சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; ட...
BB Tamil Day 42: வம்பில் மாட்டிக் கொண்ட ஜாக்குலின்; ரயானை ரவுண்டு கட்டிய விசே
இப்படி நடக்கும் என்பது முன்பே எதிர்பார்த்ததுதான். ஆனால் இந்த நாளின் டிவிஸ்ட்டாக இந்த விஷயம் அமைந்து விட்டது. ‘எதையாவது செய்து’ நிகழ்ச்சியில் சுவாரசியத்தைக் கொண்டு வர வேண்டும் என்கிற நெருக்கடியில் இருக்கிற பிக் பாஸ். ‘வீடு மாற்றம்’ என்பதை ஆரம்பித்திருக்கிறார். இனியாவது நிகழ்ச்சியில் சுவாரசியம் கூடுகிறதா என்று பார்க்க வேண்டும்.
பிக் பாஸ் ரிவ்யூ செய்பவர்களை பழிவாங்குவதற்காகவே, அவர்களை போட்டியாளர்களாக சேர்த்து விரைவில் வெளியே அனுப்பி விடுகிறார்கள் போல. முதலில் ரவி. இப்போது ரியா.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 42
லெதர் கோட்டில் பந்தாவாக வந்தார் விசே. “முகம்ன்றது எது. வெளியே தெரியற முகமா.. நம்ம குணம் வெளிப்படுதே அதுதான் முகமா.. நாம் பல முகமூடிகளை அணிந்திருக்கிறோம். வீட்டிற்குள் பார்த்தால், நண்பர்களிடம் ஒரு மாதிரியாகவும் மற்றவர்களிடம் ஒரு மாதிரியாகவும் ரியாக்ட் செய்கிறார்கள். என்னவென்று விசாரிப்போம்” என்றபடி உள்ளே சென்றார் விசே.
உள்ளே நுழைந்ததும், அருணை முதலில் கலாய்த்து ‘ஓ.. மேன்... சட்டை மேலே எத்தனை பட்டன்?’ என்றார். “ஸ்கூல் டாஸ்க்ல பாய்ஸ் டீம். மீசையை எடுத்தது ரொம்ப அழகு... ரஞ்சித் சார்... நீங்கள்லாம் வெளிய போனா உடனே ஸ்கூல் அட்மிஷன் கொடுத்துடுவாங்க’ என்று விசே பாராட்ட அவர் கூச்சத்தில் நெளிந்தார். “சத்யாவிற்கும் ராணவ்விற்கும் நிச்சயம் அட்மிஷன் கிடைக்காது. இவ்வளவு கலாட்டா பண்ணா எப்படி?”
“அருணோட கேப்டன்சி எப்படியிருந்தது?’ என்கிற கேள்வியின் மூலம் முதல் தலைப்பை ஆரம்பித்தார் விசே. “பொம்ப பொறுமையா இருந்தார்” என்று வர்ஷினி பாராட்டினார். (நீங்க ஊதவே வேணாம் மேடம்!) பலரும் சொன்ன கருத்தைச் சுருக்கிப் பார்த்தால் “கேப்டனாக இருந்த சமயத்தில் அருண் பொறுமையாகவும் பக்குவமாகவும் முதிர்ச்சியாகவும் நடந்து கொண்டார்” என்பதே. போட்டியாளராக இருந்த சமயத்தில் வாய்க்கு வாய் பேசி பெண்கள் அணியை அலற வைக்கும் அருண், கேப்டன் பதவியின் போது கட்டின பசு போல சாதுவாக இருந்தாராம். (தெரிஞ்சது.. சவுந்தர்யாவை டாஸ்க் பண்ண வைக்கும் போது நல்லாவே தெரிஞ்சது!)
