சென்னையில் கிரிக்கெட் போட்டி: ஜன.25 புறநகர் ரயில் சேவை மாற்றம்!
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கழிவறையில் பதுங்கிய எஸ்ஐ - பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உத்தரவு!
பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கழிவறையில் பதுங்கி இருந்த விவகாரத்தில் எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சதீஸ்குமார். இவர், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஊத்துமலை செல்லும் சாலையில் உள்ள வீராணம் கிராமத்தில் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி சுவர் ஏறி குதித்து நுழைந்து கழிவறையில் பதுங்கி இருந்தார். அப்போது பாத்ரூமிற்கு வந்த அந்த வீட்டின் உரிமையாளர், கழிவறையில் மர்மநபர் யாரோ பதுங்கியிருப்பதாக பார்த்துவிட்டு பின்பக்க கதவை பூட்டி சாவி எடுத்ததுடன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சுதாரித்த சார்பு ஆய்வாளர் சதீஸ்குமார், உடனடியாக கழிவறையில் இருந்து வெளியேறி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பாத்ரூமில் பதுங்கியிருந்த நபர் 'திபுதிபு'வென ஓட்டம்பிடித்து தப்பவும், வீட்டின் உரிமையாளர் அவரை விரட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அது முடியாமல் போகவே, ஆய்வாளர் சதீஸ்குமார் தப்பிச்செல்வதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். சார்பு ஆய்வாளர் தப்பிச்செல்லும் அவசரத்தில் தான் ஓட்டிவந்த டூவீலரை அங்கேயே விட்டுவிட்டு அவருடன் வந்த இன்னொரு காவலரான கார்த்திக் என்பவரின் டூவீலரில் அங்கிருந்து வேக, வேகமாக தப்பி சென்றுவிட்டார்.
இவை அனைத்தையும் செல்போனில் வீடியோவாக பதிவு செய்த வீட்டின் உரிமையாளர், தப்பிச்சென்ற நபரை போலீஸே தனது டூவீலரில் ஏற்றிக்கொண்டு செல்வதை அறிந்து விசாரிக்கையில், தப்பிச்சென்றவர் வி.கே.புதூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் சதீஸ்குமார் என அவருக்கு தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் வீராணம் பொதுமக்களிடையே காட்டு தீயாய் பரவியதை அடுத்து மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல் அதிகாரியே, அத்துமீறி நடப்பது சரியா? எனக்கேட்டு ஊர் மக்கள் அனைவரும் சார்பு ஆய்வாளர் சதீஸ்குமாருக்கு எதிராக ஊத்துமலை செல்லும் சாலையில் அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் நடத்தினர். ஆனால், 'தப்பிச்சென்ற சார்பு ஆய்வாளர் சதீஸ்குமார் இங்கு வரவேண்டும், அவர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறி பொதுமக்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமாவதை அறிந்து தென்காசி மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் வேணுகோபால், ஆலங்குளம் துணை கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன், ஆடிவேல், காசி பாண்டியன், செந்தில், வனசுந்தர் உள்பட ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.சதீஸ்குமார் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வி.கே. புதூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில் எஸ்.ஐ. சதீஸ்குமாரை பணிஇடைநீக்கம் செய்து மாவட்ட காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சார்பு ஆய்வாளருக்கு உதவியாக செயல்பட்ட காவலர் கார்த்திக், செங்கோட்டை காவல் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்" என்றனர்.
பொதுமக்கள் தரப்பில் பேசியவர்கள், "பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.ஐ.சதீஸ்குமார், இதற்கு முன்பு பணியாற்றிய இடங்களிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபடும் நபர்கள் காவல்துறையில் இருப்பது, அத்துறைக்கே களங்கம் விளைவித்துவிடும். ஆகவே, அவரை பணியிடை நீக்கம் செய்தது மட்டும் போதாது. அவர் மீது சொல்லப்படும் அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரித்து எஸ்.ஐ.சதீஸ்குமார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். தென்காசி மாவட்டத்தில் எஸ்.ஐ. ஒருவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பாத்ரூமில் பதுங்கி இருந்த சம்பவம் மாவட்ட காவல்துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது.