பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு!
பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து 120 நாள்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணை அந்த மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசன வசதிக்கு நீர் திறக்கப்படுகிறது.
இதையும் படிக்க | மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2024-2025-ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள 15,743 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 25.12.2024 முதல் 23.04.2025 வரை 120 நாட்களுக்கு மொத்தம் 5,184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15.743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.