ஜெப்ரி பேசும் போது அருணைப் பாராட்டினார். ஆனால் சுரத்தே இல்லாத குரலில் அவர் சொல்லி முடித்த போது ‘ஓ.. பாராட்டினீங்களா?” என்கிற ஒற்றைக் கேள்வியில் பயங்கரமாக பங்கம் செய்தார் விசே. ‘டேக்2.. ஆக்ஷன்’ என்று விசே சொல்ல, அதே பதிலை இப்போது உற்சாகமாக சொன்னார் ஜெப்ரி. தன்னை மிகையாக உபசரிக்கும் மனைவியைப் பார்த்து ‘இதையெல்லாம் அனுபவிக்கிறதா.. வேண்டாமான்னு பயமா இருக்கு” என்று விவேக் ஒரு நகைச்சுவைக் காட்சியில் சொல்லுவார். எல்லோரும் பாராட்டும் போது அருணின் நிலைமையும் இப்போது அப்படித்தான் இருந்தது.
தானாகச் சென்று வம்பில் மாட்டிக் கொண்ட ஜாக்குலின்
ஜாக் எழுந்த போது வெறுமனே பாராட்டியதோடு விட்டிருக்கலாம். “சத்யா கேப்டனா இருந்த போது இருந்த அளவிற்கு அருணிற்கு பிரச்னைகள் வரலை. வெரி லக்கி ஃபெலோ” என்று சொல்ல “ஏம்மா.. நான் பாட்டுக்கு செவனேன்னுதானே இருந்தேன். என்னை ஏம்மா நடுரோடடிற்கு இழுக்கற?’ என்கிற மாதிரி பார்த்தார் சத்யா. எனவே விசேவும் அதையே லீடாக எடுத்துக் கொண்டு ஜாக்கை வறுக்க ஆரம்பித்தார்.
“இதுல ஏன் சத்யாவை இழுத்தீங்க.. ஐடி கார்டை கழற்றி வெச்சது சரியா?.. தீபக் உடனான பஞ்சாயத்து” என்றெல்லாம் விசே கேள்விகளைக் கேட்க, அருண், சத்யா, தீபக் ஆகியோர் தெளிவாக சாட்சியம் சொன்னதால் ஜாக்கின் தரப்பு பலவீனமாகப் போனது. நேற்றைய எபிசோடில் பார்வையாளர்களிடம் பேசும் போது “பேசற வார்த்தைகளின் தொனின்னு ஒண்ணு இருக்குல்ல” என்று தீபக்கை மறைமுகமாக விமர்சித்த விசே, இப்போது அதைப் பற்றி விசாரிக்கவில்லை. “ஒரு டாஸ்க்கை டிசைன் பண்ணி விளையாடக் கொடுத்தா.. அதுல உங்க ஈகோ மட்டும்தான் தெரியுது.. இதெல்லாம் பார்க்க நல்லாவேயில்ல” என்று விசே கடுப்பாக, அனைவரின் முகத்திலும் டென்ஷன்.
பிரேக் முடிந்து திரும்பிய விசே, பார்வையாளர்களிடம் பேசினார். “சேலத்துல இருந்து இதுக்காகவே வந்திருக்கேன்” என்று ஒருவர் எழுந்து கேள்வி கேட்க ஆரம்பிக்க “நீங்கள்லாம் எங்க இருந்துடா வர்றீங்க.. வேலை வெட்டியே இல்லையா?” என்கிற மாதிரி அவரைப் பார்த்தார் விசே. ஆனால் அதை ஓப்பனாக சொல்ல முடியுமா? எனவே ‘நம்ம ‘பிக் பாஸ்’ன்னு சொல்லி ஓன் பண்ணிக்கறீங்க பார்த்தீங்களா.. அங்க நிக்கறீங்க?” என்று விசே சொல்ல மக்கள் பரவசப்பட்டு கைத்தட்டினார்கள். “பாய்ஸ் டீமும் கேர்ல்ஸ் டீமும் வெறும் ஈகோலதான் சண்டை போடறாங்க” என்பது சேலத்துக்காரரின் கருத்து.
