Deepavali: பலகாரங்களோடு சாப்பிட வேண்டிய தீபாவளி லேகியம் - வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்!
மற்ற நாள்களில் எத்தனை விதமான இனிப்பு, காரம் சாப்பிட்டாலும், தீபாவளி நேரத்தில் வெல்லம் சேர்த்துச் செய்த அதிரசம், சர்க்கரை போட்டுச் செய்த அதிரசம், தேன்குழல், சோமாஸ், கேசரி என்று விதவிதமாக வெளுத்துக்கட்டுவது ஒரு தனி சந்தோஷம்தான். மற்ற நாள்களில் சாப்பிடும் இனிப்பும் காரமும் சட்டென்று ஜீரணித்துவிடும். தீபாவளியன்று நாம் சாப்பிடும் பலகாரங்களை ஜீரணிக்க மட்டும் கட்டாயம் தீபாவளி லேகியம் தேவைப்படும். இதுவும் கடைகளில் கிடைக்கிறது என்றாலும், வீட்டில் செய்வதுபோல வருமா?
தேவையானவை:
நல்லெண்ணெய் - 25 கிராம்,
மல்லி (தனியா) - 50 கிராம்,
மிளகு - 25 கிராம்,
சீரகம் - 25 கிராம்,
ஓமம் - 25 கிராம்,
சுக்கு - ஒரு துண்டு,
பனை வெல்லம் - 500 கிராம்,
அதிமதுரம் - ஒரு துண்டு,
சித்தரத்தை - ஒரு துண்டு,
கண்டந்திப்பிலி - ஒரு டேபிள்ஸ்பூன்,
அரிசித்திப்பிலி - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் - 50 கிராம்,
தேன் - 2 டேபிள்ஸ்பூன்,
விரலி மஞ்சள் - ஒரு துண்டு.
செய்முறை:
தேன், எண்ணெய், நெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் வெயிலில் நன்றாகக் காய வைக்கவும். அதிமதுரம், சுக்கு, மஞ்சள், சித்தரத்தை, கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி இவற்றை நசுக்கி வைத்துக் கொள்ளவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் மல்லி (தனியா), மிளகு, சீரகம், ஓமம் இவற்றை வறுத்து, நசுக்கியவற்றையும் சேர்த்து வறுத்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் பனை வெல்லத்தை நசுக்கிப் போட்டு ஒரு கப் நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, கல், மணல் போக வடிகட்டி மீண்டும் அடுப்பிலேற்றி, வெல்லம் பாகாகும் வரை கொதிக்க விடவும்.
பிறகு, நல்லெண்ணெய் ஊற்றி, பொடித்து வைத்திருக்கும் பொடியைத் தூவி இடையிடையே நெய் விட்டுக் கிளறி இது ஆரம்பத்திலிருந்து முடியும் வரை அடுப்பை சிம்மிலேயே வைக்கவும். கைகளால் உருட்டும் பதம் வந்ததும் இறக்கி தேன் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கிளறி விடவும். இதுவே தீபாவளி லேகியம். தீபாவளி அன்று காலையில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு உருட்டிச் சாப்பிட்டு விடவும். தீபாவளி தவிர, மற்ற நாட்களிலும் இதைச் சாப்பிடலாம். வயிற்றுப் பிரச்னை எதுவும் அண்டாது.
தீபாவளி லேகியம் செய்ய முடியாதவர்கள் வெறும் ஓமம், சுக்கு, வெல்லம் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து பொடியாக்கி, அதில் தேன் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து ஒருவருக்கு ஒரு உருண்டை என்ற கணக்கில் சாப்பிட்டால், தீபாவளி லேகியம் சாப்பிட்ட நன்மை கிடைக்கும்.
காலையில் இஞ்சியைத் தோல் நீக்கி, மிக்சியில் அரைத்து சாறு எடுத்து, கால் கப் இஞ்சிச்சாறுக்கு 2 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
மாலை வேளைகளில் சுக்கு, மிளகு, தனியா, ஏலக்காய் சேர்ந்த கலவையில் தயாரிக்கப்பட்ட சுக்கு காபியைப் பனைவெல்லம் சேர்த்து அருந்தலாம். காலையில் இஞ்சிச்சாறு, மாலையில் சுக்கு காபி என எப்போதுமே அருந்தி வந்தால் செரிமானக் கோளாறு உள்ளிட்ட வயிறு தொந்தரவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.
இவை தவிர, மதிய உணவுடன் புதினா துவையல், புதினா ஜூஸை சேர்த்துக்கொள்ளலாம்.
ஓமத்தை வறுத்துப் பொடி செய்து, பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது ஓம வாட்டர் குடிக்கலாம். சீரகத்தண்ணீர் மற்றும் வெந்நீர் அருந்துவது, வெற்றிலை போடுவதன் மூலமும் செரிமானக் கோளாறுகளிலிருந்து காத்துக்கொள்ளலாம்.
ஹேப்பி தீபாவளி...!