முதல் டி20: 13 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்த இந்திய அணி!
சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கு; கல்குவாரிகளில் 2வது நாளாகத் தொடரும் அளவிடும் பணி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாகத் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக, திருமயம் அருகே உள்ள துலையானூரில், அதன் அருகே உள்ள வலையன்வயலைச் சேர்ந்த ராசு மற்றும் ராமையா ஆகியவர்கள் நடத்தி வரும் ஆர்.ஆர் குரூப்ஸ் என்ற பெயரிலான கிரஷர் மற்றும் கல்குவாரிக்கு எதிராகத் தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார். இந்நிலையில்தான், ஜகபர் அலி கடந்த 17 ஆம் தேதி அன்று தொழுகை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது குவாரி உரிமையாளர்களின் சதித்திட்டத்தால் மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, இது தொடர்பாக திருமயம் காவல்துறையினர் உயிரிழந்த ஜகபர் அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்குப்பதிவு செய்து, இதில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், விபத்தை ஏற்படுத்தி கொலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் காசிநாதன் ஆகிய நான்கு பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை வருகின்ற பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பெற்று, புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். அதோடு, இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராமையாவை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில்தான், சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரிகளைக் கண்டறிவதற்காக இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டன. கரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை உதவி இயக்குநர்களைக் கொண்ட குழுவும், புவியியலாளர் இரண்டு பேரைக் கொண்ட குழுவும், ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் ராமையாவுக்குச் சொந்தமான கல்குவாரிகளில் ட்ரோன் உதவியுடன் அளவிடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இதில், புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோரும் இந்த ஆய்வில் இணைந்துள்ளனர். இந்த குவாரிகளில் நேற்று கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் புவியியலாளர்கள் ட்ரோன் உதவியுடன் அளவிடும் பணியை மேற்கொண்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக திருமயம் அருகே உள்ள மலைக்குடிபட்டியில் உள்ள அனுமதி பெற்ற கல்குவாரிகளிலும் அளவிடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றுடன் ஆய்வு மற்றும் அளவிடும் பணி முடிவடையும் என்றும் சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் எவ்வளவு தூரம் சட்ட விரோதமாகக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்ற அளவீட்டைக் கனிமவளத்துறை இணை இயக்குநருக்கு அறிக்கையாகச் சமர்ப்பிக்க உள்ளனர் என்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY