மகாராஷ்டிர தேர்தல்: 6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!
BB TAMIL 8: DAY 37: தீபக்கின் எரிச்சல்; வருந்திய சிவக்குமார்; ஒதுக்கப்படுகிறாரா ராணவ்?
போட்டியாளர்கள் ‘பள்ளிப் பிள்ளைகளாக’ மாறும் வீக்லி டாஸ்க் துவங்கியது. எனவே இந்த எபிசோட் சற்று கலகலப்பாக சென்றது. ஆனால் அதிக அளவில் சுவாரசியமில்லை. ஏனெனில் அவர்கள் மனதளவில் பள்ளிப் பிள்ளைகளாக மாறவில்லை. சுமாரான போட்டியாளர் என்று கருதப்பட்ட வர்ஷனி ‘பிரின்சிபல்’ பாத்திரத்தை சிறப்பாக கையாண்டது குறிப்பிடத்தக்கது.
வீட்டுப் பணி டாஸ்க்கிற்கு மூன்று நபர்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டும். வழக்கம் போல் ஆண்கள், ‘ஓகேடா மச்சான்’ என்று நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் தேர்வு செய்து விட்டார்கள். அதே வழக்கம் போல் பெண்கள் அணியில் இழுபறியும் தள்ளுமுள்ளுவும் நடந்தது. ‘எனக்கு இந்த கேம் தெரியும்’ என்று ரயானும் மஞ்சரியும் சொன்னார்கள்.
‘ஒருத்தர் கேம் நல்லா ஆடறாங்கன்னா.. அவங்களையே தொடர்ந்து அனுப்ப முடியுமா.. தெரியாதவங்களையும் அனுப்பினாதானே.. அவங்க திறமை வெளியே வரும். கத்துக்க முடியும்?’ என்பது போல் பெண்கள் நடுவில் வாக்குவாதம். இந்த விஷயத்தில் ஜாக்கிற்கும் சவுண்டிற்கும் இடையில் மோதல். ரியாவிற்கு சவுண்டு ஆதரவு. ஆனால் ஆட தேர்ந்தெடுக்கப்பட்டது பவித்ரா. “மாத்தி மாத்திப் பேசறா” என்று ஜாக் சொல்ல “முத ரெண்டு வாரம் இப்படித்தான் என்னையும் பண்ணாங்க” என்று சவுண்டு புலம்பினார்.
ஆட்டம் ஆரம்பித்தது. ‘எனக்கு கேம் தெரியும்’ என்று சொன்ன ரயானும் மஞ்சரியும் அதை உண்மை என நிரூபித்தார்கள். அவர்கள் திறமையாக ஆடிக் கொண்டிருக்க, பவித்ரா தடுமாறினார். ரயான் சொல்லித் தந்தாலும் ‘கத்திட்டே இருந்தா எனக்கு ஆட வராது’ என்று ஆட்சேபித்தார். எதிர் பக்க ஆண்கள் அணியில் விஷாலும் ஜெப்ரியும் நன்றாக ஆட சிவக்குமார் தடுமாறினார். ஆட்டோ ஸ்டியரிங் மாதிரி அவர் இஷ்டத்திற்கு ஆட்ட பந்து பாயிண்ட்டில் விழாதது மட்டுமன்றி கஷ்டப்பட்டு போட்ட பந்தும் கீழே விழுந்தது.
வெறும் மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் பெண்கள் அணி முதன்முறையாக ‘வீட்டுப்பணி டாஸ்க்கில்’ வென்றது. சரியாக ஆடாத சிவக்குமாரை ‘வெடிகுண்டு’ தீபக் கோபித்துக் கொண்டார். “அவங்க ரெண்டு பேரும் எப்படி ஆடினாங்க.. இப்பப் பாருங்க.. நாமதான் கழுவணும்.. பெருக்கணும்..’ என்பது தீபக்கின் சலிப்பு.
தீபக் முகத்தைக் காட்டியதால் மனம் புண்பட்ட சிவா, தன்னிச்சையாக கண்ணீர் விட “என்னன்னு சொல்லுங்க.. என் கிட்ட சொல்ல மாட்டீங்களா?’ என்று கேட்டு இன்னமும் அனத்த வைத்தார் ரஞ்சித். “நான் போட்ட பாயிண்ட்டை எல்லாம் கவனிக்கலை. கடைசில போடாதத மட்டும் வெச்சி திட்டினா என்ன அர்த்தம்.. இவரு கூடத்தான் பாட்டில் டாஸ்க்ல சரியா ஆடலை. யாராவது கேட்டாங்களா? எனக்கும் கத்தத் தெரியும்.. ஆனா..” என்று சொடக்குப் போட்டு சொன்ன சிவாவை சமாதானப்படுத்தினார் ரஞ்சித். எனில் ஆண்கள் அணியிலும் ஒரு பயங்கர சண்டை காத்திருக்கிறது.
‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்’ என்கிற வடிவேலுவின் தத்துவம் எப்போதும் சாஸ்வதமானது. ஒருவேளை தீபக் சென்றிருந்து அவரும் கூட இப்படிச் சொதப்பியிருக்கலாம். சீனியர் என்கிற பந்தாவை தீபக் காண்பித்தது தவறான விஷயம். இத்தனை வாரங்களாக பெண்கள் செய்த வீட்டுப் பணியை, சவாலாக எடுத்துக் கொண்டு ஆண்களும் செய்யலாம். “நாம அதிக பாயிண்ட்டு எடுத்தும் தோக்கறா மாதிரி ஆயிடுச்சு” என்று பிறகு புலம்பினார் முத்து.
இந்த வாரத்திற்கான டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். BB Residential School. இதைக் கேட்டதும் மக்கள் உற்சாகமானார்கள். சவுந்தர்யாவின் வாய் ‘O’ என்பதாக மாறியது. டாஸ்க் விதிகள், கேரக்டர்கள், டிசைன் போன்றவை வாசிக்கப்பட்டன.
‘ஒரு காலத்தில் ஓஹோவென்றிருந்த ஸ்கூல், நிறுவனரின் மறைவிற்குப் பிறகு சரியான தலைமை இல்லாம வழிதவறிப் போயிடுச்சு” என்று முதல் பாயிண்ட்டை வாசிக்க ஆரம்பித்தார் முத்து. (இந்த டிசைன் பிக் பாஸ் சீசனுக்கும் அப்படியே பொருந்துதுல?!).
இவர் மறைந்த நிர்வாகியின் மகள். விவாகரத்து பெற்றவர். Iron Lady. மாணவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம் என்று சொல்பவர். இவர் எடுக்கும் முடிவே இறுதியானது. மிக முக்கியமான இந்தப் பாத்திரத்தை வர்ஷினிக்கு தந்து ஆச்சரியப்படுத்தினார் பிக் பாஸ். இப்படியாவது அவர் தன் திறமையைக் காட்டட்டும் என்கிற வாய்ப்பு போல. இதை வர்ஷினி நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். தன் கேரக்டரில் இருந்து வெளியே வரவில்லை.
அடுத்த பாத்திரம் சுவாரசியமானது. Vice Principal. பிரின்சிபல் லேடி விவாகரத்து செய்து வெளியே துரத்திய பரிதாப ஆசாமி இவர்தான். பிரிவு ஏக்கத்தில் இருக்கிறாராம். எப்படியாவது தன் மணவுறவு மீண்டும் மலராதா என்று பிரின்சிபல் பின்னாடியே சுற்றுபவராம். இந்தக் காரெக்டர் அருணுக்கு. (பாவம், புது மாப்பிள்ளைக்கு இப்படியொரு ரோல்!).
பாரின் ரிட்டர்ன் மற்றும் மாரல் கிளாஸ் டீச்சராக ஜாக்குலின். பூமரும் கூட. Probation-ல் வந்திருக்கும் தமிழாசிரியை மஞ்சரி. லவ் பெயிலர் சூப் பாயாக பி.டி டீச்சர். மக்கள் கேட்டுக் கொண்டபடி இந்தக் கேரக்டரில் ஜெப்ரியை நியமித்தார் பிக் பாஸ். ஃபுரொபெஷனலாக வேலை செய்யும் வாட்ச்மேனாக சிவக்குமார். மற்ற அனைவரும் மாணவர்கள். ஜெப்ரி, ஹாஸ்டல் வார்டனாகவும் இருப்பார்.
24 மணி நேரமும் தொடரும் இந்த டாஸ்க்கில், பள்ளி நிர்வாகத்தில் உள்ளவர்கள்தான் சமைக்க வேண்டும். மாணவர்களின் கேரக்டர் டிசைன்கள் அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் கிடைத்தாலும் பெரும்பாலும் பொருத்தமாவே இருந்தது. முதலில் பாய்ந்து சீட்டு எடுத்த ராணவ்விற்கு ‘விதிகளைப் பின்பற்றாத, லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட். கொஞ்சம் மக்கு’ என்று வரவும் முகம் மாறினார். ‘கலகவாதி, முன்கோபக்காரன்’ என்கிற பாத்திரம் சத்யாவிற்கு ‘படிப்பாளி’ பாத்திரம் சாச்சானாவிற்கு.
