Menopause: மனைவிக்கு மெனோபாஸ்; கணவன் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை... | காமத்துக்கு மரியாதை - 213
'உடம்புல என்னென்னவோ செய்யுது, ஆனா, ஒண்ணும் புரியல' - மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கிற பெண்களுடைய மனநிலையை ஒருவரியில் சொல்ல வேண்டுமென்றால், இப்படித்தான் சொல்ல வேண்டும். நிலைமை இப்படியிருக்க, தாம்பத்திய உறவில் பெரும்பாலான பெண்களுக்கு ஈடுபாடு இருக்காது. அதனால், இந்த காலகட்டத்தில் செக்ஸ் தொடர்பாகக் கணவர்கள் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள் பற்றிச் சொல்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.
''நாற்பதுகளின் மத்தியில் இருக்கும்போது பெரி மெனோபாஸ், மெனோபாஸ் நிலைக்குப் பெண்கள் சென்று விடுவார்கள். இந்த காலகட்டத்தில் பெண்களுடைய ஹார்மோன்கள் கிட்டத்தட்ட தலைகீழாக மாறும். இதனால், பெண்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் ஏகப்பட்ட பிரச்னைகள் வரும். விளைவு, திடீரென கோபப்படுவார்கள்; எரிச்சல் படுவார்கள். தலையிலிருந்து கால் வரைக்கும் நெருப்புப்பந்து ஓடுவதுபோல உணர்வார்கள். ஏசியில் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், குப்பென்று வியர்க்கும். இந்த நேரத்தில், ஒரு மகப்பேறு மருத்துவரைச் சந்தித்தால், அவர்களுக்கு ஏற்படுகிற அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை செய்வார்கள்.
இந்த காலகட்டத்தில் பெண்ணுறுப்பு தேய்ந்து, அதில் சுரக்கிற உயவுப்பொருள் குறைந்து வறண்டு போய் விடும். இதனால் பல பெண்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறைவும். சிலருக்கோ, தான் பெண்மையை இழந்து விட்டோமோ என்கிற எண்ணம்கூட வந்து விடும். இவர்களுக்கு, பிறப்புறுப்பில் அப்ளை செய்ய ஜெல்களை பரிந்துரை செய்வோம். சில பெண்களுக்கு மட்டும் 'கருத்தரிக்க வாய்ப்பில்லை' என்பதால், தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகரிக்கலாம்.
சிலருக்கு, மெனோபாஸ் தொடர்பான காரணங்களைத் தவிர, உறவுகொள்ளும்போது பிறப்புறுப்பில் வலி, கருப்பையில் கட்டி போன்ற காரணங்களாலும் உறவில் விருப்பம் இல்லாமல் போகலாம்.
மெனோபாஸ் நேரத்தில் பெண்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதும் அவை இயல்பானவையே என்பதும் ஆண்களுக்குத் தெரிய வேண்டும். இது தெரியவில்லை என்றால், சிறு வயது தம்பதியர் போலச் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்.
இந்த காலகட்டத்தில் மனைவிக்கு விருப்பம் குறைவாக இருந்து, கணவருக்கு விருப்பம் அதிகமாக இருந்தால், கணவர் விரும்பும்போதெல்லாம் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டிய அவசியமில்லை. சில முறை சுயஇன்பம்கூட செய்துகொள்ளலாம். தவிர, செக்ஸ் உணர்வைத் தூண்டும் வீடியோக்களை, படங்களை ஆண்கள் கொஞ்சம் தள்ளியும் வைக்கலாம். நண்பர்களுடன் நேரம் செலவழிக்கலாம். பயணத்தில் ஈடுபாடு இருந்தால், அதை மேற்கொள்ளலாம். அதேநேரம், மனைவிக்கு எப்போதாவது தான் விருப்பம் வருகிறது என்பதால், அந்த நேரத்தில் உறவைத் தவிர்க்காமல் இருக்கலாம்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் அதனால் உடலில் ஏற்படுகிற மாற்றங்கள் காரணமாகப் பெண்களுக்கு இந்த நேரத்தில் பொதுவாகவே உறவில் விருப்பம் இருக்காது. சிலருக்கு, மெனோபாஸ் தொடர்பான காரணங்களைத் தவிர, உறவுகொள்ளும்போது பிறப்புறுப்பில் வலி, கருப்பையில் கட்டி போன்ற காரணங்களாலும் உறவில் விருப்பம் இல்லாமல் போகலாம். இவர்கள் மருத்துவரைச் சந்தித்து காரணத்தைக் கண்டறிந்து சரி செய்துகொள்ள வேண்டும்.
இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாத பெண்கள், வலியைப் பற்றிச் சொல்லாமல் 'செக்ஸ் வேண்டாம்' என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் தன்னுடைய கடைசி திருமணத்தைத் தன்னுடைய அறுபதுகளில் செய்துகொண்டார். ஆனால், நம் ஊர்ப்பெண்கள் ஐம்பது வயதிலேயே வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது அவசியமில்லாதது. மெனோபாஸ் காலகட்டத்தில் கணவர்கள் புரிந்துகொண்டு ஆதரவாக நின்றால், பெண்கள் கூலான மனநிலையுடன் இதைக் கடந்துவிடுவார்கள்'' என்கிறார் மருத்துவர் காமராஜ்.