கபூர் குடும்பத்தினருடன் மோடி; பாதிக்கப்பட்டவர்களுடன் ராகுல்! - விமரிசிக்கும் காங...
BB Tamil 8 Day 66: `நான் போகமாட்டேன்' அடம்பிடித்த அன்ஷிதா; வினையாகிப் போன முத்துவின் விளையாட்டு
இந்த சீசனில் எத்தனையோ சுமாரான எபிசோடுகளை எப்படியோ ஒப்பேற்றி எழுதியுள்ளேன். ஆனால் இந்த எபிசோடு இருக்கிறதே.. பயங்கர இழுவை. ஒரு துளி சுவாரசியம் கூட இல்லை. “பிக் பாஸ்.. நான் சுச்சா போறேன்.. எனக்காக ராணவ் சைக்கிள் ஓட்டுவாரு” என்று காமிரா முன்பாக சொல்லும் பாத்ரூம் காட்சிகளையே எத்தனை முறைதான் பார்ப்பது? அதிலும் ‘தொழிலாளர்களின் பாதுகாப்பு பீரங்கியாக’ அருண் மூச்சு விடாமல் பேசும் டயலாக் எல்லாம் ‘முடியல’ ரகம்.
பிக் பாஸ் டீம்.. உங்களுக்கு என்னதான் ஆச்சு?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 66
‘விடாது கருப்பு’ மாதிரி விஷாலும் தர்ஷிகாவும் இரவில் பேசிக் கொண்டிருந்தார்கள். “இங்க எல்லாம் கேம் ஆடறாங்க.. நம்ம மேட்டரை உண்மைன்ற மாதிரியே டீல் பண்றாங்க.. ஆனா என் கிட்ட நேரா பேச மாட்றாங்க.. எனக்கே வெறுப்பாவுது. மக்கள் சொல்ற வரைக்கும் இருப்போம்.. எழுபது நாள் இருந்தாச்சு” என்று விட்டேற்றியான மனநிலையில் விஷால் பேச “நானும் என் தப்பை உணர்ந்துட்டேன்” என்று மன்னிப்பு கேட்டார் தர்ஷிகா.
இவர்களுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை. ‘கேமில் கவனம் செலுத்துவோம். லவ்வை வெளியில் பார்த்துக் கொள்ளலாம்’ என்றால் அதற்குரிய கறாரான விலகலுடன் இவர்கள் செயல்பட வேண்டும். இரண்டு பேரும் அவ்வப்போது ஈஷிக் கொள்வார்களாம். ஆனால் மற்றவர்கள் அதை லவ் இல்லை என்று நம்ப வேண்டுமாம்.
பேசிப் பேசியே நம்மை டயர்ட் ஆக்கிய அருண்
நாள் 66. ‘ஒருவன் ஒருவன் முதலாளி. உலகில் மற்றவர் தொழிலாளி’ பாடலைப் போட்டு வீக்லி டாஸ்க்கை ‘வார்ம் -அப்’ செய்ய முயன்றார். ஆனால் எங்கே?... ‘க்கொங்ய்க்.. க்கொய்ங்க்..’ என்று அலார்ம் அடித்தது. ஸ்வாப் டைம். அணியிலிருந்து பரஸ்பரம் ஒருவரை மாற்ற வேண்டும்.
“நிர்வாகத்திலிருந்து தொழிலாளர் அணிக்குச் சென்றாலும் நிர்வாகத்தின் சாதகமாகத்தான் செயல்பட வேண்டும். அப்படியொரு நபர் யார்.. கை தூக்குங்க?” என்றார் முத்து. சவுந்தர்யா உடனே கையைத் தூக்கினார். மேனேஜ்மென்ட்டில் டை கட்டிக் கொண்டிருப்பதை விட தொழிலாளர்களுடன் இணைந்து ‘அஜால் குஜாலாக’ இருப்பதில்தான் அம்மணிக்கு ஜாலி போல. தொழிலாளர்களின் தரப்பில் ரஞ்சித்தை மேனேஜ்மென்ட் டீமிற்கு அனுப்ப தேர்வு செய்தார்கள். “யூனியனில் அதிக வருடம் மெம்பராக இருந்தவராம். தன்மையா இருப்பார். தொழிலாளர்களுக்காக பேசுவார்” என்று அருண் விளக்கம் சொன்னார். (கம்பெனி ஆரம்பிச்சே ரெண்டு நாள்தானே ஆவுது?!)
ஆனால் பிக் பாஸ் ஒப்புதல் கேட்கும் போது “தொழிலாளர் பக்கம் சவுந்தர்யா வருவதில் உடன்பாடு இல்லை” என்று யூனியன் லீடர் அன்ஷிதா எதிர்ப்பு தெரிவித்தார். “தொழிலாளர்களை அவங்க டிரீட் பண்ண விதம் பிடிக்கலை” என்று ஒத்து ஊதினார் சத்யா.
“அப்படியா.. அப்ப நாங்களும் மாட்டோம்” என்று நிர்வாக அணி ரஞ்சித்தை ஏற்க மறுத்தது. அதற்குச் சொன்ன காரணம்தான் புதுமை. “அவர் உழைப்பாளர்களுக்குத் தேவை என்பதால் அங்கேயே இருக்கட்டும்” என்று முத்து அமர்த்தலாகச் சொல்ல, பிக் பாஸ் குறுக்கிட்டார். “என்ன முத்து.. டிஸ்கஷன்ல ரஞ்சித் ஓகேன்னு பேசிட்டு இங்க வந்து மாத்தறீங்க?” என்று கட்டையைப் போட “இப்பத்தான் ரஞ்சித்தோட பெருமை தெரிஞ்சது” என்று சிரித்து சமாளித்தார் முத்து. பொதுவாக பிக் பாஸ் பேசும் போது எந்தவொரு தடுமாற்றமும் வராது. இந்த உரையாடலில் அவரே கொஞ்சம் ஜெர்க் ஆனார்.
“ஓகே.. எல்லாக் கோட்டையும் அழிங்க.. முதல்ல இருந்து டிஸ்கஸ் பண்ணிட்டு வாங்க. இந்த முறை யாரைத் தேர்ந்தெடுக்கறீங்களோ, அவங்களை மறுக்கும் அதிகாரம் எதிர் தரப்பிற்கு கிடையாது” என்று அறிவித்தார் பிக் பாஸ்.
‘என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கங்கடா’ - பவித்ரா சிணுங்கல்
விஷாலை தொழிலாளர் பக்கம் அனுப்ப நிர்வாக அணி முடிவு செய்தது. தொழிலாளர்களின் தரப்பில் ஆளாளுக்கு ஒருவரின் பெயர் சொல்ல பவித்ராவை கவனமாகத் தவிர்த்தார்கள். “அங்க நல்லா பேசணும். பவிக்கு வராது” என்று அருண் சொல்ல “ஏன் சண்டை போடணும்னே நெனக்கறீங்க?” என்று சலித்துக் கொண்டார் பவித்ரா. ‘ஏண்டா.. என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கங்கடா’ என்று சிணுங்கும் சிறுபிள்ளை போலவே அவர் எப்பவும் போராட வேண்டியிருக்கிறது.
போராளி அருண் சென்றால்தான் நிர்வாகத்திற்கு குடைச்சல் தருவார் என்று தொழிலாளர்கள் ஏகமனதாக கருதியதால் அவரையே பெரும்பான்மையாக தேர்வு செய்தார்கள். ‘அருண்தான் இங்க வருவான்’ என்று சரியாக யூகித்தார் முத்து. நினைத்தது போலவே உள்ளே வந்து நிர்வாக அணியை பேசியே சாகடித்தார் அருண். எல்லாவற்றிற்கும் வியாக்கியானம். அவர் பழிவாங்கியது நிர்வாக அணியை மட்டும் அல்ல. பார்வையாளர்களையும் சேர்த்து.