‘பணக்காரத் திமிர் கொண்ட பெண்’ பாத்திரம் பவித்ராவிற்கு. கோள் மூட்டி வம்பு பேசும் பாத்திரம் ரியாவிற்கு. ‘கள்ளக் களவாணி’ பாத்திரம் ஆனந்திக்கு. ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக இருந்து கொண்டு மற்ற மாணவர்களை போட்டுக் கொடுக்கும் கேடி ஸ்டூடண்ட்டாக முத்து (அடடா.. என்னவொரு பொருத்தம்!.. என்கிற கிண்டல் கேட்டது!), ‘பிரின்ஸிபலின் ஸ்பை’ பாத்திரம் தீபக்கிற்கு. மற்ற மாணவர்கள் அவர்களாகவே தங்களின் பாத்திரங்களை டிசைன் செய்து டாஸ்க்கை சுவாரசியப்படுத்தலாம் என்றார் பிக் பாஸ்.
யார் யாருக்கு எந்த கேரக்டர் என்று பிக் பாஸ் முடிவு செய்யாமல் போட்டியாளர்களிடம் விட்டிருந்தால் நிச்சயம் ஒரு கலவரம் நடந்திருக்கும். அதிலும் பெண்கள் அணியில் சூறாவளி ஏற்பட்டு பள்ளிக் கட்டிடமே விழுந்திருக்கும்.
“மேம்.. நீங்க ‘ராட்சசன்’ படத்துல வர கேரக்டர் மாதிரியே இருக்கீங்க’”
பள்ளி மைதானத்தில் பிரேயர் ஆரம்பித்தது. பிரின்சிபலும் உதவியும் மாணவர்களை வரவேற்க “உங்களை ஸ்கூல் பசங்களாவே நெனச்சுக்காதீங்க.. உங்களுக்கே வெளிய உண்மையாவே பசங்க இருக்காங்க… ஞாபகம் இருக்கட்டும்” என்று கேரக்டரில் இருந்து வெளியே வந்து மாணவர்களைக் கலாய்த்தார் ஜாக்குலின்.
மஞ்சரியின் கிளாஸ். Tongue Twisters என்கிற வார்த்தைகளை ‘நாக்கு முறுக்கிகள்’ என்று கரடுமுரடான தமிழில் மொழி பெயர்த்தார். அராத்து மாணவனான ராணவ் வெளியே முட்டி போட்டு அமர்ந்திருந்தார். ஜாக்குலின் என்ட்ரி தரவும் மாணவர்கள் உற்சாகமாக கத்தினார்கள். “மேம்.. நீங்க ‘ராட்சசன்’ படத்துல வர காரெக்டர் மாதிரியே இருக்கீங்க’ என்று ரயான் அடித்த கமெண்ட் ரகளையானது. ‘டேய்.. அது என்னோட ஜோக்’ என்றார் ராணவ். கள்ளக் களவாணியான ஆனந்தி, லைட்டரை திருடி விட்டதால் அது பற்றி விசாரிக்க வந்திருக்கிறார் ஜாக்குலின்.
திருவிழாவில் தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பந்தயத்தில் ஈடுபடும் ஆசாமி போல பள்ளி வளாகத்தை சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்த சத்யா, கடந்து சென்ற ஜாக்குலின் டீச்சரைப் பற்றி ‘அது கிளாஸே எடுக்க மாட்டேங்குது’ என்று மரியாதையில்லாமல் பேச “மரியாத.. மரியாத..’ என்று எச்சரித்த ஜாக், அது கிடைக்காது என்பது தெரிந்ததும் மனதை தேற்றிக் கொண்டு ஆனந்தியுடன் சமையல் கட்டுக்கு நடந்தார்.
“என்ன கிளாஸ் இது… ஏன் பசங்க இப்படி பிஹேவ் பண்றாங்க.. உங்களையெல்லாம் எதுக்குத்தான் வேலைக்கு வெச்சிருக்கேனா?” என்று பிரின்சிபல் மேடம் கோபமாக இருந்தார். “ரஞ்சித்து.. ஓவர் ஆக்ட் பண்ணாதடா” என்று ராணவ்வை கூப்பிட்டு பெயர் மாற்றி VP அருண் கண்டிக்க, மாணவர்கள் ரகளையாக சிரித்தனர். ‘நான் பாட்டுக்கு சிவனேன்னுதானே இருக்கேன்’ என்கிற மாதிரி பரிதாபமாக பார்த்தார் ரஞ்சித்.
