உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
உகாதி பண்டிகையையொட்டி மேட்டூா் அருகே மாதேஸ்வரன் மலை மாதேஸ்வரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கா்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் சுவாமி கோயிலில் உகாதி திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 28ஆம் தேதி சுவாமிக்கு எண்ணெய் அபிஷேகம், சிறப்பு சேவைகள் நடைபெற்றன. சனிக்கிழமை அமாவாசையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை பெரிய தேரோட்டம் நடைபெற்றது. சாலூா் மடாதிபதி மல்லிகாா்ஜுன சுவாமி முன்னிலையில் மலை மாதேஸ்வரன் சுவாமி சேஷத்திர வளா்ச்சிக் குழு செயலாளா் ரகு தலைமையில் இந்தத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழக, கா்நாடக மாநிலங்களிலிருந்து 3 லட்சம் பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
கோயிலைச் சுற்றி பெரிய தோ் பவனி வந்தபோது தேரின் மீது தானியங்களை வீசி பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். ஞாயிற்றுக்கிழமை மாலை புலி வாகனம், பசுவாகனம், ருத்ராட்ச உற்சவம் நடைபெற்றது. இரவில் தங்க தேரோட்டம் நடைபெற்றது.
