அமித் ஷா மேஜையில் மாஜிக்கள் Files! சரணடைந்த எடப்பாடி?! | Elangovan Explains
Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி... தீர்வு என்ன?
Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும் வலி உயிரே போகிறது. பிறகு மெள்ள மெள்ள வலி குறைகிறது. திடீரென இப்படிப்பட்ட வலி ஏற்பட என்ன காரணம், இந்த வலி சில நாள்களில் சரியாகிவிடுமா, தொடருமா?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறியை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ளது பிளான்ட்டர் ஃபாசிடிஸ் (Plantar Fasciiitis) என்ற பாதிப்பாக இருக்கலாம் என்றே தெரிகிறது.
பிளான்ட்டர் ஃபாஸியா (Plantar Fascia) என்பது பாதத்தின் அடிப்பகுதியில் இயங்கும் தடிமனான ஒரு திசு. இந்தத் திசுவானது குதிகால் எலும்பை கால்விரல்களுடன் இணைக்கிறது. பாதத்தின் வளைவுக்கு உறுதியையும் வழங்குகிறது. கால்களின் வடிவத்தைப் பராமரிக்கவும், வாக்கிங், ஜாகிங் மேற்கொள்ளும்போது அந்த இயக்கத்தை எளிதாக்கவும் வில்லின் நாண் போல ஊக்கசக்தியாக பிளான்ட்டர் ஃபாசியா செயல்படுகிறது. இந்தப் பகுதி பாதிக்கப்படும்போது கால்களில் வலி உண்டாகும். அதையே பிளான்ட்டர் ஃபாசிடிஸ் (Plantar Fasciiitis) என்கிறோம்.
உடல் பருமன்தான் இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம். அது தவிர, செருப்போ, ஷூவோ நம் கால்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கும்போது குதிகால் வலி வரும். கால்களைக் கோணலாக வைத்து நடப்பதாலும் வரும். புதிதாக ஹீல்ஸ் அணிய ஆரம்பித்திருப்போருக்கும் குதிகால் வலி வரும். குதிகால் பகுதிகளில் உப்பு படிமானம் சேர்கிறதா என்பதையும் செக் செய்ய வேண்டும். குதிகால் வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற தீர்வை நாட வேண்டும்.
பிளான்ட்டர் ஃபாசிடிஸ் பாதிப்பின் விநோத தன்மையே, காலையில் எழுந்து முதல் அடி வைக்கும்போது கடுமையாக வலிப்பதுதான். அதாவது நீண்ட ஓய்வுக்குப் பிறகு எடுத்து வைக்கும் முதல் அடியில் தீவிர வலியை உணர முடியும்.
இந்த அதிகாலை வலியானது பெரும்பாலும் குதிகாலில் கூர்மையான ஒரு பொருளால் குத்துவது போன்ற உணர்வை உண்டாக்கும். அமர்ந்திருத்தல், உறங்குதல் போன்ற செயலற்ற காலங்களில் பிளான்ட்டர் ஃபாசியா தசைகள் இறுக்கமடைந்து, சுருங்குவதால் இந்த வலி உண்டாகிறது. திடீரென காலில் எடை விழும்போதும் வலி, இறுக்கம் மற்றும் எரிச்சல் அதிகரிக்கும்.

மருத்துவரை அணுகினால், உங்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் அறிந்து சிகிச்சை அளிப்பார். பிளான்ட்டர் ஃபாசியா மற்றும் அதனுடன் தொடர்புடைய தசைகளை பலப்படுத்த துண்டு (Towel) உதவியுடன் செய்யும் நீட்சி பயிற்சியையும் கற்றுக்கொடுப்பார்.
பிளான்ட்டர் ஃபாசியாவில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கவும், சரியான கால் சீரமைப்பை ஊக்கப்படுத்தவும் போதுமான ஆதரவு கொண்ட காலணிகளைத் தேடுங்கள். ஷாக் அப்சார்பர் (Shock absorber) போல அதிர்ச்சியை உறிஞ்சி, குதிகால் அழுத்தத்தைக் குறைக்க குதிகால் மற்றும் முன்கால் பகுதிகளில் போதுமான குஷனிங் கொண்ட காலணிகள் பலன் தரும். சாதாரண காலணிகளை அணிந்தால் பாத வலி இன்னும் அதிகரிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். இது நிச்சயம் குணப்படுத்தக் கூடியதே.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