அருணை வரவேற்ற முத்து “வாங்க அருண் சார்.. இதுவரைக்கும் தொழிலாளர்களுக்கு போராடினீங்க. இனிமேல் இரண்டு பக்கமும் பாருங்க” என்று சரியான முறையில் அட்வைஸ் கொடுத்தார். “கழிப்பறை உபயோகத்தை விரைவில் முடித்துக் கொண்டு வருவது சிறந்தது” என்று நிர்வாகம் சொல்ல “ஏங்க..நாள் பூரா கஷ்டப்படற லேபர், கொஞ்ச நேரமாவது நிம்மதியா இருக்கற இடமே அதுதான். அங்கயும் ஏன் நெருக்கடி தர்றீங்க?” என்று ஆரம்பத்திலேயே கட்டையைப் போட்டார் ‘காம்ரேட்’ அருண். கழிப்பறை உபயோகம் நீடித்தால், தொழிலாளிதான் அதிக நேரம் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்கிற லாஜிக்கை அருண் மறந்து விட்டார் போலிருக்கிறது.
“தொழிலாளர்கள்தான் கஷ்டப்படறாங்கன்னு இல்ல.. நாங்களும்தான் கஷ்டப்படறோம்” என்றார் ஜாக்குலின். “அருண் கிட்ட பேசறது யூனியன் லீடர் கிட்ட பேசற மாதிரியே இருக்கு” என்று மஞ்சரி சலித்துக் கொண்டது உண்மை. இதனால் நிர்வாகத் தரப்பிற்கும் அருணிற்கும் பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக முத்துவும் அருணும் பேசிப் பேசியே தம் கட்ட “அவங்க ரெண்டு பேரையும் ஏதாவது ரூம்ல வெச்சு பூட்டுங்க. பேசிட்டு கிடக்கட்டும். காது வலிக்குது” என்று எரிச்சல்பட்டார் ஜாக்குலின்.
ஃபாக்டரி மேனேஜர் சவுந்தர்யா போட்ட குத்தாட்டம்
இப்படியாக வீட்டிற்குள் ரணகளமாக விவாதம் போய்க் கொண்டிருந்த, மேனேஜிங் டைரக்டரான சவுந்தர்யா என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற மாதிரி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு குத்தாட்டம் ஆடி தொழிலாளர்களை ‘எண்டர்டெயின்’ செய்தார். இப்படியெல்லாம் நிர்வாகம் இருந்தால் அங்கு வேலை செய்ய ஆட்கள் கும்முவார்கள்.
மறுபடியும் அலார்ம். ‘அதுக்குள்ள டிரான்ஸ்பர் ஆர்டரா?” என்று அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். ‘குடைச்சல் தரும் அருணை முதலில் வெளியேற்ற வேண்டும்’ என்று நிர்வாக அணி அலைமோதியதில் ஆச்சரியமே இல்லை. நமக்கே அப்படித்தான் இருந்தது. பெரும்பாலேனோர் இதற்கு ஆதரவு தெரிவிக்க கலகவாதியான சவுந்தர்யா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அருண் இங்கேயே இருக்க வேண்டுமாம். “இங்க வந்த பிறகு நிர்வாகத்தின் பிரச்சினைகளும் புரியுது. ஆனா நீங்க தொழிலாளர்கள் ஷூலயும் நின்னு பாருங்க” என்று வாதாடினார் அருண். அந்தப் பக்கமிருந்து பவித்ராவை அனுப்ப தொழிலாளிகள் முடிவு செய்தார்கள்.
ஸ்வாப் டைம். “தொழிலாளிகளுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிச்ச அருண், அந்தப்பக்கம் இருப்பதுதான் நியாயம்” என்று தீபக் சர்காஸம் செய்ய சபையில் மௌனமான சிரிப்பு. அருணும் பவித்ராவும் இடம் மாறினார்கள். ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ கதையாக அருண் மீண்டும் தொழிலாளர் பக்கம் போனார்.
