ரூ.100 கோடியில் சாலைகள், புதிய கட்டடங்கள்.. : ஈரோடு மாவட்டத்துக்கு மு.க. ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டங்கள்!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ரூ.100 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும் புதிய கட்டடங்கள் கட்டிக்கொடுக்கப்படும். கூட்டுக் குடிநீர் திட்டம் என பல புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நிறைவுபெற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை பட்டியலிட்டார்.
அவர் பேசுகையில், ஈரோடு, இந்த மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றுக்கான தொடக்கம்! காரணம், தந்தை பெரியாரைக் கொடுத்த மண் இந்த மண்! தந்தை பெரியார் அவர்கள் நமக்கு பேரறிஞர் அண்ணாவையும், முத்தமிழறிஞர் கலைஞரையும் கொடுத்திருக்கிறார். அவர்கள் இல்லாமல், திராவிட இயக்கம் இல்லை! இன்றைய வளர்ச்சி நிறைந்த அறிவார்ந்த தமிழ்நாடும் இல்லை! நாமும் இல்லை! சில நாட்களுக்கு முன்புதான், ‘ஈரோட்டு பூகம்பம்’ தந்தை பெரியார் நிகழ்த்திக் காட்டிய, ‘வைக்கம் புரட்சி’-யின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கேரளத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடினோம். கேரள மக்கள் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து பாராட்டுகிறார்கள். இந்த ஈரோடு மண்ணின் மைந்தரான தந்தை பெரியார் அமைத்த அடித்தளம் தான் அதற்குக் காரணம். பல புரட்சிகரமான தொடக்கம் விளைந்த இந்த ஈரோட்டு மண்ணில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்;
இந்த நேரத்தில் ஒரு சோகம் எனக்குள் இருந்து வேதனையை தந்து கொண்டுதான் இருக்கிறது! கடந்த வாரம் நம்முடைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த சோகம்தான் அது! தந்தைப் பெரியாரின் பேரன் அவர். ஒன்றிய அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக மிகச் சிறப்பாக செயல்பட்டவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். அவருடைய இழப்பு ஈரோடு தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. இன்றைக்கு அவர் நம்மோடு இந்த மேடையில் இருந்திருந்தால் நம்முடைய திராவிட மாடல் அரசின், சாதனைகளை செயல்திட்டங்களைப் பற்றி எடுத்துச் சொல்லியிருப்பார். அவருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாகவும் என்னுடைய அஞ்சலியை நான் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.
இன்றைய நாள், இந்த விழாவின் மூலமாக 951 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 559 புதிய திட்டங்கள் திறப்பு விழா நடைபெற்றிருக்கிறது. 133 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 222 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. 284 கோடியே 2 இலட்சம் ரூபாய் அளவுக்கான நலத்திட்ட உதவிகள் 50 ஆயிரத்து 88 பேருக்கு வழங்கப்படவிருக்கிறது. மொத்தமாக சொன்னால், ஆயிரத்து 368 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் விழாவாக, இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய ஈரோட்டின் நல்முத்து அமைச்சர் முத்துசாமி அவர்களை பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.
அடுத்து புதிய அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் உங்கள் அரசின் முதல் அறிவிப்பாக நான் சொல்வது, ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
இரண்டாவது அறிவிப்பு - ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 15 கோடியே 37 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடமும், ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்திற்கு 8 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்களும் கட்டப்படும்.
மூன்றாவது அறிவிப்பு - சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராமங்கள், சென்னிமலை, சித்தோடு, நசியனூர், கே.சி.பாளையம் பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 15 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இதுமட்டுமல்லாமல், சத்தியமங்கலம் மற்றும் நம்பியூர் ஒன்றியங்களுக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டம், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பவானிசாகர் ஒன்றியத்திற்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.
நான்காவது அறிவிப்பு - அந்தியூர் ஒன்றியத்திலுள்ள கத்திரிமலைப் பகுதி மலைகிராம மக்களின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றும் வகையில், 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மின் இணைப்பு வசதிகள் வழங்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு – மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டத்தில் குரங்கன்பாளையம் நீர்ப்பாசன அமைப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் உழவர்களுக்கு பலனளிக்கும் வகையில், 15 கோடி ரூபாய் செலவில், இந்தத் திட்டம் மேம்படுத்தப்படும்.
அடுத்து, ஆறாவது அறிவிப்பு - உயர்கல்வித் துறையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில், 10 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உலகத் தரத்திலான விளையாட்டு மைதானம், நூலக வசதிகள் மற்றும் குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்.
ஏழாவது அறிவிப்பு - ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய 15 துணை சுகாதார நிலையங்களுக்கு, 6 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.
எட்டாவது அறிவிப்பு - பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் திருக்கோயில் மற்றும் வீர நாராயணப் பெருமாள் திருக்கோயில் பக்தர்களுக்கான வசதிகள், 10 கோடி ரூபாய் செலவில் அமைத்துத் தரப்படும்.
இவை எல்லாம் விரைவில் நிறைவேற்றப்படும்! வெறும் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, கண்டுகொள்ளாமல் போகும் அரசு இல்லை இது. சொன்னதை செய்வோம் என்று செய்து காட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நடக்கும் உங்கள் ஸ்டாலினுடைய அரசு இது என்று ஸ்டாலின் கூறினார்.