“சவுந்தர்யா.. ராணவ்வை இன்சல்ட் பண்ணிட்டே இருக்காங்க.. உனக்கு புரியறதுக்குள்ள கேம் முடிஞ்சுடும்ன்ற மாதிரி பேசறாங்க’ என்று ஒரு பெண் சொன்னதின் மூலம் ராணவ்விற்கு அனுதாப ஓட்டுக்கள் கூடியிருப்பது தெரிந்தது. “இத விசாரிப்போம்.. நான் மறந்துட்டா.. ஞாபகப்படுத்துங்க” என்றார் விசே. “கேப்டன் சரியா ஃபனிஷ்மெண்ட் தரலைன்னு சொன்ன சவுந்தர்யா, ஒரு டாஸ்க் கொடுக்கும் போது செய்யாம டபாய்ச்சுட்டே இருந்தாங்க” என்று இன்னொருவர் சொன்னது சரியான பாயிண்ட். ஏனெனில் அந்தக் காட்சியை பார்க்கும் போது நமக்கே சவுந்தர்யா மீது பயங்கரமாக காண்டானது.
‘டப்பிங் வாய்ஸ் தேவையா?’ - ரயானை ரவுண்டு கட்டிய விசே
உள்ளே சென்ற விசே, அணி மாறிச் சென்ற ரயானை விசாரிக்க “நல்லாப் பார்த்துக்கிட்டாங்க சார்’ என்று புதுமாப்பிள்ளை மாதிரி சொன்னார். “நம்பிக்கை வெச்சாங்கன்னு சொல்லு” என்று சவுந்தர்யா வாய்க்குள் முனகியதை கிளிப்பிள்ளை போல அப்படியே ரயான் சொல்ல, அதுவரை கூலாக இருந்த விசே, டென்ஷன் ஆகி விட்டார். “அப்படின்னா நான் நேரடியா ரயான் கிட்டயே பேசிக்கறேன். நீங்க சொல்லுங்க “ என்று சவுந்தர்யாவை எழுப்பி, சர்காஸ குண்டூசியால் குத்திய விசே “ஏன் இப்படி சுவாரசியமே இல்லாம பதில் சொல்றீங்க.. ரயான்.. உங்களுக்கு சொந்தமா பேச வராதா.. டப்பிங் வேணுமா?” என்றெல்லாம் காட்டமாகக் கேள்வி கேட்க, ரயான் பதில் சொல்ல முன்வந்த போது விசேவிற்குள் வழக்கமான பேய் வந்து அமர்ந்தது. “வேணாம்.. சார்… உக்காருங்க”.
“இனிமே யாராவது இப்படி சுவாரசியமே இல்லாம பதில் சொன்னா.. அவங்க கூட இனிமே நான் பேச மாட்டேன்.. எல்லாத்தையும் உங்களுக்கு சொல்லி்த் தரணுமா.. டாஸ்க்குதான் சுவாரசியமில்லாம பண்றீங்க. கேள்வி கேட்டா கூட பதில் சொல்ல மாட்டீங்களா.” என்றெல்லாம் இறங்கி அடித்த விசே, காமிராவைப் பார்த்து “மக்களே.. பார்த்துக்கங்க. இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்ல… என்னமோ நான் அவங்க மேல கோபப்படறதா சொல்றாங்க.. அவங்க கிட்டதான் மாட்டிக்கிட்டு நான் முழிக்கறேன்” என்பது மாதிரி தனக்கான சாட்சியை வலுவாக்கிக் கொண்டார்.
“பாய்ஸ் டீம்ல ரொம்ப சந்தோஷமா இருந்தேன். என்னை மறந்து சாப்பிடப் போயிட்டாங்க.. கோச்சுக்கிட்டேன். எல்லோருமே ஒண்ணா வந்து மன்னிப்பு கேட்கும் போது ஃபீலாயிடுச்சு..” என்று கண்கலங்கியபடி அன்ஷிதா சொல்ல, “ரொம்ப நல்லாயிருந்தது அந்தக் காட்சி. ஆண்களுக்குப் பாராட்டுக்கள். அன்ஷிதா.. நீங்க தனி பெட் கூட வேணாம்ன்னு சொன்னீ ங்கள்ல.. பார்க்க ரொம்ப அழகா இருந்தது. சூப்பர்” என்ற விசே “பாய்ஸ் டீமின்அழகான பண்பு இது” என்று பாராட்டியது நன்று.
