Indira Gandhi:``என் பாட்டியிடமிருந்துதான் இதைக் கற்றேன்..." - ராகுல் காந்தி பகிர்ந்த செய்தி
நேருவின் மகள் என்ற அடையாளத்தைக் கடந்து, இந்தியாவின் இரும்புப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் இந்திரா காந்தி.
உலகின் இரண்டாவது பெண் பிரதமர், இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்த நாளான இன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திரா காந்தியின் நினைவு இடத்தில் அவருக்கு மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து தன் பாட்டியின் புகைப்படத்தைப் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ``என் பாட்டி தைரியத்துக்கும், அன்புக்கும் ஒரு முன்னுதாரணம். அவரிடமிருந்து தான் தேசிய நலனைப் பிரதபலிக்கும் பாதையில் அச்சமின்றி நடப்பதையும், அதன் உண்மையான பலத்தையும் கற்றுக்கொண்டேன். அவருடைய நினைவுகள்தான் என் வலிமை. அதுவே எப்போதும் எனக்கு வழிகாட்டுகிறது." எனப் பதிவிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன் எக்ஸ் பக்கத்தில், `` `நாங்கள் நம்பினோம் - இப்போது நாங்கள் நம்புகிறோம் - நம் சுதந்திரம், அமைதி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை பிரிக்க முடியாதவை என்பதை என்று நாங்கள் நம்புகிறோம்.' - இந்திரா காந்தி
இந்தியாவின் இரும்புப் பெண். அவரின் வாழ்க்கையிலிருந்து இந்தியா தொடர்ந்து உத்வேகம் பெறும். ஏனென்றால் அவர் வாழ்நாள் முழுவதும் போராட்டங்கள்தான் நிறைந்திருந்தது. அவரின் தைரியத்தைத் தலைமையின் முக்கியப் பங்காக பெற்றிருந்தார்.
இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க அவர் தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர். தன்னலமின்றி தேசக் கட்டமைப்பிற்கு பங்களித்தார். அவரது பிறந்த நாளில் அவருக்கு எங்களின் பணிவான மரியாதையை செலுத்துகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,`` இந்திரா காந்தி வாழ்ந்தது மட்டுமல்லாமல் வரலாற்றை வடிவமைத்த அசாதாரண பெண். தொடர்ந்து மக்களுக்காக உழைத்த அயராத உழைப்பாளி. அங்கீகாரத்தைவிட முடிவுகளில் தீவிர கவனம் செலுத்தியவர்" எனப் பாராட்டியிருக்கிறார்.