Doctor Vikatan: உடல் எடையைக் கூட்டுமா மலச்சிக்கல் பிரச்னை?
Doctor Vikatan: என் வயது 35. என் உடல் எடையில் அடிக்கடி ஏற்ற, இறக்கங்கள் இருப்பதை உணர்கிறேன். எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் என்கிறார்கள் சிலர். அது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
மலச்சிக்கல் இருப்பதால் ஒருவருக்கு நேரடியாக உடல்பருமன் ஏற்படாது. ஆனால், அது மறைமுகமாக சில விஷயங்களை பாதிக்க வாய்ப்பிருப்பதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதைப் புரிந்துகொண்டால் இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு விளங்கும்.
மலச்சிக்கலில் பல வகை உண்டு. சிலருக்கு மலம் கழித்தாலும் முழுமையாகக் கழித்த உணர்வு இருக்காது. இன்னும் சிலருக்கு ஒருநாள் விட்டு ஒருநாள்தான் மலம் வெளியேறும். வேறு சிலருக்கு அந்த இடைவெளி இன்னும் அதிகமாகலாம். இப்படி சரியாக மலம் கழிக்காத பிரச்னையால், உடலின் வளர்சிதை மாற்றம் நிச்சயம் பாதிக்கப்படும். பசி உணர்வும் பெரிதாக இருக்காது. வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதன் விளைவாக உடல் எடையில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கலாம்.
மலச்சிக்கல் பாதிப்பால் உடல் எடை அதிகரிக்கும் என்பதற்கான நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் இல்லை. ஒருவரது செரிமானம் பாதிக்கப்படும்போது உடலின் இயக்கங்கள் அனைத்துமே பிரச்னைக்கு உள்ளாகும். அதில் உங்கள் குடல் இயக்கமும் பாதிப்புக்குள்ளாகும். குடல் சரியாக வேலை செய்யாவிட்டால், உடலியக்கமே மந்தமாக இருக்கும். எந்த வேலையும் செய்ய முடியாத நிலை இருக்கலாம். அதன் காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கலாம். மற்றபடி இரண்டுக்கும் நேரடியான தொடர்பில்லை.
எனவே, உங்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து முதலில் அதை சரி செய்யப் பாருங்கள். குடல் இயக்கம் சீரானால், செரிமானமும் சீராகும். உடலளவிலும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். எடை குறையவும் வாய்ப்பு உள்ளது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.