கிச்சன் ஏரியாவில் ஆனந்திக்கு மாரல் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார் ஜாக்குலின். ‘திருடறது பிரச்னையில்ல. ஆனா அதுக்கு முன்னாடி யாராவது பார்க்கறாங்களான்னு பார்க்கணும். திருதிருன்னு முழிச்சி மாட்டிக்கக்கூடாது” என்றெல்லாம் ‘நன்றாக திருடுவது எப்படி?’ என்று பாடம் எடுத்தால் எப்படி விளங்கும்? “பவித்ராவை ராணவ்வும் சத்யாவும் ரூட் விடறாங்க.. மிஸ்.. எனக்கும் கூட VP சாரைப் பார்த்தா.. ஒரு மாதிரி கிளுகிளுப்பாவுது’ என்று ஆனந்தி சிணுங்க “கடவுளே.. உனக்கு கண்ணு தெரியாதா.. உன் நிலைமை இப்படியா ஆகணும்?,” என்று கிண்டலடித்தார் ஜாக்.
‘நாக்கு முறுக்கிகள்’ பாடத்தில் ‘ஓடுற நரியில ஒரு நரி’ என்கிற வாசகத்தை அன்ஷிதா சொல்லிக் கொண்டிருந்தார். ‘உன் கிட்ட எனக்கு பேச இஷ்டம் இல்லா’ என்று அவர் முத்துவிடம் ஏற்கெனவே போட்ட சண்டையை சோஷியல் மீடியாவில் ஒருவர் ரீமிக்ஸ் பாட்டாக உருவாக்கி வைத்திருக்கிறார். இது என்ன கதியாகப் போகிறதோ?!
சேட்டை செய்த ராணவ்வை, டீச்சர் மஞ்சரி கண்டிக்க 'மேம்.. அது என் பாடி லேங்வேஜ்’ என்று ராணவ் சொல்ல, ‘உன் பாடியும் சரியில்ல. லேங்வேஜூம் சரியில்ல’ என்று டீச்சர் கவுன்ட்டர் தர, மாணவர்கள் மத்தியில் ஒரே சிரிப்பு. “ஏன் மேடம் டென்ஷனா இருக்கீங்க. ஆனா டென்ஷனா இருக்கறப்பவும் நீங்க அழகா இருக்கீங்க மேடம்” என்று பிரின்பலிடம் தனியாக வழிந்து கொண்டிருந்தார் VP.
“ஏன் பாய்ஸூம் கேர்ல்ஸூம் தனித்தனியா உக்காந்து இருக்கீங்க.. கலந்து உக்காருங்க. இந்தப் பிரிவினைவாதம் வேண்டாம்” என்று நம்மவர் படத்தின் கமல் மாதிரி பேசினார் ஜாக்குலின். ஆனால் கேரக்டர் ஸ்கெட்ச்சின் படி ‘பூமர்’ என்று வரையறுக்கப்பட்ட ஜாக்குலின், இப்படி முற்போக்காக செயல்படுவது முரண். பிரின்சிபல் மேடம் அடிக்கடி கிளாஸிற்குள் நுழைவதை ஜாக்குலின் விரும்பவில்லை. “இது என்னோட கிளாஸ். எடுக்க விடுங்க” என்று மல்லுக்கட்டினார். பாய்ஸூம் கோ்ல்ஸூம் சேர்ந்து அமர்வதை பிரின்சிபல் விரும்பவில்லை.
“Sல ஆரம்பிச்சு A-ல முடியற ஒரு ஆளு மேல எனக்கு கிரஷ்’ என்பது போல் ரியா தன்னைப் பற்றிய வதந்தியை தானே சொல்ல “யாரு சாச்சனாவா?” என்று யாரோ கமெண்ட் செய்ய வகுப்பறை சிரிப்பில் அதிர்ந்தது. லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்டாக ஓவர் அலப்பறை செய்த ராணவ்வை, பிரின்சிபல் ரூமிற்கு அழைத்து அட்வைஸ் செய்தார் அருண். அது மாணவனுக்கு ஆசிரியர் சொல்லும் உபதேசமாக அல்லாமல், கேப்டனாக போட்டியாளருக்கு சொன்ன அட்வைஸ் போல இருந்தது. “டீமோட சேர்ந்து இரு. தனியா நின்னு ஓவர் ஆக்ட் பண்றாத. உன்னையே Fun content-ஆ ஆக்கிடுவாங்க” என்றெல்லாம் அருண் சொல்ல ராணவ் தலையாட்டினார்.
