காந்தி சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை
IndvEng: 'தேவையற்ற ஷாட்கள்; சூழலை உணராத அக்ரஸன்!' - இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா எப்படி தோற்றது?
இது ப்ளாட் பிட்ச். இங்கிலாந்து அடித்திருப்பது சுமாரான ஸ்கோர். இந்தியா இந்த டார்கெட்டை எளிதில் சேஸ் செய்யும், செய்தே ஆக வேண்டும்... ஏக ஸ்ருதியில் வர்ணனையாளர்கள் அத்தனை பேரும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், தங்களின் கட்டுக்கோப்பான பௌலிங்கின் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது இங்கிலாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் தொடரையும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவியிருக்கிறது இங்கிலாந்து.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். இந்த டாஸ் முடிவை ஒரு டெம்ப்ளேட்டாகவே வைத்திருக்கிறார் சூர்யா. இந்தப் போட்டியில் ஒரு நல்ல மாற்றமாக ஷமி லெவனுக்குள் வந்திருந்தார். கிட்டத்தட்ட 13 மாதங்கள் கழித்து மீண்டும் இந்திய அணியில் ஷமி. விக்கெட்டுகள் எதுவும் எடுக்காவிடிலும் டீசண்ட்டான ஸ்பெல்லை வீசிவிட்டு சென்றிருந்தார். இங்கிலாந்து அணியும் கடந்த போட்டிகளை போல இல்லாமல் நன்றாக தொடங்கியது. பில் சால்ட் 5 ரன்களில் ஹர்திக் பந்தில் க்ளீன் ஹிட்டாக அடித்த போதும் கவர் பீல்டரை க்ளியர் செய்ய முடியாமல் கேட்ச் ஆகி வெளியேறியிருந்தார். பென் டக்கட் நின்று அடித்தார். முதல் விக்கெட்டை எடுத்த ஹர்திக்கின் அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிக்களை அடித்தார். பவர்ப்ளே சௌகரியத்தால் வாஷிங்டனின் ஓவரிலும் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் அடித்தார்.
பட்லரும் டக்கட்டுக்கு உறுதுணையாக நிற்க, டக்கெட் அரைசதத்தை கடந்தார். 8 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 74-1 என வலுவான நிலையில்தான் இருந்தது. இந்த சமயத்தில்தான் இது பேட்டிங் பிட்ச் இங்கிலாந்து கட்டாயம் 220 ரன்களை எடுத்தே ஆக வேண்டும் என வர்ணனையில் பேசிக்கொண்டிருந்தனர். அடுத்த ஓவரிலிருந்தே இங்கிலாந்தின் வீழ்ச்சி தொடங்கியது. வருண் சக்கரவர்த்தியின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார் பட்லர். அக்சர் வீசிய அடுத்த ஓவரில் அரைசதத்தை கடந்திருந்த டக்கட் அவுட் வருண் சக்கரவர்த்தி இந்தப் போட்டியில் 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்தார். பட்லர், ஸ்மித், ஓவர்டன், கார்ஸ், ஆர்ச்சர் என 5 பேரின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
டைட்டாக ஸ்டம்ப் டூ ஸ்டம்பாக வீசி பேட்டருக்கு நெருக்கடி கொடுத்து அத்தனை விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வருணின் மேஜிக்கல் ஸ்பெல்லால் இங்கிலாந்து அணி சுருண்டது. லிவிங்ஸ்டன் மட்டும் ஒரு எண்ட்டில் சிக்சர்களை பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். குறிப்பாக, ரவி பிஷ்னோயின் பந்தில் லெக் சைடில் மடக்கி மடக்கி அடுத்தடுத்து சிக்சர்களை அடித்து அசத்தினார். லிவிங்ஸ்டன் நின்றால் இங்கிலாந்து 200+ செல்லும் எனும் நிலை. ஆனால், ரிஸ்க் எடுத்து எல்லா பந்துகளையும் பெரிய ஷாட்டாக ஆடிக் கொண்டிருந்த லிவிங்ஸ்டன் 43 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் அவுட் ஆனார். கடைசியில் மார்க் வுட்டும் அடில் ரஷீத்தும் சிங்கிளாக தட்டி 171 ரன்களுக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இந்தியாவுக்கு டார்கெட் 172. இந்த மைதானத்தில் இது சராசரியை விட குறைவான டார்கெட். எளிதில் இதை இந்திய அணியால் சேஸ் செய்ய முடியும் என்பதுதான் அத்தனை பேரின் கணிப்பாகவும் இருந்தது. ஆனாலும் இந்திய அணி சொதப்பியது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. நீங்கள் 'Bazball' ஆடினால் நாங்கள் 'Skyball' ஆடுகிறோம் என போட்டி போட்டு தவறான அவசரகதியிலான ஷாட்களை ஆடிய இந்தியாவின் முக்கிய பேட்டர்கள் வீழ்ந்தனர்.
