Maharashtra Train Accident: தீவிபத்து வதந்தியால் வெளியே குதித்த பயணிகள்; ரயில் ம...
Explained: பிறப்புரிமை குடியுரிமை; `நோ’ சொன்ன ட்ரம்ப் - அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பாதிப்பு என்ன?
அமெரிக்க அதிபராக பதவியேற்ற கையோடு தனது முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் டொனால்டு ட்ரம்ப். அதில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்பு ‘பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது’ என்பதுதான். அதன்படி அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாத வெளிநாட்டு பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அங்கு குடியுரிமை கிடைக்காது.
இந்த முடிவு அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் ஒரு மிகப் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவு அமெரிக்காவில் தற்காலிக விசாக்களில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
பிறப்புரிமை குடியுரிமை என்பது பெற்றோரின் நாடு அல்லது குடியேற்றத்தை பொருட்படுத்தாமல், குழந்தைகள் தாங்கள் பிறந்த நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கான சட்டக் கொள்கையாகும். 1868-ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது சட்டத் திருத்தம், அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கவேண்டும் என்று கூறுகிறது.
இந்த நடைமுறையைத்தான் அதிரடியாக மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப். 30 நாட்களுக்குப் பிறகு இந்த உத்தரவு அமலுக்கு வந்தவுடன், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.
சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 54 லட்சம்+ இந்தியர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது அமெரிக்க மக்கள்தொகையில் தோராயமாக 1.47 சதவீதம் ஆகும். இதில் மூன்றில் இரண்டு பங்கு இங்கிருந்து சென்று குடியேறியவர்கள். அதே நேரம் 34% அமெரிக்காவில் பிறந்தவர்கள்.
ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டால், தற்காலிக வேலை விசாக்கள் அல்லது சுற்றுலா விசாக்களில் அமெரிக்கா சென்று அங்கே வசிக்கும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை கிடைக்காது. அது மட்டுமின்றி கிரீன் கார்டுக்காக காத்திருப்பவர்களும் இதில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்காவில் ‘பிரசவ சுற்றுலா’வை முடிவுக்குக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. பிரசவ சுற்றுலா என்பது ஒரு பெண் அமெரிக்காவுக்குகுச் சென்று குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒரு நடைமுறை. இதன் மூலம் அந்த பெண் தானாகவே அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுவிடுவார். இந்த பிரசவ சுற்றுலா செயல்முறையை அதிகமாக பின்பற்றுபவர்களில் இந்தியர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய நடவடிக்கையால் பல இந்திய தொழில்முனைவோர், மாணவர்கள், குடும்பங்கள் அமெரிக்காவில் வாய்ப்புகளைத் தேடுவதை விடுத்து, அதற்கு பதிலாக கனடா அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.
H-1B விசா வைத்திருப்பவர்களில் இந்தியர்களே பிரதானமாக இருக்கின்றனர். அதிகாரபூர்வ தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 3,86,000 H-1B விசாக்களில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கை இந்தியர்கள் பெற்றுள்ளனர். மேலும் அமெரிக்காவில் குடும்பங்களுடன் வாழும் பெரும்பாலோர் தங்கள் கிரீன் கார்டுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். பிறப்புரிமை குடியுரிமை ரத்து செய்யப்பட்டால், அமெரிக்காவில் பிறந்த அவர்களின் குழந்தைகள் தானாகவே குடியுரிமையை இழக்க நேரிடும். இது அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்று அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் 100 ஆண்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய கிரீன் கார்டுக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் ஒரே நம்பிக்கை அமெரிக்காவில் பிறக்கும் தங்கள் குழந்தைகள்தான். அந்த குழந்தைகளுக்கு 21 வயது ஆகும்போது குடியுரிமை இல்லாத தங்கள் பெற்றோரை அமெரிக்காவுக்கு அழைத்துக் கொள்ளமுடியும். ஆனால் இப்போது அதற்கு சாத்தியமில்லாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பலனும் இல்லை என்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை மேலும் ஓரங்கட்டவும், புலம்பெயர்ந்த குடும்பங்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கவும் மட்டுமே உதவும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இந்திய சமூகம் கணிசமாக பங்களிப்பதால், இது அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த புதிய குடியேற்றக் கொள்கைகளின் கீழ் பெருமளவிலான நாடுகடத்தல்கள், குடும்பப் பிரிவினைகள் மற்றும் பிற மனித உரிமை மீறல்களுக்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன் (ACLU) சுட்டிக்காட்டியுள்ளது.
இன்னொருபுறம் ட்ரம்ப்பின் இந்த நிர்வாக உத்தரவை எதிர்த்து பல மாகாணங்களைச் சேர்ந்த குடியேற்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதன்மூலம் இந்த உத்தரவு சட்டப்பூர்வ சவால்களை எதிர்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன.
ஒரு நிர்வாக உத்தரவு என்பது நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என்றாலும், அரசியலமைப்பின் விதிகளை மாற்றுவது என்பது ஒரு நீண்ட மற்றும் கடினமான நடைமுறை.
இதற்கிடையில், அனைத்து நிர்வாகத் துறைகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களும் இந்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான பொது வழிகாட்டுதலை 30 நாட்களுக்குள் வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின் முதல் வரி இவ்வாறு கூறுகிறது: "அமெரிக்க குடியுரிமையின் சலுகை என்பது ஒரு விலைமதிப்பற்ற பரிசு"
இந்தச் சூழலில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் அனைத்து இந்தியர்களையும் அடையாளம் கண்டு திரும்ப அழைக்கும் பணிகளை ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து இந்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
முதற்கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 18,000 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இருப்பினும், அமெரிக்காவில் மொத்தம் சட்டவிரோமாக எத்தனை இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியாததால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குடியுரிமை மற்றும் குடியேற்ற சீர்திருத்தம் தொடர்பான போராட்டம் தீவிரமடைந்து வரும் நேரத்தில், லட்சக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்த சர்ச்சைக்குரிய கொள்கையை வடிவமைப்பதில் சட்ட சவால்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியில், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்றங்களை பொறுத்து இதன் விளைவு இருக்கும் என்கின்றனர் உலக அரசியல் நோக்கர்கள்.