China: வேலை செய்வதாக நடிக்க ரூ.300 செலவழிக்கும் மக்கள்; அதிர்ச்சிப் பின்னணி; வேலையின்மையின் அவலம்
சீனாவில் வளர்ந்துவரும் வேலைவாய்ப்பின்மைக்கு இடையில், வேலை பார்ப்பது போலக் காட்டிக்கொள்வதற்கு மக்கள் பணம் செலவழித்து வருகின்றனர். வேலை இல்லாமையை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து மறைக்க விரும்புவர்களுக்கு உதவிவருகிறது ஒரு நிறுவனம்.
இங்கு ஒரு நாள் வேலை செய்வதுபோலக் காட்டிக்கொள்ள 30 யுவான் இந்திய மதிப்பில் 290 ரூபாய் பெறப்படுகிறது.
இவர்கள் அலுவலகம், உணவு, கணினி மற்றும் தொலைபேசியுடன் கூடிய வேலை செய்யுமிடம் ஆகியவற்றைக் கொடுக்கின்றனர். இதில் நீங்கள் ஊழியர்களாக மட்டுமில்லாமல் பாஸ்ஸாகக்கூட இருக்கமுடியும். அதற்கான தனி கேபின்கள், பெரிய சேர்களையும் வழங்குகின்றனர்.
சீனாவில் வேலைவாய்ப்பின்மை முக்கியப் பிரச்னையாக வளர்ந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
சமூக மற்றும் தனிப்பட்ட அழுத்தம் காரணமாக பலரும் தங்களுக்கு வேலை இல்லாததை மறைக்க முற்பட்டு வருகின்றனர். உதாரணமாக இணையவழி வணிக நிறுவத்தில் பணியாற்றிய ஹாங்சோ என்ற நபர், ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து நாள் முழுவதும் வேலைகளுக்கு விண்ணப்பங்களை அனுப்புகிறார். ஆனால் குடும்பத்தினரிடம் இப்போதும் பணியில் இருப்பதாகவே கூறி வருகிறார். "அவர்களைக் கவலையில் தள்ள விருப்பமில்லை" எனக் கூறுகிறார்.
"வேலை செய்வதுபோல காட்டிக்கொள்வதற்கான" நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகி வருவது கவலையளிப்பதாகவும், வேலையின்மையை கையாள இது மிகவும் மோசமான வழி என்றும் நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
இது வெற்றியாளராக இருப்பதற்கான சமூக அழுத்தம், வேலையின்மையால் ஏற்படும் களங்கத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்கின்றனர்.
நிறுவனங்களின் லே ஆஃப் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஊழியர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி மன அழுத்தத்துக்கு வழிவகுக்கும் என்பதால் திடீரென வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பது கவலை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.