சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் அர்மேனியாவுக்கு அங்கீகாரம் -மத்திய வெளியுறவுத்த...
Doctor Vikatan: நத்தையிலிருந்து தயாரிக்கப்படும் snail mucin சீரம்... Glass skin தருமா?
Doctor Vikatan: என்னுடைய வெளிநாட்டுத் தோழி, தன் சரும அழகைப் பராமரிக்க நத்தையிலிருந்து எடுக்கப்படும் ஸ்னெயில் மியூசின் (snail mucin serum) சீரம் பயன்படுத்துவதாகச் சொல்கிறாள். அது இப்போது இந்தியாவிலும் பரவலாகக் கிடைக்கிறது என்கிறாள். ஸ்னெயில் மியூசின் சீரம் உண்மையிலேயே சரும அழகை மேம்படுத்துமா... கொரியன் பெண்களின் கண்ணாடி சருமத்துக்கு அதுதான் காரணம் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
ஸ்னெயில் மியூசின் (snail mucin serum) சீரம் என்பது சருமத்துக்கு அதிகபட்ச ஹைட்ரேஷனை, கொடுக்கக்கூடியது. ஹைலுரானிக் ஆசிட் போன்று செயல்படக்கூடிய இது, சருமத்தின் நீர்த்துவத்தை அதிக அளவில் தக்கவைக்க உதவக்கூடியது. அதாவது ஒரு ஸ்பான்ஜ் போன்று செயல்பட்டு சருமத்தின் நீர்த்துவத்தைத் தக்கவைக்கும்.
கொரியன் ஸ்கின்கேர் தயாரிப்புகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையில் பலன் தருமா என்றால் நிச்சயம் தரும். அதே சமயம், சரும அழகைப் பராமரிக்க இது மட்டும்தான் சரியான சாய்ஸா என்றால் நிச்சயம் இல்லை. அதாவது இது சருமத்துக்கு நல்லதுதான்... ஆனால், இது அவசியம் என்பதும் கிடையாது. இந்த ஸ்னெயில் மியூசின் சீரம் தயாரிக்க, ஏராளமான நத்தைகள் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதையும் யோசிக்க வேண்டும்.
ஸ்னெயில் மியூசினைவிடவும் சிறந்த சீரம்கள், செராமைட்ஸ், மாய்ஸ்ச்சரைசர், தயாரிப்புகள் எத்தனையோ உள்ளன. எனவே, உங்கள் தோழி சொன்னதற்காக இதைத் தேடிப்பிடித்து வாங்கிப் பயன்படுத்தியே தீர வேண்டும் என்ற அளவுக்கு இது அவசியமான ஒன்று கிடையாது. உபயோகிப்பதில் தவறும் இல்லை. இங்கே இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கொரியன் பெண்களைப் போல நம்மூர்ப் பெண்களுக்கு கண்ணாடி போன்ற சருமம் பெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை.
கொரியன் ஸ்கின் கேரில் ஹெவியான மாய்ஸ்ச்சரைசர்கள் பயன்படுத்துவார்கள். விளக்கெண்ணெய் எவ்வளவு அடர்த்தியாக இருக்குமோ, அதைப் போன்ற அடர்த்தியான மாய்ஸ்ச்சரைசர்கள் பயன்படுத்துவார்கள். அவர்களுடைய சருமத்தின் தன்மைக்கு அவை பொருந்திவிடும். அதே பொருள்களை நாம் பயன்படுத்தினால், அடுத்த நாளே பருக்கள் வந்துவிடும். பொரிப் பொரியாக வரும்.
எனவே, ஸ்னெயில் மியூசின் உள்பட எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் கொரியன் பெண்களைப் போன்ற கண்ணாடி சருமம் பெற வாய்ப்பில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.