jyotika: ``எடை குறைப்புதான் எதிர்காலத்துக்கான சாவி" - Weight Loss பயணம் குறித்து மனம் திறந்த ஜோதிகா
வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. ரஜினி, கமல், விஜய், அஜித் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார். இடையில் நடிப்புக்கு நீண்ட இடைவெளி விட்டிருந்தவர், தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகை ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகியது. அதற்குப் பிறகு உடல் எடைக் குறைந்து காணப்பட்டார்.

அது தொடர்பாகப் பேசிய அவர், ``3 மாதங்களில் 9 கிலோ எடையைக் குறைத்ததற்கும், என் உள்ளத்தை மீண்டும் கண்டுபிடிக்க உதவியதற்கும் நன்றி, அமுரா! என்னை சரியான திசையில் வழிநடத்தியது நடிகை வித்யா பாலனைத் தவிர வேறு யாருமல்ல" எனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக மேலும் பேசிய அவர், ``அக்டோபர் 2024-ல் நடிகை வித்யா பாலன் ஜிம்முக்கு செல்லாமல் எப்படி உடல் எடையைக் குறைப்பது என்பதைப் பற்றிப் பேசி, அவரின் பயண வீடியோவை வெளியிட்டிருந்தார்.
வித்யா பாலனின் பயணக் கதையால் ஈர்க்கப்பட்டேன். எடை மேலாண்மை எப்போதுமே எனக்கு ஒரு போராட்டம்தான். கடுமையான உடற்பயிற்சியோ, டிரெட்மில்லில் மணிநேரம் ஓடுவது மட்டுமல்ல, குடல் ஆரோக்கியம், செரிமானம், சீரான உணவு, முறையாக ஓய்வு ஆகியவையும் அவசியம். இது உடல் எடையை மட்டுமல்ல, மனநிலையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இப்போது நான் பல ஆண்டுகளாக இருந்ததை விட அதிக உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் உணர்கிறேன். எடை குறைப்பு பயிற்சி என்பது எதிர்காலத்திற்கான சாவி. குறிப்பாக பெண்களுக்கு. இதன் மூலம் நம் உள்ளத்தை குணப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைப்பதும் நமது முக்கிய இலக்குகளாக இருக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.