ஈகோ நடுவில் ஒரு துளி கருணை
சாச்சனா அரிசி தானம் செய்த காட்சி பாராட்டப்படும் என்பது ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். கண்கலங்கியபடி பரவசத்துடன் சாச்சனா அதை விவரித்தார். “பிக் பாஸ் திட்டினாலும் பரவாயில்லன்னு செஞ்சிட்டேன். அவங்களைப் பார்க்கவே பரிதாபமா இருந்தது” என்று அவர் சொன்னதைக் கேட்டு ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள். “கருணை காட்டியது ஓகே.. ஆனா இனிமே இப்படி செய்யக்கூடாது. பிக் பாஸ் அதைப் பார்த்துப்பாரு.. இது ஒரு கேம்” என்று விசே சொல்லத் தலையாட்டினார் சாச்சனா. இதைப் போலவே ஆண்கள் அணிக்காக உணவு கேட்ட பவித்ரா, ஆனந்தி, தர்ஷிகா ஆகிய மூவரையும் விசே பாராட்ட, ஆண்கள் அணி எழுந்து நின்று நன்றி சொன்னது நல்ல காட்சி.
“உங்க கிட்ட நிறைய ஈகோ இருந்தாலும் ஒரு துளி கருணை தன்னால வந்துடுதுல்ல.. பார்க்கவே அழகா இருக்கு” என்று பாராட்டினார் விசே.
பிரேக் முடிந்து திரும்பிய விசே, சவுந்தர்யாவிற்கான டார்கெட்டை ஆரம்பித்தார். “டாஸ்க்லாம் ஒழுங்கா தர மாட்றாங்கன்னு சொன்னீங்களே.. சவுந்தர்யா” என்று விசே கேட்க, ஒழுங்குப் பிள்ளை கிழங்குத் தோல் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு எழுந்த சவுண்டு “என்ன சொல்றீங்க சார்.. பிக் பாஸை சொல்றீங்களா?” என்று கேட்க, “ஓ.. பிக் பாஸே டாஸ்க் சரியா தர மாட்றாரர்ன்னு சொல்றீங்களா.. ஓகே.. அடுத்த முறை அவரைப் பார்த்தா விசாரிக்கிறேன்” என்று விசே நக்கலடிக்க ‘அருணைப் பத்தி நான் சொன்னதைச் சொல்றீங்களா.. அவரு வார்த்தையை விட்டுட்டாரு.. அதான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்” என்று சமாளித்தார் சவுண்டு.
விளக்கம் சொல்வதற்காக எழுந்த அருண் தான் பட்ட பாடை நொந்து போய் விவரிக்க சவுந்தர்யா மீதான வழக்கு வலுவாகியது. மற்றவர்களையும் இதற்காக சாட்சி சொல்ல அழைத்தார் விசே. “ஐயோ.. அவரா.. அவர் பயங்கரமானவராச்சே.. ஊர்ல விசாரிச்சுப் பாருங்க.. அவர் தர்ற எக்ஸ்பிரஷன்லாம் கொலைவெறியை ஏற்படுத்தும்” என்று சொல்லி வைத்தாற் போல் அனைவரும் ஒரே மாதிரியாக சொன்னார்கள். அதிலும் முத்து செய்து காட்டிய டெமோ எக்ஸ்பிரஷனிற்கு பார்வையாளர்களிடமிருந்து பலத்த வரவேற்பு. “ஆக.. உங்க எக்ஸ்பிரஷன்ல ஒட்டு மொத்த ஊரே பாதிக்கப்பட்டிருக்கு” என்கிற மாதிரி விசே பார்க்க ‘ஒன்றும் தெரியாதது’ போல் முகத்தை மாற்றிக் கொண்டார் சவுண்டு. (நீதான் தைரியமான ஆளாச்சே.. இப்ப பேசு!).
