ANNA university Case Updates! | DPDP ACT 2023 | RTI | IPL 2025 | CSK | Imperfect...
``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழாவில் பினராயி விஜயன்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
முண்டக்கை, சூரல்மல நிலச்சரிவில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டிகொடுக்கும் மாடல் டவுன்ஷிப் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நேற்று நடைபெற்றது.

கல்பற்றாவில் நடந்த தொடக்க விழாவில் முதல்வர் பினராயி விஜயன் அடிக்கல் நாட்டினார். வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
சுமார் 64 ஹெக்டேர் நிலத்தில் ஒரு குடும்பத்துக்கு 7 செண்ட் நிலத்தில் ஆயிரம் சதுர அடி அளவுள்ள வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது.
மூன்று கட்டங்களாக 402 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட உள்ளன. ஒரு வரவேற்பறை, மாஸ்டர் பெட்ரூம், 2 அறைகள், சமையல் அறை, ஸ்டோர் ரூம், படிப்பறை என வீட்டின் அமைப்பு இருக்கும்.
மேலும் மார்க்கெட், அங்கன்வாடி மையம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளும் கட்டப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "அனைவருடைய அனுமதியுடன் வயநாடு டவுன்ஷிப் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. துயர நிகழ்வு நடந்து 8 மாதம் ஆன நிலையில் மறுவாழ்வுக்கான திட்டம் தொடங்கப்படுள்ளது. மத்திய அரசின் நிதி இதுவரை கிடைக்கவில்லை. இனி கிடைக்குமா என தெரியவில்லை.

திருப்பி அடைக்கும் வகையிலான கடனாக மத்திய அரசு பணம் வழங்கி உள்ளது. பெரும் மழை துயரத்தை கடந்துவந்த நிலையில் வயநாடு துயரம் வந்தது. நம் மக்களின் மனிதநேயமும், அரசும் சேர்ந்து நின்றதால் அசாதாரண நிலையை கடந்துள்ளோம். போலீஸ், தீயணைப்புத்துறை, ராணுவம் வரும் முன்பே மக்கள் உதவிக்காக வந்துவிட்டனர். அனைவரும் ஒன்றிணைநது மறுவாழ்வுக்காகவும் வந்துள்ளனர்.
இந்த துயர நிகழ்வில் 266 பேர் இறந்தனர். 32 பேரை காணவில்லை. வீடு, தொழில் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு. 630 பேர் மண்ணில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டனர். நிலச்சரிவால் தனிமைப்படுத்தப்பட்ட 1300 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம்.

வயநாடு மறுவாழ்வுக்காக 2221 கோடி ரூபாய் நமக்கு வேண்டும். நாம் பெரிய தொகையை மத்திய அரசிடம் கேட்டிருந்தோம். ஆனால், 529 கோடி ரூபாய் திருப்பி செலுத்தும் கடனாக வழங்கியுள்ளனர். மக்கள் தினசரி வாழ்க்கைக்காக ஒதுக்கிவைத்த பணத்தை வயநாடு மறுவாழ்வுக்காக வழங்கினார்கள். அவர்களுக்கு நன்றிசொல்லிக்கொண்டே இருக்கலாம். மக்கள் நம்முடன் நின்றால் எந்த சவாலையும் நாம் கடந்து செல்ல முடியும். எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது" என்றார்.
இந்த நிகழ்வில் வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி பேசுகையில், "சூரல்மலை, முண்டக்கை துயரத்தில் இரண்டு விஷயங்களை நினைவுகூருகிறேன். ஒன்று பேரிடரால் நமக்கு ஏற்பட்டது அளவிடமுடியாத துயரமாகும். மற்றொன்று அந்த துக்கத்திலும் மக்கள் சாதி, மதங்களை கடந்து ஒன்றாக இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட செயல் பாராட்டுக்குரியது.
ஒருபக்கம் துயரம் இருந்தாலும் மறுபக்கம் நமது ஒற்றுமையால் துயரத்தை கடந்துவருவதை பார்க்க முடிந்தது. வார்த்தையால் கூறமுடியாத அளவிலான துயரத்தை நாம் கடந்து வந்துள்ளோம். தொழில், வியாரபாரம், குடும்பம், வீடுகள், பள்ளிகள் என அனைத்தையும் இழந்தோம். பேரிடரின் நஷ்டத்தைப்பற்றி அனைவருக்கும் தெரியும். நாம் ஒன்றாக இணைந்து அதை கடந்துவர முயல்கிறோம். இந்த டவுன்ஷிப் திட்டம் மிகபெரிய முன்னெடுப்பாகும். பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விடுபட்டிருந்தால் அவர்கள் குறித்து பரிசீலிக்கப்படும்.

இந்த திட்டத்துக்கான பணம் விரைந்து வழங்கவேண்டியது உள்ளது. லோன் எடுத்தவர்கள் இந்த துயரத்துக்கு பிறகு பணம் செலுத்தமுடியாத நிலையில் உள்ளனர். நமது முயற்சியால் இதை அதிதீவிர பேரிடராக அறிவித்தனர்.
கர்நாடகா அரசு 100 வீடுகள் கட்டிக்கொடுக்க பணம் வழங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 100 வீடுகளை கட்டிக்கொடுக்க உள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக நின்று அனைத்து வசதிகளையும் செய்துதருவோம். உங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்கும் இந்த சமயத்தில் மக்களின் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். வீட்டுபணிகள் முடியும்வரை, இழந்தவைகள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்வரை நாங்கள் உங்களுடன் நிற்போம்" என்றார்.