஷாவும் ஒரு அழுகையைப் போட்டார். (முடியல!). ‘ஸாரிடா.. எல்லாத்துக்கும் கோச்சிக்கிட்டா எப்படி?,” என்று ஜாக்குலின் சமாதானப்படுத்தினார்.

‘இந்த வாரம் முழுவதும் சிறப்பாக பங்கேற்றவரை ஒவ்வொரு அணியிலிருந்தும் தேர்ந்தெடுக்க வேண்டும். எலிமினேஷன் அபாயக் கட்டத்தில் இருந்த ரஞ்சித்தை, இன்னமும் சில வாரங்களுக்காவது அசைக்க முடியாது போலிருக்கிறது. அந்த அளவிற்கு அவருடைய ‘ஜிம்க்கு ஜிக்கு... ஹாங்.. ‘ஜிம்க்கு ஜிக்கு..’ மியூசிக் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களின் ஆதரவும் ரஞ்சித்திற்கு கூடியிருக்கிறது. ‘எங்களை விடவும் யூத்தா செயல்படறார்’ என்று ஆண்கள் அணியே அவரைப் பாராட்டுகிறது. ஆக.. இந்த வாரத்தின் best performer ரஞ்சித்.

சவுந்தர்யா - ஜெஃப்ரி

பெண்கள் அணியில் மெஜாரிட்டியான வாக்குகளைப் பெற்று best performer ஆக தேர்வானார் தர்ஷிகா. ஒரு சிறந்த லீடராக இருக்கிறாராம். ஆக ரஞ்சித்தும் தர்ஷிகாவும் அடுத்த வார தலைவர் போட்டிக்குத் தகுதியாகியிருக்கிறார்கள்.

அடுத்தது வில்லங்கமான தேர்வு. Worst performer. விளக்கெண்ணெய் குடித்தது போல் மக்கள் சங்கடப்பட்டு முகத்தை வைத்துக் கொண்டார்கள். ஆண்கள் சைடில் சந்தேகமே இல்லாமல் அர்னவ்வின் பெயர் மெஜாரிட்டியாக வந்தது. பிக் பாஸ் காமிரா டீம் சும்மா இருக்குமா? சரியாக அன்ஷிதாவிற்கு க்ளோசப் வைத்தார்கள். அவருடைய முகத்தில் மெலிதாக கண்ணீர் தெரிந்தது. பெண்கள் அணியின் Worst performer? சந்தேகமே இல்லாமல் சாச்சனாவின் பெயரை பலரும் சொன்னார்கள். சவுந்தர்யா ஜஸ்ட் எஸ்கேப். பாவம், சாச்சனாவின் முகம் சோகத்தில் ஆழ்ந்தது. ரீஎன்ட்ரியின் போது அவர் காட்டிய ஓவர் உற்சாகம் அவருக்கே வினையாக வந்து சேர்ந்தது.

வெற்றி பெற்றவனின் வியர்வைக்கு நிகரானது, தோல்வியடைந்தவனின் கண்ணீர்

அடுத்த அழுகைக்கான அஸ்திவாரத்தைப் போட்டவர் பவித்ரா. ‘பெஸ்ட் பெர்ஃபார்மர்’ல என்னைச் சொல்லணும்னு உங்களுக்குத் தோணல பார்த்தீங்களா?’ என்று அவர் கண்ணீர் சிந்தியபடி சொல்ல “ஆமாம்.. நீ கேப்டன் டாஸ்க்ல நல்லாப் பண்ணல்ல... தோணவேயில்ல பாரேன்” என்று ஆனந்தி சமாதானப்படுத்தினார். `ஆமால்ல’ என்று தர்ஷிகாவும் ஆமோதித்தார்.

ஜெஃப்ரியுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்த சவுந்தர்யா, நிராகரிப்பின் வேதனையோடு பேசிய வார்த்தைகளில் உண்மையான வலி தெரிந்தது. வெற்றி பெற்றவனின் வியர்வைக்கு நிகரானது. தோல்வியடைந்தவனின் கண்ணீர். ‘இவங்கள்லாம் ஒரு பெயரை சொல்லிச் சொல்லியே ஸ்டாம்ப் பண்ணிடுவாங்க. மத்தவங்களும் அதையே சொல்லுவாங்க. சுயபுத்தியே இருக்காது. நமக்கோ வாய் பேச வராது. டாஸ்க்ல வாய்ப்பு கொடுத்தாதானே ஆட முடியும்.. பிச்சையா எடுக்க முடியும்?” என்றெல்லாம் அனத்தினார் சவுந்தர்யா. ஆனால் சந்தர்ப்பத்திற்காக சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம்.

