Boat Club: ``1867 இல் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட போட் க்ளப்பின் சர்வதேசப் போட்டி" - விவரம் என்ன?
1867 இல் துவங்கப்பட்ட மெட்ராஸ் போட் கிளப் நடத்தும் 81வது ARAE-FEARA சர்வதேச படகோட்டும் போட்டி ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி11 ஆம் தேதி அன்று நிறைவடைய உள்ளது.
இந்தப் போட்டியில் சென்னை, புனே, பெங்கால், கல்கத்தா, ஸ்ரீலங்காவைச் சேர்ந்த 8 குழுக்களும் நூறுக்கும் மேற்பட்ட போட்டியாளர்களும் பங்கேற்கின்றனர். ரோயிங் எனப்படும் இந்த படகு போட்டி ஒரு ரிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் (பின்நோக்கிச் செல்லும் போட்டி.)
நடக்கவிருக்கும் போட்டிகள்:
இந்த ரோயிங் போட்டி இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் நடக்க போகிறது. மெட்ராஸ் கிளப் நடத்தும் இந்தப் போட்டியில் 12 வயது முதல் 80 வயதுவரை உள்ளவர்கள் பங்கேற்கின்றனர். மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளது. அனைத்து வயதினரும் கலந்துகொள்ளும் ஒரு போட்டியாக இருக்கிறது.
தொடக்க விழா:
6ஆம் தேதி தொடக்க விழா நடைபெற்றது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மேஜர் ஜெனரல் இந்திரா பாலன் வருகை தந்தார். இவர் கார்கில் போரில் சேவையாற்றியவர். இவர் ஒரு படகோட்டி மற்றும் நாடக ஆர்வலரும் கூட. தேசியக்கொடி ஏற்றி விழா தொடங்கப்பட்டது. 8 அணிகளின் கிளப் கொடிகளும் அணிகளின் தலைவர்களால் ஏற்றப்பட்டது.
கிளப்பின் செயளாலர் ஶ்ரீநிவாசன் இந்நிகழ்வைப் பற்றி நம்மிடம் பேசியபோது,
"ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட இந்த கிளப் பின்னாட்களில் இந்தியர்களால் வழிநடத்தப்பட்டு இன்று அனைவரும் கலந்துகொள்ளும் ஒரு கிளப் ஆக மாறியிருக்கிறது. பொதுவாக படகோட்டுவது பொழுதுபோக்கு வசதியுள்ளவர்களுக்கான ஒன்று என்பதே கிடையாது. இது அனைவருக்குமான ஒரு விளையாட்டு.
மேலும் இதுவும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளில் நிறைய பயிற்சியும் மனம் மற்றும் உடல் வலிமை தேவையான ஒரு விளையாட்டாகும். ஆனால் இது பின் தங்கி கொண்டே இருக்கும் விளையாட்டாக மாறி வருகிறது. இதற்கான விழிப்புணர்வு அனைவருக்கும் சென்று சேர வேண்டும். இது அனைவருக்குமான விளையாட்டுதான். மாணவ பருவத்தில் இருந்து இதை பயில துவங்குவது சிறந்ததாகும். 12 வயதே இதற்கு தகுந்த வயதுதான்"
தொடக்க விழா முடிந்ததும் எர்கோமீட்டர் எனப்படும் பெடலிங் உட்பட்ட வார்ம் அப் போட்டிகள் அனைவருக்கும் நடைபெற்றது.