பள்ளி நிகழ்ச்சியில் தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயம்!
Kanguva: "குறைகள் இருந்தாலும் 'கங்குவா' நல்ல படம்; ஆனால் சிலர்..." - மனம் திறந்த இயக்குநர் பாக்யராஜ்
2024ம் ஆண்டுக்கான 22வது சென்னை சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று (டிச 19) இரவு சென்னையில் நடைபெற்றது.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தது. விருதுகள் பெற்ற திரைப்படங்கள் மட்டுமின்றி, பிரபல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்களும் திரையிடப்பட்டன. இவ்விழாவின் இறுதி நாளான நேற்று (டிச 19) இரவு சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும் (மகாராஜா), சிறந்த நடிகையருக்கான விருது சாய் பல்லவிக்கும் (அமரன்) வழங்கப்பட்டது. சிறந்த படமாக 'அமரன்' திரைப்படமும், சிறந்த இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷும் (அமரன்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவ்விழாவில் சூர்யாவின் 'கங்குவா' திரைப்படத்திற்கு வந்த கடுமையான விமர்சனங்கள் குறித்துப் பேசியிருக்கும் இயக்குநர் பாக்யராஜ், "பத்திரிக்கைகளும், ஊடகங்களும்தான் பல இயக்குநர்களை, நல்ல திரைப்படங்களைக் கொண்டாடி மக்களிடையே கொண்டு சேர்த்து, வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. விமர்சனங்கள் பல இயக்குநர்களை வெற்றி இயக்குநர்களாக மற்றியிருக்கிறது. ஆனால், அதில் சில தவறான எண்ணம் கொண்டவர்கள் உள்ளே புகுந்து டார்க்கெட் செய்து திரைப்படங்களைப் பற்றித் தவறாகப் பேசி, தோல்வியடைய வைக்க வேண்டும் என்றே சில வேலைகளைச் செய்கின்றனர்.
சமீபத்தில் 'கங்குவா' திரைப்படத்திற்கு வந்த கடுமையான விமர்சனங்களைப் பார்த்து கவலைப்பட்டேன். சரி, படம் எப்படி இருக்கிறது என்பதைக் காண திரையரங்கிற்குச் சென்றேன். ஒரு சில திரைக்கதை குறைப்பாடுகளைத் தவிர திரைப்படம் அருமையாக இருந்தது. நல்ல திரைப்படம்தான் 'கங்குவா'. அவ்வளவு பெரிய உழைப்பு அப்படத்தில் இருந்தது.
சிறு சிறு குறைகளை விமர்சிக்கலாம். ஆனால், மக்கள் அந்தப் படத்தைப் பார்த்திடவே கூடாது என்ற நோக்கத்தில் கட்டம் கட்டி கடுமையாக விமர்சிப்பது ரொம்பத் தவறான விஷயம். நம்முடைய சினிமாவை நாமே வீழ்த்தக் கூடாது. பொறுப்புடன் திரைப்படங்களை விமர்சிக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...