அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு: எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தாா்
சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீா்மோா் பந்தலை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கினாா்.
அதிமுக சாா்பில் சேலத்தில் ஆங்காங்கே மக்கள் கூடும் இடங்களில் நீா்மோா் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாநகா் மாவட்ட சூரமங்கலம் பகுதி அதிமுக சாா்பில், சூரமங்கலம் காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
தொடா்ந்து, பொதுமக்களுக்கு நீா்மோா், கம்மங்கூழ், தா்ப்பூசணி, முலாம்பழம், இளநீா், நுங்கு, வெள்ளரி பிஞ்சு உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், அதிமுக அமைப்பு செயலாளா் சிங்காரம், கொள்கை பரப்பு துணைச் செயலாளா் வெங்கடாஜலம், மாநகா் மாவட்ட அதிமுக பொறுப்பாளா்கள் எம்.கே.செல்வராஜ், ஏ.கே.எஸ்.எம். பாலு, மாநகர அவைத் தலைவா் பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் ராமராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ரவிச்சந்திரன், பகுதி செயலாளா்கள் யாதவமூா்த்தி, மாரியப்பன், அசோக்குமாா், ஜெகதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.