தர்ஷா குப்தா - ஜெஃப்ரி

மோசமான பங்களிப்பாளர்களாக தேர்வான அர்னவ் மற்றும் சாச்சனாவின் கைகளில் கயிறு போட்டு பிணைக்கப்பட்டது. அறிவிப்பு வரும் வரை அவர்கள் கயிற்றுடன் இருக்க வேண்டுமாம். (இதே தண்டனையை அன்ஷிதாவுடன் தந்திருந்தால் அர்னவ் ஹாப்பி ஆகியிருப்பாரா?!). ஆனால் தூங்கும் போது கூட கயிற்றை கழற்றக்கூடாது என்கிற விதியெல்லாம் ஓவர் பிக் பாஸ்.

‘நானும் இந்த கேமை கேமா பார்த்திருக்கணும்.. நட்பையெல்லாம் பார்த்திருக்கக்கூடாது’ என்று பவித்ரா இன்னமும் அழுகையைத் தொடர “என்னடி.. இவ இப்படிச் சொல்றா?” என்று தர்ஷிகா அதிர்ச்சியாக, ‘சரி.. விடு.. இப்ப அவ அப்செட்ல இருக்கா. அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று சரியாக ஆலோசனை சொன்னார் ஆனந்தி.

இன்று பஞ்சாயத்து நாள். ஏதாவது குறும்படம் இருந்தா, நீங்க மட்டுமே தனியாப் பார்க்காம, எங்களுக்கும் காட்டி எதையாவது பரபரப்பா செஞ்சு விடுங்க விஜய் சேதுபதி.

இந்த வாரத்தில் வெளியேறுவதற்கு தகுதியான போட்டியாளர் யார் என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.

Kayal Serial: கல்யாணமே முடிஞ்சாச்சு… கயல் சீரியல் முடிவுக்கு வருகிறதா? - `ட்விஸ்ட்’ வைக்கும் சைத்ரா

கயல் சீரியலில் நாயகி கயலுக்கும் நாயகன் எழிலுக்கும் ஒருவழியாகத் திருமணம் முடிந்துவிட்டது. சுமார் ஒரு மாத காலமாக கயல் சீரியலில் இந்த திருமணம் தொடர்பான காட்சிகள் தான் ஒளிபரப்பட்டது.சீரியல் இந்த கட்டத்திற... மேலும் பார்க்க

Serial Update: எதிர்நீச்சல் 2 - `இவருக்கு பதில் இவர்’ டு சன் தொடரில் இவர்களா?

`இவருக்கு பதில் இவர்’எதிர்நீச்சல் 2சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் `எதிர்நீச்சல்'. இந்தத் தொடருக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தத் தொடர் சில காரண... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: காதல் தோல்வி, கன்வின்ஸ் செய்த அர்னவ், மன அழுத்தம் - அன்ஷிதா குறித்து நண்பர்கள்

பிக் பாஸ் சீசன் 8-ல் மெதுவாக சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. மந்தமாகச் சென்றுகொண்டிருந்த எபிசோட்கள் மெல்ல கார சார உரையாடல், டாஸ்க் என நுழைந்திருக்கிறது.பிக்பாஸ் வீடுவிஜய் டிவியில் அக்டோபர் 6-ம் த... மேலும் பார்க்க

BB Tamil 8 Promo: `நீ செஞ்சிருக்கக் கூடாது' வில்லங்க பட்டம்; கலங்கி அழும் அன்ஷிதா

12-வது நாளான இன்றைய எபிசோடில் பல எதிர்பார்ப்புகளுக்கு பதில்கள் கிடைக்கும்.வீக்கெண்டுக்கு எபிசோடுக்கு முன்பாகவே... அதாவது விஜய் சேதுபதியின் எபிசோட் ஒளிபரப்பாகுவதற்கு முந்தைய நாள் அந்த வாரத்தில் நடந்த ட... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 11: `அழுகை; அழுகை; அழுகையோ அழுகை' - தர்ஷாவின் புலம்பல்; அன்ஷிதா நடித்த காதல் காட்சி

மன உளைச்சல் நேரும் சமயங்களில், பொதுவாக ஆண்களின் வெளிப்பாடு கோபமாக இருக்கும் என்றால், பெண்களின் எக்ஸ்பிரஷன் கண்ணீர் வழியாகத்தான் வெளிப்படும். எத்தனையோ நூற்றாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களின் ... மேலும் பார்க்க

Siragadikka aasai & Kayal: மீனாவால் தூக்கமின்றி தவிக்கும் விஜயா| கயல் திருமணத்தை நிறுத்திய தீபிகா

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் (அக்டோபர் 17) ரோகிணி போட்ட பிளானில் விஜயாமண் அள்ளி போட்டுவிட்டார். போதாக்குறைக்கு மனோஜின் கடையில் ரவுடிகள் புகுந்து பொருள்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.ரோகிணி மு... மேலும் பார்க்க