‘நான் போ மாட்டேன்’ - முரண்டு பிடித்த அன்ஷிதா
தர்ஷிகாவை தொழிலாளர் விரோதி என்கிற மாதிரியே அருண் பேசியதால் அதற்கான விளக்கத்தை அவர் கேட்டுக் கொண்டிருந்தார். ‘களத்தில் வேலை செஞ்சு பாருங்க. அப்பதான் ஏன் அவன் தொப்பி போட மாட்றான்.. வியர்வை வருது.. வெயில்ன்னு உங்களுக்கும் புரியும்” என்று தம் கட்டி பேசிக் கொண்டிருந்தார் அருண். “எளவு… பேசிட்டே இருக்காங்க.. என்ன பேசறாங்கன்னே புரியல” என்று மேக்கப் போட்டுக் கொண்டே சலித்துக் கொண்டார் சவுந்தர்யா (பப்ஸ் கடையில் லேபர் பிரச்சினையே வந்ததில்லை போல!).
“முத்து மாத்தி மாத்தி டிவிஸ்ட் பண்ணி பேசறான். இங்கதான் இவன் பேச்சுச் திறமை செல்லுபடியாகும். வெளில ‘போடா’ன்னு தலைல தட்டி அனுப்பிடுவாங்க” என்று ரயானிடம் வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தார் அருண்.
மீண்டும் ஸ்வாப் டைம். “யூனியன் லீடரை அவங்களே தேர்ந்தெடுக்கட்டும்” என்று பிளேட்டை மாற்றினார் முத்து “ஓஹோ..கதை அப்படிப் போகுதா.. முத்துதான் அங்க போவான்னு அவனுக்கு தெரியுது. அதான் இப்படி ரூலை மாத்தறான்” என்று யூகித்தார் ஜாக்குலின். “மஞ்சரி லேபர் பக்கம் வந்துட்டா, மறுபடியும் அங்க போகவே விடக்கூடாது. இங்கயே வெச்சுக்கணும்” என்று காண்டுடன் பிளான் போட்டார் அருண்.
நிர்வாக அணிக்கு அனுப்புவதற்காக ரயானை தொழிலாளர்கள் தோ்வு செய்தார்கள். ஆனால் நிர்வாகத்தின் தரப்பில் நிறைய குழப்பம் என்பதால் ‘உழைப்பாளி இல்லாத நாடுதான் எதுவும் இல்ல’ என்கிற பாடலை ஜாலியாகப் பாடிய படியே தொழிலாளர்கள் வந்தார்கள். தனது பெயரை நிர்வாக தரப்பினர் அதிகமாகச் சொன்னதை கேட்டு விட்ட அன்ஷிதா “நான் அங்க போ மாட்டேன்” என்று குழந்தை மாதிரி வீம்பு பிடித்தார்.
அன்ஷிதாவையும் மஞ்சரியையும் ஸ்வாப் செய்ய முடிவு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு விருப்பமில்லை என்பதால் வேறு நபரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார் பிக் பாஸ். எனவே முத்துவும் அருணும் அணி மாற வேண்டிய நிர்ப்பந்தம். (மீண்டும்.. மீண்டும் அருணா?!)
முத்து செய்த சக்கர விளையாட்டு, வினையானது
‘யார் வேலை செய்தது.. செய்யவில்லை..’ என்கிற வாக்குவாதத்தில் ராணவ்விற்கும் அன்ஷிதாவிற்கும் மோதல் ஏற்பட “எனக்கு இஷ்டம் இல்லா’ மோடிற்கு சென்ற அன்ஷிதா ஒரே வாக்கியத்தை ரீப்பீட் மோடில் கரகர குரலில் அலற விட்டு நம் காதுகளை ரணகளமாக்கினார்.
சைக்கிள் ஓட்டச் சொன்னால் சக்கரத்தை வேகமாக சுற்றி விட்டு “எப்படி தன்னால சுத்துது பார்த்தீங்களா.. இதுவரைக்கும் உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சதா..?’ என்று பெருமையடித்துக் கொண்டார் முத்து. (இதுக்குத்தான் சொல்றது.. ஊருக்குள்ள ஒரு ஆல்இன்அழகுராஜா இருக்கணும்ன்றது!) ஆனால் முத்து சுற்றிய விளையாட்டுச் சக்கரம் அவருக்கே ஆப்பாக திரும்பும் என்று அப்போது அவருக்குத் தெரியவில்லை. முத்துவின் விளையாட்டை அருண் சீரியஸாகவும் அன்ஷிதா செல்லமாகவும் கண்டித்தார்கள்.
இரண்டு அணிகளுக்குமான மீட்டிங். ‘சிறந்த தொழிலாளி’ என்கிற விருதை அன்ஷிதா பெற்றார். என்னமோ தெரியவில்லை. பல நாட்களுக்கு ‘டொங்கலாக’ இருந்த அன்ஷிதா, தொழிலாளர் டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்து குஷியாக இருக்கிறார். ‘மோசமான தொழிலாளி என்று யாருமில்லை’ என்று ஜாக்குலின் சொன்னதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் அருண் எழுந்து தரும் வியாக்கியானத்தைக் கேட்க எவருக்கும் துணிச்சல் இல்லை என்பதுதான் உண்மை. (அந்தப் பயம் இருக்கணும்டா!)
‘என் மேல் ஏன் இத்தனை வன்மம்?’ - வருத்தப்பட்ட முத்து
என்றாலும் அருண் விடவில்லை. நிர்வாகத்தின் தரப்பில் இருந்து தொழிலாளர் பக்கமாக அவர் ஆற்றிய எழுச்சியுரையின் வீர்யம் தாங்காமல் அனைவரும் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்கள். அருணின் பேச்சிலிருந்த ‘களை பிடுங்கி’ என்கிற வார்த்தையை வைத்து முத்து கிண்டல் அடிக்க ஜாக்குலின் அதற்கு ஆட்சேபம் செய்தார்.
புதிய யூனியன் லீடராக ராணவ் தேர்வு. முன்பு ராணவ்வுடன் சண்டை போட்ட அன்ஷிதா, இப்போதோ ‘என் தம்பி’ என்று ராணவ்வை செல்லம் கொஞ்சியது விசித்திரம். மீட்டிங் நடந்து கொண்டிருந்த போதே உள்ளே புகுந்த பிக் பாஸ். ‘பாத்ரூமில் தண்ணி வராது. அதற்கான காரணத்தை முத்து விளக்குவார்’ என்று சூசகமாக அறிவிக்க அனைவருக்கும் புரியவில்லை. “முத்து சக்கரத்தை சுத்தி விளையாடினார்ல. அதான்” என்று ராணவ் சொல்ல, ‘குட் அப்சர்வேஷன்’ என்று ராணவ்வை பிக் பாஸ் பாராட்டினார்.
எல்லோருமே பாத்ரூம் அவஸ்தையோடு முத்துவை குறுகுறுவென்று திரும்பிப் பார்க்க அவரோ ‘பாண்டியராஜன்’ முழியோடு புன்சிரிப்புடன் அமர்ந்திருந்தார். “அப்பவே இதை நான் கண்டிச்சேன்.. இப்ப பார்த்தீங்களா. களை பெரிசா வளர்ந்திடுச்சு.. இது அலட்சியம் கூட இல்லை. திட்டமிட்டே செய்த சதி ” என்று சமயம் பார்த்து கவுன்ட்டர் தந்து பழிவாங்கினார் அருண்.