‘ரியாக்ஷன் க்வீன்’ சவுந்தர்யாவை வறுத்தெடுத்த விசே
“இங்க எல்லோருமே ரியாக்ஷன் காட்டறாங்க.. அது எனக்கு நேச்சுரலா வருது..” என்று சவுந்தர்யா சமாளிக்க, சரியான சமயத்தில் ரயான் சொன்ன அட்வைஸை மேற்கோள் காட்டிய விசே “உங்க மூடுக்கு ஏத்த மாதிரி டாஸ்க் பண்ணுவீங்களா.. அதுக்கு உங்களை ஒருத்தர் கன்வின்ஸ் பண்ணணுமா..” என்று இறங்கி அடிக்க “சீரியஸா பண்ணும் போதுதான் இவங்க காண்டாவறாங்க போல. இனிமே அதை மாத்திக்கறேன்” என்றார் சவுந்தர்யா. அவருடைய எக்ஸ்பிரஷன்களையெல்லாம் தனியாகத் தொகுத்து வீடியோவாக போட்டுக் காட்டினால் மாறுவாரா அல்லது அப்போதும் அதை நியாயப்படுத்துவாரா என்று தெரியவில்லை.
அடுத்ததாக ராணவ் பக்கம் வண்டியைத் திருப்பிய விசே “உங்களை ஒடுக்கறாங்களா..?” என்று கேட்க “ஆமாம்.. சார்.. என்னைக் கார்னர் பண்றாங்க.. சர்க்கிள்ல சேர்த்துக்காத மாதிரி ஃபீல் ஆகுது. பெஞ்ச்ல தள்ளி உக்காரச் சொல்றாங்க. ஹர்ட் ஆகுது” என்று பொத்தாம் பொதுவாக பதில் சொல்ல விசே மீண்டும் கடுப்பாகி விட்டார். “பிரதர்.. யாரு அதைப் பண்றாங்க.. தெளிவாச் சொல்லுங்க” என்று விசே கேட்டாலும் ராணவ் அதை வெளிப்படுத்த விரும்பாமல் “எல்லோரும்தான்…’ என்று மழுப்பியபடியே பதில் அளித்தார். டாஸ்க்கின் போது ஆவேசமாக செயல்பட்ட ராணவ், நிஜ வாழ்க்கையில் பம்மி விடுவது அவரது பலவீனம். “நீங்க எதுவும் சொல்ல வேணாம்.. உக்காருங்க” என்று டென்ஷன் ஆன விசே “பாருங்க.. மக்களே.. இதுக்கும் எனக்கும் சம்பந்தமும் இல்ல” என்று நொந்து போய் சொன்னார்.
புலம்பிய ஜாக்கிற்கு முத்து சொன்ன சமாதானத்தை இந்த சமயத்தில் மேற்கோள் காட்டிய விசே “இந்தக் கேம்ல எல்லாமே நடக்கத்தான் செய்யும். நமக்கான இடத்தை நாம்தான் உருவாக்கணும்.. மக்கள் அத்தனை சீக்கிரம் ஒருத்தர் கிட்ட கப்பைத் தூக்கிக் கொடுத்துட மாட்டாங்க” என்று பொதுவாக எச்சரிக்கை தந்தபடி பிரேக்கில் சென்றார்.
“நீ பேசினதுல கிளாரிட்டியே இல்ல” என்று ராணவ்விடம் சொல்லிக் கொண்டிருந்தார் பவித்ரா. இன்னொரு பக்கம், “நான் ரியாக்ஷன்தானே தந்தேன்.. அடிக்கவா செஞ்சேன்..” என்று குழந்தை போல தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் சவுந்தர்யா. “இப்ப விடு.. நைட்டு ஃப்ரீயா அழலாம்” என்று அவருடைய கண்களைத் துடைத்து சமாதானப்படுத்தினார் ஜெப்ரி. “இங்க யாருமே ஃபர்பெக்ட் கிடையாதும்மா. விடு. பார்த்துக்கலாம்” என்று ரஞ்சித்தும் சமாதானப்படுத்த “என்னோட ஆக்ஷனே.. ரியாக்ஷன்தான்” என்று அந்தச் சமயத்திலும் பன்ச் வசனம் பேசினார் சவுண்டு.
வெளியேற்றப்பட்ட ரியா - சரியான முடிவுதானா?
“ஓகே.. எவிக்ஷன் பிராசஸிற்கு போயிடலாமா?” என்று அடுத்த டாப்பிக்குடன் வந்த விசே “தர்ஷிகா.. நீங்க முதல் தடவை நாமினேஷன்ல வந்திருக்கீங்கள்ல..” என்று கேட்க அவர் தலையாட்டினார். “சார்… நான் ஆறு முறை வந்திருக்கேன். பழகிடுச்சு.. ஒண்ணும் பண்ண முடியாது” என்று ஜாக் விரக்தியுடன் சொல்ல “அதாவது… உங்களை யாரும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்றீங்க..அதானே?” என்று விசே ஜாலியாக டிவிஸ்ட் செய்தார்.
இந்த வாரம் யார் எவிக்டட் என்பதை பிக் பாஸ் டீம் வெளிப்படுத்திய விதம் நன்றாக இருந்தது. எவிக்ஷன் பட்டியலில் இருந்தவர்களுக்கு எண்களைத் தந்து, எக்ஸாம் ரிசல்ட் பார்ப்பது போல் கார்டன் ஏரியாவில் அறிவிப்பு பலகை வைத்து, அதில் அனைவரும் கும்பலாக நின்று தங்கள் எண் வந்திருக்கிறதா என்று பார்த்து சந்தோஷப்பட்டது ‘ஸ்கூல் எபெக்ட்டை’ கொண்டு வந்தது. இப்படியாக சின்னச் சின்ன விஷயத்தை பார்த்து சுவாரசியமாக்கிய பிக் பாஸ் டீமிற்குப் பாராட்டு.
தன்னுடைய எண் வரவில்லை என்று அறிந்ததும் ரியா மனம் உடைந்து விட்டார். என்றாலும் அதை அடக்கிக் கொண்டு வாயால் ஊதி ஊதி டென்ஷனைக் குறைக்க முயன்றார். ‘You don't deserve this’ என்று வழக்கம் போல் அவர் தனக்குத்தானே பேசிக் கொண்டது உண்மை. அவரை விடவும் பலவீனமான போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்கள். அன்ஷிதா இந்த கேமில் இருந்து எப்போதோ டிஸ்கனெக்ட் ஆகி விட்டார். பவித்ரா இன்னமும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கவேயில்லை. ஆனால் உள்ளே வந்த இரண்டாவது வாரத்திலேயே அவரைப் பற்றி பேச வைத்து விட்டார் ரியா.
பலவீனமான பழைய போட்டியாளர்கள் உள்ளே இருப்பதற்கும், துடிப்பான வைல்ட் கார்ட் என்ட்ரி குறுகிய நேரத்தில் வெளியே செல்வதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. வெளியே உள்ள மக்களைக் கவர்வது மட்டுமல்லாமல், வீட்டினுள் இருக்கிற சக போட்டியாளர்களிடமும் அதிகம் விரோதம் வைத்துக் கொள்ளக்கூடாது. அதே சமயத்தில் கள்ள மௌனமாகவும் இருக்க முடியாது. ஒரு மாதிரி கத்தி மேல் நடக்கிற சூதானமான ஆட்டம் இது. ‘நான், நானாக இருக்கிறேன்’ என்று பலருடைய விரோதத்தை ரியா எளிதில் சம்பாதித்துக் கொண்டதுதான் அவருடைய எவிக்ஷனுக்கு காரணமாக இருக்கலாம்.
