Health: மல்டி வைட்டமின் மாத்திரைகள்... யார், எவ்வளவு நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?!
பொதுவாக நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உணவில் இருந்தே கிடைக்கும். அப்படி உடலுக்கு தேவையான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்காதபட்சத்தில் மல்டி வைட்டமின் மாத்திரைகளை சிலர் எடுத்துக்கொள்வார்கள். மல்டி வைட்டமின் எடுத்துக்கொள்வதனால் நமது உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்குமா; ஒரு நாளைக்கு எத்தனை மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்; அனைவரும் எடுத்துக்கொள்ளலாமா... மல்டி வைட்டமின் சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் டாக்டர் ராஜேஷ்.
மல்டி வைட்டமின் மாத்திரைகள் அனைவரும் எடுத்துக்கொள்ளலாமா?
ஆரோக்கியமான உணவு பழக்கம் இருப்பவர்களுக்கு தங்கள் உடலுக்கு தேவைப்படும் சத்துக்கள் பெரும்பாலும் உணவிலிருந்து கிடைத்து விடும். அவர்கள் மல்டி வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் பெரும்பாலும் வராது. ஆனால், இப்படி ஆரோக்கியமான உணவு முறையை ஃபாலோ செய்பவர்களின் சதவிகிதம் இந்தக் காலக்கட்டத்தில் குறைந்து கொண்டே வருகிறது. அதனால், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாதவர்கள், போதிய சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்காதவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளைப் பரிந்துரைக்கலாம்.
மல்டி வைட்டமின் மாத்திரைகள் எவ்வளவு நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
உலக சுகாதார அமைப்பின்படி நமது உடல் சீராக செயல்பட ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சத்துக்களின் அளவினை ஆர்.டி.ஏ எனக் குறிப்பிடுகிறது. பொதுவாக இவை நாம் உண்ணும் உணவில் இருந்தே கிடைத்துவிடும். இப்படி போதிய சத்துக்கள் கிடைக்காதவர்கள் மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். இது, ஒரு நாளைக்கு நமது உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை கொடுக்கிறது. கல்லீரல் பாதிப்புடையவர்களுக்கு கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ, டி, இ, கே போன்றவை உடலில் குறைவாகவே உறிஞ்சப்படும். அவர்களுக்கு இந்த வைட்டமின்களை கொடுக்க வேண்டி வரும். சர்க்கரை நோய், இதய நோய் இருப்பவர்களுக்கு அவர்கள் உடலுக்கு தேவைப்படும் சத்துக்களின் அளவைப் பொறுத்து மல்டி வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எந்த வயதிற்கு மேல் மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்?
சத்துக்குறைபாடு இருந்தால், குழந்தைகளுக்குக்கூட வைட்டமின் மாத்திரைகள் தேவைப்படும். குறிப்பாக வைட்டமின் 'டி'. தற்போது இது வைட்டமின் டிராப்ஸாகக்கூட கிடைக்கிறது. அதிகாலை சூரியக்கதிர்கள் நமது உடல் மேல் பட்டவுடன் உடலில் தானாகவே வைட்டமின் 'டி' சுரந்துவிடும். நமக்குத் தேவையான வைட்டமின் 'டி' 70 சதவிகிதம் சூரியக்கதிர்கள் மூலமாகவே கிடைத்து விடும். மீதமுள்ள 30 சதவிகிதம் மட்டுமே உணவில் இருந்து கிடைக்கிறது. இவை எலும்பு உருவாவதற்கும் எலும்பு வலுவாக இருப்பதற்கும் உதவுகிறது. வைட்டமின் 'டி' குறைபாட்டால் 'ரிக்கட்ஸ்' என்ற நோய் குழந்தைகளுக்கும், ஆஸ்டியோமலேசியா (எலும்பு முறிவு) என்ற நோய் வயதானவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்களுக்கு மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
ஒரு நாளைக்கு எத்தனை மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்?
பெரும்பாலும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் ஒருநாளைக்கு ஒன்று எடுத்துக்கொள்வது போலவே வடிவமைக்கபட்டுள்ளது. ஒரு சில மாத்திரைகள் மட்டுமே வாரத்துக்கு ஒரு முறை எடுத்துக் எடுத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்படும். இவற்றில் அதிகமான டோசேஜ் இருக்கும். இவ்வாறான மாத்திரைகளை இரண்டு மாதம் வரையில் மருத்துவர்கள் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி, இந்த மாத்திரைகளை மருத்துவர்கள் குறிப்பிடும் காலம் வரை தினந்தோறும் எடுத்துக்கொள்ள வேண்டும் .
நீரிழிவு நோயாளிகள் வைட்டமின் மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா?
கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகளைத் தவிர்க்க வைட்டமின் மாத்திரைகள் மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக வைட்டமின் பி12 மாத்திரைகள் நீரிழிவு காரணமாக வருகிற தசை மற்றும் நரம்பு சம்பந்தமான குறைபாடுகளை தவிர்க்க உதவுகிறது. ஆனால், உங்களது உடலை பரிசோதித்து, வைட்டமின் குறைபாடு இருந்தால் மட்டுமே வைட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கருத்தரித்த மற்றும் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா?
அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் நிச்சயமாக அயன் மற்றும் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். ஃபோலிக் ஆசிட் முதுகுத்தண்டுவடம், மூளை, இதயம் மற்றும் பிற உறுப்புகள் உருவாவதற்கு மிகவும் அவசியம். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்த சோகை வர அதிகமான வாய்ப்பு உள்ளது. இதனை எதிர்கொள்ள இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
மாதவிடாய் நேரத்தில் சில ஹார்மோன் மாறுபாடு உடலில் ஏற்படுகிறது. இதனால், உடல் மிகவும் சோர்வடையும். இதனை சரிசெய்ய, தேவைப்பட்டால் மருத்துவரின் பரிந்துரைப்படி மல்டி வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.
எந்த உணவுகளில் இருந்து உடலுக்கு இயற்கையாகவே வைட்டமின்கள் கிடைக்கும்?
பொதுவாகவே இயற்கையாக விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகமான வைட்டமின்கள் இருக்கும். கீரை வகைகள், பருப்பு வகைகள், பால் மற்றும் பால் சம்பந்தமான உணவுகள், பாலிஷ் செய்யாத அரிசிகள் போன்றவற்றில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். இவற்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், பெரும்பாலும் மல்டி வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியம் வராது.''
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...