சாம்சன் 3 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். கடந்த 2 போட்டிகளிலுமே அவர் ஷார்ட் பிட்ச் டெலிவரியில்தான் அவுட் ஆகியிருந்தார். அதுதான் அவரின் வீக்னெஸ். அதை உணர்ந்து ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களில் ரிஸ்க் எடுக்காமல் தவிர்த்திருக்கலாம். ஆனால், இங்கேயும் ஷார்ட் பிட்ச் டெலிவரியை முழு நம்பிக்கையோடு அடிக்காமல் அவுட் ஆனார். அபிஷேக் சர்மாவும் சூர்யகுமார் யாதவும் கூட அப்படித்தான். எதற்கு அத்தனை அவசரம் என தெரியவில்லை. ஒன்று எங்களின் அணுகுமுறையே இதுதான் என சூழலை கருத்தில் கொள்ளாமல் வம்படியாக அடித்து ஆடுவது அல்லது பேட்டிங் ஆர்டரின் நீளம் பெரிதாக இருப்பதால் கன்னாபின்னாவென ரிஸ்க் எடுத்து ஆடுவது. இரண்டையுமே இந்திய பேட்டர்கள் செய்தனர்.
எல்லா சமயங்களிலும் அட்டாக்கிங்காக செல்ல வேண்டியதில்லை, சில சமயங்களில் இரண்டடி பின்னால் வைத்து டிபன்ஸிவ்வாக செல்லலாம் என்கிற மனநிலையும் வேண்டும். பயிற்சியாளர் கம்பீரின் காலத்தில் அந்த விஷயத்தில்தான் இந்திய அணி சொதப்பி வருகிறது. டாப் ஆர்டரில் ஒரு கூட்டணி நின்று ஆடியிருந்தால் இந்த டார்கெட்டை எளிதில் எட்டியிருக்க முடியும். டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில் அடில் ரஷீத் களத்தில் குதித்துவிட்டார். முதல் இன்னிங்ஸில் பந்து பெரிதாக திரும்பவில்லை என பேசிக்கொண்டிருந்தனர்.
ஆனால், அடில் ரஷீத் தன்னுடைய அனுபவத்தின் வழி சரியான லெந்தை பிடித்து சிறப்பாக வீசினார். 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்தார். திலக் வர்மாவின் விக்கெட்டையும் வீழ்த்திக் கொடுத்தார். இவரை சமாளிக்க வாஷியும் ஹர்திக்கும் நிதானமாக ஆட வெற்றி பெற தேவையான ரன்ரேட் எகிறியது. ரன்ரேட்டை துரத்த முற்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோனது. அடில் ரஷீத் வீசிய மிடில் ஓவர்களிலும் ஸ்லிப் வைத்து அட்டாக் செய்தார் பட்லர். கடைசிக்கட்ட ஓவர்களில் ஹர்திக்கிற்கு லெக் சைடில் மட்டும் 4 பீல்டர்களை வைத்து கட்டம் கட்ட முயன்றார். ஹர்திக் V பகுதியில் பெரிய ஷாட்களை ஆடுவார் என அங்கே பீல்டிங்கை டைட் ஆக்கினார். இதையெல்லாம் தாண்டியும் ஒரு சில சிக்சர்களை அடிக்க முயன்றார். ஆனால், அவரும் 40 ரன்களில் ஓவர்டனின் பந்தில் லாங் ஆனால் கேட்ச் ஆனார். இந்திய அணி 145 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியாவுக்கு ஒரே ஆறுதலான விஷயம் வருணின் மேஜிக்கல் ஸ்பெல்லுக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது தான். இங்கிலாந்தின் இந்த வெற்றி மூலம் சீரிஸ் 2-1 என இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளின் மீதும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.