‘உழைக்கத் தயாரா இருக்கறவங்க வெற்றியை யாராலும் தடுக்க முடியாது’
பொதுவாக எவிக்ஷனில் வெளியேறுகிறவர்கள், பிரிவுத் துயரால் கண்ணீர் விடுவார்கள். தோல்வியில் அழுவார்கள். ஆனால் ரியாவிற்கு இந்த கேம் மீது அசதாரணமான பிரியமும் ஒட்டுதலும் இருக்கிறது. மைதானத்தில் ஆடிக் கொண்டிருக்கிற ஒரு விளையாட்டு வீரரை இடையில் நிறுத்தி வெளியே அனுப்புவதைப் போல உணர்வை ஒருவர் வெளிப்படுத்தியது இதுதான் முதன்முறை. ரியா இந்த கேமை எப்படி நேசிக்கிறார் என்பது அவரது எவிக்ஷனில் தெரிந்தது.
பாக்கிங் செய்வதற்காக வந்த மற்றவர்களின் உதவியை மறுத்த ரியா “நான் கொஞ்சம் டிஸ்டிராக்ட் ஆகணும்” என்று சொன்னது புரிந்து கொள்ளக்கூடியது. “நீ நீயாத்தான் இருந்தே..” என்று ஜாக் ஆறுதல் சொல்ல “அதான் எனக்கும் புரியல” என்று கலங்கினார் ரியா. “கனவு மாதிரி கிடைச்ச இந்த வாய்ப்பு, கனவு மாதிரியே கையை விட்டுப் போயிடுச்சு” என்று ரியா சொன்ன போது இந்த இழப்பின் வலியைப் புரிந்துகொள்ள முடிந்தது.
“நான் லோவா ஃபீல் ஆகறப்பலாம் இந்தப் பாட்டை பாடி ஆறுதல் தேடிப்பேன்” என்று சொன்ன ரியா, ‘தல கோதும் இளங்காத்து’ பாடலைப் பாடி விட்டு தனது சிக்னேச்சர் பாடி லேங்வேஜ் ஆன தரையைத் தொட்டு கும்பிட்டபடி அனைவருக்கும் நன்றி சொல்லி விலகினார். ரியாவின் எவிக்ஷனுக்காக அழுதாரா, அல்லது விசே காய்ச்சி எடுத்தது காரணமா என்று தெரியவில்லை. கலங்கிக் கொண்டிருந்த ரயானுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் ஜாக். விசேவின் காட்டமான கமெண்ட்தான் காரணமாக இருக்க வேண்டும்.
“வாங்க ரியா” என்று அவரை மேடைக்கு வரவேற்ற விசே, ஃபேர்வெல் வீடியோவைப் போட்டுக் காண்பித்து “ரெண்டே வாரத்துல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கீங்க. உழைக்கத் தயாரா இருக்கறவங்களோட வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று ஆறுதல் சொல்லி விடை தந்தார்.
இறுதியில் நடந்த சுவாரசியமான டிவிஸ்ட்
மறுபடியும் வீட்டிற்குள் சென்ற விசே, “ஆறு வாரம் ஆயிடுச்சு.. நீங்க ஏதாவது சுவாரசியமா பண்ணாதான் உண்டு” என்று சொன்னபடி ஸ்டோர் ரூமில் இருந்து ஒரு பொருளை எடுத்து வரச் சொன்னார். அதுவொரு டெம்போவின் மினியேச்சர். “என்னன்னு புரியதா?” என்று விசே கேட்க “தேவையில்லாதவங்கள இதுல போட்டு அனுப்பிடலாம்” என்று முத்து சொல்ல வாய் விட்டு சிரித்தார் விசே. “சார்.. House swapping-ஆ” என்று முதன்முறையாக கண்டுபிடித்தவர் தர்ஷிகா.
