செய்திகள் :

Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்!

post image

சென்னையில் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வரும் அகன் (பிரதீப் ரங்கநாதன்), காதல் தோல்வியில் உழன்று கொண்டிருக்கிறார். அவரின் மாமாவும் அமைச்சருமான அதியமான் அழகப்பனின் (சரத்குமார்) மகள் குறள் (மமிதா பைஜூ), அகனைத் தேற்றுவதோடு, தன் காதலையும் சொல்கிறார்.

அதை ஏற்க மறுக்கும் அகன், குறள் மீது நட்பு மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார். அதனால், மன விரக்தியில் குறள் வேறு ஊருக்குச் செல்கிறார். குறளின் பிரிவால், அவர் மீதான காதலை உணரும் அகன், அவரைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.

ஆனால், இப்போது அகனின் காதலைக் குறள் ஏற்க மறுக்கிறார். இதற்கு அடுத்து நடக்கும் சம்பவங்களே அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கும் 'டியூட்' திரைப்படம்.

Dude Review | டியூட் விமர்சனம்
Dude Review | டியூட் விமர்சனம்

காதல், காமெடி, நடனம், கோபம், சேட்டை ஆகியவற்றில் ஆங்காங்கே 'வழக்கமான பிரதீப் ரங்கநாதன்' தென்பட்டாலும், அவற்றைத் தாண்டி தன் கலாட்டாக்களால் கலகலப்பூட்டுகிறார் பி.ஆர். சில சிக்கலான எமோஷன் காட்சிகளையும் தெளிவாக அணுகி, இரண்டாம் பாதிக்குக் கணம் கூட்டுகிறார் பிரதீப்! 

முதற்பாதியில் விளையாட்டுப் பிள்ளையாகவும், இரண்டாம் பாதியில் எமோஷன்களைக் கையாளும் பெண்ணாகவும் தேவையான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார் மமிதா பைஜூ.

காமெடி, வில்லனிஸம், சென்டிமென்ட் என முப்பரிமாணத்தில் தன் அனுபவ நடிப்பால் மிளிர்கிறார் சரத்குமார். சம்பிரதாய கதாபாத்திரமாக மாற வேண்டிய கதாபாத்திரத்தை, சின்ன சின்ன முகபாவனைகளால் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் ஹ்ருது ஹரூன்.

டிராவிட் செல்வம், ரோகிணி, நேஹா ஷெட்டி, சத்யா ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

Dude Review | டியூட் விமர்சனம்
Dude Review | டியூட் விமர்சனம்

கலகலப்பான உலகிற்குத் தேவையான கலர்ஃபுல் ரங்கோலி கோலத்தைத் திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி. காமெடி காட்சிகளைக் கச்சிதமான கட்டுகளால் ரசிக்க வைத்ததோடு, எமோஷன் - காமெடி தராசை நேர்த்தியாக நிறுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன்.

சாய் அபயங்கர் இசையில், 'ஊறும் ப்ளட்', 'சிங்காரி' பாடல்கள் தாளம் தட்ட வைக்கின்றன. பின்னணி இசை, கலகல காட்சிகளில் ஆட்டம் போட வைப்பதோடு, எமோஷன் காட்சிகளுக்கு அழுத்தமும் கூட்டியிருக்கிறது.

சமகால இளைஞர்களின் கலர்ஃபுல் காதல் சடுகுடுவிற்கு இடையில், சாதிய மனநிலையின் கோரத்தையும் பேசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன்.

முன்னாள் காதலியின் கல்யாணத்தில் அகன் செய்யும் சேட்டையோடு தொடங்கும் முதற்பாதி, அவரின் குடும்பம், அகன் - குறள் உறவு எனக் கொஞ்சம் மெதுவாகவே மையக் கதையைத் தொடுகிறது.

அகனின் காதலைக் குறள் நிராகரிக்கும் இடத்திலிருந்து பரபரப்பாகும் திரைக்கதை, இடைவேளை வரை நிற்காமல் ஓடி சுவாரஸ்யம் கூட்டுகிறது.

சரத்குமார் கதாபாத்திரம் குறித்த ரகளையான விவரணைகள், அவர் எடுக்கும் அவதாரம், புதிய கதாபாத்திரங்கள், பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் யூ-டர்ன்கள் என எல்லாம் கைகொடுக்க, சுவாரஸ்யத்தைச் சிந்தவிடாமல் பட்டாசான இடைவேளையை அடைகிறது திரைக்கதை.

Dude Review | டியூட் விமர்சனம்
Dude Review | டியூட் விமர்சனம்

அழுத்தமான கருவைக் கொண்டிருக்கும் இரண்டாம் பாதி, தொடக்கத்தில் கலகலப்பான பாதையில் பயணித்தாலும், சிறிது நேரத்திலேயே எமோஷனல் ரோலர் கோஸ்டரில் ஏறுகிறது.

அகன், குறள் கதாபாத்திரங்களுக்கு இடையிலான அகமன மோதல்கள், குறள் கதாபாத்திரத்திற்கு எழும் குற்றவுணர்வு, பரஸ்பர அன்பு போன்றவற்றைப் பேசும் காட்சிகள் தேவையான தாக்கத்தைக் கொடுக்கின்றன.

மறுபுறம், அடுத்தடுத்த திருப்பங்கள், பரபர காட்சிகள், ஆங்காங்கே ஒன்லைன் காமெடிகள் என விறுவிறுப்பையும் தக்க வைத்திருக்கிறது திரைக்கதை. ஆக்ஷன், லாஜிக் மீறள், நம்பத்தன்மை இல்லாத திருப்பங்கள் என இறுதிக்காட்சியில் சறுக்கல்களும் எட்டிப் பார்க்கின்றன.

இவற்றுக்கிடையில், தன் வாழ்கையையே பணயம் வைத்து அப்பெண்ணுக்காக கதாநாயகன் ரிஸ்க் எடுக்க போதுமான காரணம் இல்லாதது இறுதிக்காட்சி வரை துருத்திக்கொண்டு நிற்கிறது. அதனால், ஆங்காங்கே டெம்ப்ளட்டான 'அதீத நல்ல மனசு கதாநாயகனாக' திகட்டவும் செய்கிறது கதாநாயகன் பாத்திரம். எல்லாவற்றுக்கும் 'காதல்' என்பது மட்டுமே பதிலாகாதே இயக்குநரே!

சாதிய ஆணவம், ஆணவக் கொலை, பெண்கள் மீதான அடக்குமுறை, அகமண முறை, தாலிக்குப் பின்னான ஆணாதிக்க உளவியல் எனப் பொறுப்பான சமூகக் கருத்துகளும், கூர்மையான வசனங்களும் கதைக் கருவை ஆழமாக்குகின்றன.

Dude Review | டியூட் விமர்சனம்
Dude Review | டியூட் விமர்சனம்

சிக்கலான சமூகப் பிரச்னையைத் தொடக்கத்தில் விளையாட்டுத்தனமாக அணுகினாலும், இறுதியில் அதற்கான முதிர்ச்சியான முடிவைத் துறுத்தலின்றி கொண்டு வந்து பாராட்டைப் பெறுகிறார் இயக்குநர். அதேநேரம், பெண்கள் மீதான கதாநாயகனின் வன்முறையைச் சாதாரணமாகக் கடந்து போவது ஏமாற்றம்.

கலர்புல் முக்கோணக் காதல் கலாட்டாவாக ரசிக்க வைத்ததோடு, சாதிவெறியின் கோர முகத்தைத் தோலுரித்து, நம்பிக்கையூட்டுகிறார் 'ட்யூட்'.

Bison Kaalamadan Review: அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பேசும் நெகிழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் டிராமா!

திருச்செந்தூரில் உள்ள வனத்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்த கிட்டானுக்கு (துருவ்) சிறுவயதிலிருந்தே கபடி ஆட வேண்டும் என்பது ஆசை... லட்சியம்! அவனது ஆசைக்குத் தந்தையின் அச்சம் தடையாக இருக்கிறது. இதற்கு தென்ம... மேலும் பார்க்க

Bison: "ரொம்ப நாளாக எனக்குள் அழுத்திக்கிட்டு இருந்த விஷயம்" - பைசன் குறித்து மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் 'பைசன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு ... மேலும் பார்க்க

``ஒவ்வொரு நடிகருக்கும் தீபாவளி திருப்புமுனையாக இருக்கும்'' - 3 படங்களுக்கும் குவியும் வாழ்த்துகள்!

இந்த வருடம் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ் சினிமாவின் 3 வளரும்-ஹீரோக்களின் படங்கள் வெளியாகியிருக்கின்றன. துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் டீசல் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டூட். ... மேலும் பார்க்க

"வட சென்னையில் இருந்து ஒரு ஈஸ்டர் முட்டை" - Ed Sheeran உடன் பாடியது பற்றி சந்தோஷ் நாரயணன்!

பிரபல ஆங்கில பாடகர் ED Sheeran உடன் மலையாள ராப் பாடகர் ஹனுமன் கைண்ட், தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் கைகோர்த்து உருவாக்கியிருக்கும் பாடல் Don't Look Down.ED Sheeran இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள ச... மேலும் பார்க்க

Rukmini Vasanth: ``சிறு புன்னகை சிதறினாள்" - ருக்மிணி வசந்த் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album

Rukmini Vasanth: "நேஷனல் க்ரஷ் என்பதை விட 'பிரியா' என அழைப்பதே பிடிக்கும்" - ஓப்பன் டாக்! மேலும் பார்க்க