'குக்கு வித் கோமாளி'யின் டைட்டில் மாறுகிறதா?' - பின்னணி என்ன?
விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக்கு வித் கோமாளி. சின்னத்திரை, சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள, சமையலை ஜாலி கேலியுடன் அணுகும் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம்.
சிலருக்கு சீரியல், சினிமாக்களில் கிடைத்ததைவிட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அதிக புகழ் வெளிச்சம் கிடைத்தது. உதாரணம் குறிப்பிட வேண்டுமானால் ஷிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தந்த புகழை இந்த நிகழ்ச்சி அவருக்குத் தந்தது.
விஜய் டிவியில் முதல் நான்கு குக்கு வித் கோமாளி சீசன்களைத் தயாரித்தது ரஊஃபா தலைமையிலான 'மீடியா மேஷன்ஸ்' நிறுவனம்.
ஆனால் கடந்தாண்டு மீடியா மேஷன்ஸ் நிறுவனம் விஜய் டிவியிலிருந்து வெளியேற, நிகழ்ச்சியின் கடந்தாண்டு சீசனின் (5வது) தயாரிப்புப் பொறுப்பும் வேறு தயாரிப்பு நிறுவனத்துக்குச் சென்றது. இதனால் இந்த நிகழ்ச்சியின் அடையாளமாகத் திகழ்ந்த செஃப் தாமு வெங்கடேஷ் பட் கூட்டணியும் உடைந்தது.
மீடியா மேஷன்ஸ் நிறுவனம் சன் டிவியில் தயாரித்த 'டாப் குக்கு டூப்பு குக்கு' நிகழ்ச்சிக்குச் சென்றார் பட். அவருக்குப் பதில் `குக்கு வித் கோமாளி'க்கு வந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.
இந்நிலையில் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 வரும் பொங்கல் பண்டிகையுடன் முடிகிறது. அடுத்த சில மாதங்களில் குக்கு வித் கோமாளியின் அடுத்த சீசன் தொடங்கப்பட வேண்டும்.
ஆனால் வரும் சீசனில் 'குக்கு வித் கோமாளியின் பெயர் மாற்றப்படலாம் என்கிற பேச்சுக்கள் நிகழ்ச்சி தொடர்புடைய வட்டாரங்களில் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.
இது தொடர்பாக நாம் விசாரித்தபோது,
''டிவிக்களில் வழக்கமா போயிட்டு இருந்த சமையல் நிகழ்ச்சிகளின் பார்மட்டை உடைச்சது இந்த நிகழ்ச்சிதான். வழக்கமான பழைய நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆடியன்ஸ் மட்டும் தான் இருந்தாங்க. ஆனா இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள், பெண்கள், பெரியவர்கள் என எல்லாத் தரப்பினரையும் கலந்து கட்டிய ஒரு ஆடியன்ஸ் இருக்காங்க. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்க செலிபிரிட்டிகள் கிட்டயும் ஆர்வம் அதிகரிச்சிட்டே வருது. நிகழ்ச்சியில கலந்துக்கிடறவங்களுக்கு சினிமாவுல நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது தான் அதற்கு முக்கியக் காரணம். முதல் நான்கு சீசன் வரை எந்தச் சிக்கலும் இல்லை. ஐந்தாவது சீசன்ல தயாரிப்புப் பொறுப்பு கை மாறினப்பவே அதே டைட்டில் இருக்கு இல்லைங்கிற ஒரு சந்தேகம் எல்லோருக்கும் எழுந்தது. ஆனால் ஐந்தாம் சீசன் அதே டைட்டிலுடன் தான் ஒளிபரப்பாச்சு.
டைட்டில் உரிமை சேனல் வசமே இருந்தாலும் மேக்கிங் வேறொரு டீம் வசம் இருந்த போது வச்ச டைட்டில் எனச் சிலர் நினைக்கிறதாகவும் அதனால் இந்த டைட்டிலை மாத்தி புதுசா ஒரு டைட்டில் வச்சு பிரபலப்படுத்திக்கிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கிறதாகவும் சொல்றாங்க' என்கின்றனர்.
எனினும் இது தொடர்பாக எந்தவொரு இறுதி முடிவையும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இன்னும் எடுக்கவில்லையாம். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த ஓரிரு மாதங்கள் கழித்தே நிகழ்ச்சி தொடங்கும் என்பதால் தொடங்கும் போது தீர்மானித்துக் கொள்ளலாம் என இருக்கிறார்களாம்.