“யெஸ்” என்று விசே சொல்ல பெண்கள் அணிக்கு ஒரே குஷி. “பேச்சாடா பேசினீங்க” என்று ஆண்கள் அணியைப் பார்த்து கும்மாளமாக சிரிக்க, தலையில் இடி விழுந்தது போல் ஆண்கள் அணி அமர்ந்திருந்தது. திறந்த வாயை ரஞ்சித்தால் மூட முடியவில்லை. “அவங்க என்ன டாஸ்க் தராங்கன்னு பார்த்துடுவோம்.. அதுக்கு நாங்க பட்ட பாடு இருக்கே?” என்று சுதாரித்துக் கொண்டு சொன்னார் முத்து.
“இந்த ரூமுன்னுதான் வேணும்ன்னு.. ஆரம்பத்துல அடம்பிடிச்சு வாங்கினீங்க.. இப்பப் பாருங்க.. எதிர் பக்கம் கிடைச்சதுக்கு இவ்ளோ சந்தோஷப்படறீங்க?’ என்று சொன்ன விசே ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்கிற தத்துவத்தை உணர்த்தினார். “அப்ப தெரியாமப் போச்சு சார்.. கிச்சன் அந்தப் பக்கம் இருக்குன்றது.. இப்ப தரைல கூட படுத்துக்குவோம்” என்று பழைய தவறை உணர்ந்தார் ஜாக். எனில் ஆண்கள் போட்ட பழைய டீல் என்னவாகும்? ‘வடக்குப்பட்டி ராமசாமி’ கதைதான். ஊ.. ஊ..
“ஓகே. புது வீட்ல பால் காய்ச்சி செட்டில் ஆகிடாதீங்க.. சுவாரசியமா ஏதாவது பண்ணுங்க” என்ற படி விடை பெற முன் வந்த விசேவிடம் “டாடி.. டாடி.. சாக்லேட் வேணும் டாடி” என்று சாச்சனா கெஞ்ச. (ஓ.. இதுக்குத்தான் அந்த அரிசி தானமா?!) ‘சார்.. அது கூட பிரியாணியும் அனுப்பினா மறக்கவே மாட்டோம்” என்று தீபக் சொல்ல, ‘ஓகே.. என்ன முடியுமோ.. பார்க்கறேன்” என்றார் விசே. (இதெல்லாம் பிக் பாஸ் ரூல்ஸ்ல அலவ்டா?!)
“இனிமேதான் இருக்கு உங்களுக்கு” என்ற அன்ஷிதாவிடம் “மேடம்..” என்கிற ஹோட்டல் டாஸ்க் மாடுலேஷனில் பம்மினார் விஷால். “இங்க பாரேன்..லைட்டு எரியுது.. ஹோட்டல் ரூம் மாதிரி செமயா இருக்குடா” என்று பெண்கள் அறையின் வசதிகளைப் பார்த்து வியந்து கொண்டிருந்தார் சத்யா. பஸ்ஸில் கர்ச்சீப் போட்டு இடம் பிடிப்பது போல ஆளாளுக்கு ஓடிச் சென்று இடம் பிடித்தார்கள். அதுவரை ஒற்றுமையாக இருந்த ஆண்கள் அணியா இப்படி?” என்று ஆச்சரியமாக இருந்தது. (ஒருவேளை பெண்கள் ரூம் என்பதால் வாஸ்து சரியில்லையோ.. உள்ளே நுழைந்தவுடன் போட்டி வந்து விட்டதே?!)
‘வீடு மாற்றம்’ என்கிற அம்சம், இந்த வாரத்தில் பல புதிய சுவாரசியங்களை ஏற்படுத்தும் என்று பிக் பாஸ் டீமைப் போலவே நாமும் நம்புவோமாக! அதுவரை.. பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் ‘பொறுத்தவர் பூமியாள்வார்’ (வர்ஷினியின் டாடி சொன்ன பொன்மொழியை நினைவில் கொள்க!).