விளம்பரம் தேவைப்படாத சூப்பர் ஸ்டார் அஜித் குமார்: நடிகர் மாதவன்
Kumbh Mela: 7 அடி நவீன பரசுராமர், தலையில் புறாவுடன் வரும் சாது; கவனத்தை ஈர்த்த கும்பமேளா காட்சிகள்!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய கும்பமேளாவில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். அதிக அளவில் சாதுக்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.
கும்பமேளாவின் பிரதான நாள்களில் ஒன்றாக கருதப்படும் மெளனி அமாவாசையன்று 12 ஆயிரம் சாதுக்கள் நாகா சாதுக்களாக மாற இருக்கின்றனர். அதோடு அன்றைய தினம் மட்டும் 8 முதல் 10 கோடி பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யும் படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதலாக 20 சதவீதம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏழு அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கும்பமேளாவிற்கு வரும் வித்தியாசமான சாதுக்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். சந்நியாசிகள் தாங்களே ஷெட் அமைத்து தங்கி இருக்கின்றனர். ஆத்ம பிரேம் கிரி மகாராஜா என்ற பாபா அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அவர் 7 அடி உயரம் இருக்கிறார். உடல் மிகவும் கட்டுமஸ்தானதாக இருக்கிறது. காவி உடையணிந்து ருத்ராட்ச மாலை அணிந்து கம்பீரமாக காட்சியளிக்கும் அவரை நவீன பரசுராமரின் அவதாரம் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். ஒரு நேரத்தில் ஆசிரியராக பணியாற்றிய ஆத்ம பரம கிரி, அதன் பிறகு சனாதன தர்மத்தை பரப்புவதற்காக நேபாளத்தில் தங்கி இருந்தார். தற்போது ரஷ்யாவில் இருக்கும் ஆத்ம பரம கிரியின் உடலமைப்பை பார்த்து அவரை சிலர் மஸ்குலர் பாபா என்று கூட அழைக்கின்றனர்.
இதே போன்று மற்றொரு பாபா தலையில் புறாக்களுடன் கும்பமேளாவில் கலந்து கொண்டுள்ளார். மகரிஷி ராஜ்புரி ஜி மகாராஜ் என்ற அந்த பாபா கும்பமேளாவில் தலையில் புறாவுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த புறா மகரிஷியின் தலையில் கடந்த 8 ஆண்டுகளாக இருப்பதாக அவரது பக்தர்கள் தெரிவித்தனர். மகரிஷி ராஜ்புரி எங்கு சென்றாலும் அவருடன் புறா செல்வது வழக்கம் என்று அவருடன் இருப்பவர்கள் தெரிவித்தனர். அவருடன் இருக்கும் புறா மகரிஷி சாப்பிட்டாலும், உறங்கினாலும், என்ன செய்தாலும் அவருடன் இருக்கும்.
இது குறித்து பாபா கூறுகையில்,''புறா அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகும். உயிர்களிடத்தில் கருணை மற்றும் இரக்கத்தை கற்றுக்கொடுக்கிறது. இந்த புறா எனது தலையில் கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக இருக்கிறது. அது இருப்பது எனக்கு எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உயிர்களுக்கு சேவை செய்வது நமது கடமை. அதைத்தான் நான் செய்கிறேன். எங்களது நோக்கம் வாழும் உயிர்களுக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்பதுதான்''என்றார். பாபாவின் வீடியோக்கள் சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.