நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு ஆதரவு! யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு!
Chennai IFF: `இங்க தான் 'ஆரண்ய காண்டம்' படம் பார்த்தேன்’ - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
2024ம் ஆண்டுக்கான 22வது சென்னை சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று (டிச 19) இரவு சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும் (மகாராஜா), சிறந்த நடிகையருக்கான விருது சாய் பல்லவிக்கும் (அமரன்) வழங்கப்பட்டது. சிறந்த படமாக 'அமரன்' திரைப்படமும், சிறந்த இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷும் (அமரன்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'அமரன்' படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது. விருதினைப் பெற்ற விஜய் சேதுபதி, சாய் பல்லவி மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கின்றனர்.
'அமரன்' படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்ற சாய் பல்லவி, "ஒரு நடிகருக்கு நல்ல கதாபாத்திரம் அமைவது ரொம்ப கஷ்டமான விஷயம். 'அமரன்' படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் அவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புத் தந்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுக்கு நன்றி. நினைத்ததை அப்படியே திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். தமிழ், கேரளா, தெலுங்கு என எனக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள்" என்று பேசியிருக்கிறார்.
'மகாராஜா' படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற விஜய் சேதுபதி, "இந்த விருது இப்படத்தின் இயக்குநர் நித்திலனுக்குச் சொந்தமானது. படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. விருதைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. திரையில் வெளியாகியிருக்கும் 'விடுதலை -2' படத்தைப் பாருங்கள். நன்றி" என்று பேசியிருக்கிறார்.
'அமரன்' திரைப்படத்திற்காகச் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, "இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு நிறைய முறை பாஸ் வங்கிட்டு வந்திருக்கிறேன். நான் இங்கப் பார்த்த முக்கியமான திரைப்படம் 'ஆரண்ய காண்டம்'. இவ்விழாவில் எனக்கு விருது கொடுத்த அனைவருக்கும் நன்றி. படத்தைத் தயாரித்த 'RKFI'க்கும், கமல்ஹாசன் சார் அவர்களுக்கும் எனது நன்றிகள். படக்குழு அனைவருக்கும் நன்றி, சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி. சைந்தவி இந்தப் படத்துல ரொம்ப முக்கியமானப் பாடல் பாடிக் கொடுத்திருங்காங்க. மேஜர் முகுந்த் வரதராஜன் - இந்து ரெபேக்கா வர்கீஸ் குடும்பத்தினருக்கு இந்த விருது சமர்ப்பணம்" என்று பேசியிருக்கிறார்.