'நானே நேர்ல வரேன்' அப்பாயின்ட்மென்ட் கேட்ட போராட்டக்குழுவுக்கு விஜய் பதில் - பரந...
``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆட்சியர் விளக்கம்
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது. அதோடு பல சர்ச்சைகளும் எழுந்தது. ஜாதிய ரீதியாக தன்னை மாடுபிடிக்க அனுமதிக்கவில்லை எனவும் காவல்துறையினர் தாக்கியதாகவும் தமிழரசன் என்ற மாடுபிடி வீரர் குற்றம் சாட்டியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது சமூகவலைதளங்களில் பரவி, விமர்சிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து மதுரை கலெக்டர் சங்கீதா விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025 ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அவனியாபுரம் (14.01.2025), பாலமேடு (15.01.2025) மற்றும் (16.01.2025) ஆகிய தினங்களில் நடைபெற்றது. மேற்படி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேற்படி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களின் உடற்தகுதி மற்றும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் மட்டுமே ஆன்லைன் விண்ணப்பத்தில் கோரப்படுகிறது. இதில் இனம், மதம் போன்ற எவ்வித விவரங்களும் கோரப்படுவதில்லை. போட்டியில் பங்கேற்க வரும் மாடுபிடி வீரர்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சுற்றுக்கு 50 நபர்கள் வீதம் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேற்படி போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும் மாடுபிடிவீரர்களுக்கும் 1 மணி நேரம் சமவாய்ப்பு வழங்கப்படுகிறது. மேற்படி போட்டிகளில் சமூக பாகுபாடுகள் ஏதும் இல்லை. மேலும் போட்டியின் நிறைவு நேரத்தினை கருத்தில் கொண்டு போட்டியின் முடிவில் கடந்த சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மாடுபிடி வீரர்களை கொண்டு இறுதி சுற்று நடத்தப்பட்டு சிறந்த மாடுபிடிவீரர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.
மேலும், கடந்த 15.01.2025 அன்று பாலமேடு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஜாதி பாகுபாடு காரணமாக தமிழரசன் என்பவர் கலந்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், தனது டோக்கன் எண் 24 என்றும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழரசன் என்பவரின் டோக்கன் எண் 204, மேலும் அவர் போட்டிக்கு தாமதமாக வந்ததால் 9 -வது சுற்றில் களமாட இருந்தார் (401-450 நபர்கள்) 8-வது சுற்று முடிக்கப்பட்டபோது மழை மற்றும் நேரமானதால் இறுதியாக சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான சுற்று மட்டும் நடத்தப்பட்டு, 9-வது சுற்று நடத்தப்படாமல் நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. தமிழரசன் என்பவர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது உண்மைக்கு புறம்பானவை" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.