முத்துவிடம் உள்ள சாமர்த்தியம் என்னவென்றால், எந்தவொரு கடும் விவாதமாக இருந்தாலும் முகத்தில் ஒரு புன்சிரிப்பை தேக்கி வைத்திருப்பார். அது எதிராளியை நிலைகுலைய வைக்கும். இன்னொன்று, மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் மழுப்பி கிழுப்பி சமாளிக்காமல் நேரடியாக மன்னிப்பு கேட்டு விடுவார். பரிபூர்ண சரணாகதி. இதையும் எதிராளியால் சமாளிக்க முடியாது. அனுதாபம்தான் ஏற்படும்.
எனவே இந்த நெருக்கடியான சூழலில் “விளையாட்டு விபரீதம் ஆயிடுச்சு.. முழுப்பொறுப்பையும் நான் ஏத்துக்கறேன். எனக்கு தண்டனை கொடுங்க பிக் பாஸ். மத்தவங்க இதனால சிரமப்படக்கூடாது” என்று பொதுமன்னிப்பு கோரினார் முத்து. எனவே அனுதாப அலை கிளம்பியது. “அப்படின்னா அவரையே தொடர்ந்து சைக்கிள் ஓட்ட வைக்கலாம். இதை ஒரு தண்டனையா தரலாம்” என்று ஜாக்குலின் சொல்ல, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் தர்ஷிகா. “முத்து சைக்கிள் ஓட்டினா நான் சாப்பிட மாட்டேன்” என்று முரண்டு பிடித்தார் தர்ஷிகா.
முத்து இப்படி எளிதில் எஸ்கேப் ஆவதில் பலருக்கும் காண்டுதான். மற்றவர்கள் மென்று முழுங்க தர்ஷிகா அதை வெளிப்படையாக சொல்லி விட்டார். என்றாலும் சமையல் முடியும் வரை முத்து சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று பெரும்பான்மையாக முடிவாகியது. “தர்ஷிகாவிற்கு என் மேல ஏன் இத்தனை வன்மம்.. இப்பத்தான் பலரோட முகமூடி வெளிய வருது” என்று அனத்தினார் முத்து.
சுவாரசியமே இல்லாத மேனேஜர் - லேபர் டாஸ்க்
“முத்துக்குமரன் திருந்தவே மாட்டாரு. இந்தத் தப்பை அவர் வேண்டுமென்றுதான் செய்தார்” என்று மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார் தர்ஷிகா. மன்னிப்பு கேட்டு விட்டு முத்து நமட்டுச் சிரிப்பு சிரித்ததை வைத்து தர்ஷிகா கத்திக் கொண்டிருக்க ‘அது உண்மையா?” என்று முத்துவிடம் தனியாக விசாரித்தார் ஜாக்குலின். “என் எக்ஸ்பிரஷன் அதான்.. இதுவரைக்கும் இந்த மாதிரி என் முகம் மாறியிருக்கா.. அத்தனை சங்கடமா இருந்தது” என்று விளக்கம் அளித்தார் முத்து.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ பாலிசியில் சமையல் முடிந்தாலும் தொடர்ந்து சைக்கிள் ஓட்டுவேன் என்கிற மாதிரி முத்து ஓட்டிக் கொண்டிருக்க, அவரை இறக்கி விட்டு ரயானை அமர்த்திய ஜாக்குலின் “சாப்பிட வாங்க” என்று அழைத்துச் சென்றார்.
முத்து செய்த சைக்கிள் விளையாட்டு, அந்த நேரத்தின் ஜாலியான மனநிலையில் செய்ததைப் போல்தான் தெரிகிறது. இதை உலகசதியாக தர்ஷிகா சித்தரிப்பது என்ன பிளான்? மற்றவர்களின் புகார் காரணமாக முத்து புண்பட்டிருப்பது தெரிகிறது.
அடுத்த வீக்லி டாஸ்க்கையாவது பிக் பாஸ் டீம் சுவாரசியமாக பிளான் பண்ணுமா? தொழிலாளர் - மேனேஜர் டாஸ்க்…. முடியல பாஸ்..