கிச்சன் ஏரியாவில் மஞ்சரிக்கும் அருணிற்கும் விவாதம். “ரொம்ப bossy-ஆ இருக்காதீங்க.. என்ன சொல்றேன்னு காது கொடுத்து கேளுங்க” என்று மஞ்சரி எரிச்சல் பட, “நான் என்னை மூக்கைக் கொடுத்தா கேட்கறேன்?” என்று கிரேசி மோகனுக்கே சவால் விடுவது போல காமெடி கவுன்ட்டர் தந்தார் அருண். “ஓகே.. அப்ப சமையலை நாமளே மேனேஜ் பண்ணிக்கலாமா?” என்று பிறகு அவரே சமாதானம் அடைந்தார். “ஸ்கூல் நிர்வாகத்தில் உள்ளவர்கள் மட்டுமே சமைக்க வேண்டும். மாணவர்கள் வரக்கூடாது” என்று பிறகு பிக் பாஸ் தெளிவுப்படுத்தி விட்டார்.
‘கச்சா முச்சான்னு பண்ணாம.. ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க கேரக்டர்ல சுவாரசியமா பண்ணுவோம். அப்பத்தான் பார்க்க நல்லாயிருக்கும்” என்று முத்து சொன்னது சரியான பாயிண்ட். ராணவ் ஓவர் ஆக்ட் செய்தது பெரும்பாலோனோர்க்கு பிடிக்கவில்லை. எனவே அதைத் தொடர்ந்து சொல்லிக் காட்ட, அன்ஷிதாவிற்கும் ராணவ்விற்கும் இடையே மோதல். வழக்கம் போல் ரீப்பீட் மோடில் அன்ஷிதா கத்த “சொன்னதையே சொல்லாதீங்க” என்று பதிலுக்கு ராணவ்வும் கோபப்பட்டார். “இவனுக்கு explain பண்ணி.. அது இவனுக்குப் புரியறதுக்குள்ள ஷோவே முடிஞ்சுடும் போலயே” என்று சவுந்தர்யாவும் ராணவ் மீது எரிச்சல் பட்டார். (இதே மாதிரிதான் சவுந்தர்யாவும் இருந்தார் என்பதை மறந்து விட்டார் போல!).
“நான் சரியாப் பண்ணலைன்றதை மறுபடியும் சொல்லிச் சொல்லி ஸ்டாம்ப் பண்றாங்க.. அதை நான்தான் உடைக்க முடியும்” என்று அருணிடம் ராணவ் சொன்ன விளக்கம் சரியானது. “நீங்க தனியாடுவீங்க.. டீமோட விளையாடுங்க. எதுவா இருந்தாலும் நான் உங்க கூட இருக்கேன்” என்று அவரைச் சமாதானப்படுத்தினார் அருண். ராணவ் சுமாரான போட்டியாளர் என்பதால் இரண்டு அணிகளும் அவரை பயங்கரமாக கலாய்ப்பது மோசமான விஷயம். இதே போல் சுமாராக இருந்த சவுந்தர்யா, இப்போது ரவுடியாக ஃபார்ம் ஆகி இருப்பதால், ராணவ்விற்கு சற்று ஸ்பேஸ் தரலாம். அவராகவே முட்டி மோதி ஸ்கோர் செய்ய முயலும் போது எரிச்சல்படக்கூடாது.
பஸ்ஸர் அடித்தது. ஸ்கூல் டைம் முடிந்து ஹாஸ்டல் டைமாக டாஸ்க் தொடர்கிறது. விஷாலும் தர்ஷிகாவும் ஒருவருக்கொருவர் லவ் சிம்பல் காட்டிக் கொண்டிருந்தார்கள். “என் இதயமே அங்க இருக்கு” என்று விஷால் சொல்ல, ‘என் செருப்பு அங்க வரும்” என்று கிண்டலடித்தார் ரயான்.
நிர்வாகம் எடுத்த முடிவின் படி ‘பாய்ஸூம் கேர்ல்ஸூம் இணைந்து அமரலாம்” என்று அறிவிக்கப்பட்டது. ‘நேரம் ஆச்சு.. போய் தூங்குங்க.. செல்லங்களா” என்று VP கெஞ்சுவதோடு எபிசோட் முடிந்தது.
கடந்த சீசன்களோடு ஒப்பிடும் போது, இந்த சீசனின் ‘ஸ்கூல் டாஸ்க்’ அத்தனை சுவாரசியமாக அமையவில்லை. இத்தனை கேரக்டர் ஸ்கெட்ச் தந்தும் இதுதான் நிலைமை. அடுத்த எபிசோடில் முன்னேற்றம் தெரிகிறதா என்று பார்ப்போம்.
ஸ்கூல் டாஸ்க்கை சிறப்பாக செய்தவராக யாரை நினைக்கிறீர்கள்? கமெண்டில் வந்து சொல்லுங்க மக்களே!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...