இது `சரவணன் மீனாட்சி' இல்லையேன்னு! - Rio Raj | Aan Paavam Pollathathu | Vikatan ...
Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) இந்தியா கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பேசி உள்ளார்.
பீகார் மாநிலம் சக்கரா பகுதியில் நடந்த பாஜக ஊர்வலத்தில் பேசிய அவர் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி 2022ஆம் ஆண்டு "நான் பீகார் மக்களை உள்ளே விடமாட்டேன்" எனப் பேசியதை சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் பேசியபோது பிரியங்கா காந்தி அந்த மேடையில் இருந்ததாகவும் அவரது பேச்சைக் கேட்டு சிரித்ததாகவும் மோடி பேசி உள்ளார்.

Modi பேசியது என்ன?
"நண்பர்களே விளக்குடன் இருப்பவர்களும் (RJD சின்னம்) கையும் (Congress சின்னம்) அவர்களின் இந்தியா கூட்டணியும் பீகார் மக்களை எப்படி அவமதித்தனர் என்பதை நான் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
பஞ்சாபின் முதலமைச்சர் வெளிப்படையாக பீகார் மக்களை உள்ளே விட மாட்டேன் என கூறினார். பொதுவெளியில் அவர் இப்படி பேசியபோது காந்தி குடும்பத்தின் மகளும் தற்போது நாடாளுமன்றத்தில் இருப்பவரும் மகிழ்ச்சியாக கையை தட்டிக் கொண்டிருந்தார்." என்றார் மோடி.
தொடர்ந்து பேசிய அவர், "இதற்கிடையில், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில், காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்களை அவமதிக்கின்றனர், மேலும் தமிழ்நாட்டில், திமுக பீகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளி மக்களை தவறாக நடத்துகிறது. இவை அனைத்துக்கும் இடையே, பீகாரில் உள்ள ஆர்ஜேடி மௌனமாக, பேச்சு மூச்சற்றது போல இருக்கிறது. இந்த முறை, இந்த தேர்தல்களில், அவர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டனர்.
பீகாரை தங்கள் மாநிலங்களில் அவமதித்த அதே காங்கிரஸ் தலைவர்களை இப்போது ஆர்ஜேடி இங்கு பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளது. இது காங்கிரஸின் கணக்கிடப்பட்ட சதி - அவர்கள் ஆர்ஜேடிக்கு அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றனர். ஆர்ஜேடி - காங்கிரஸ் இடையேயான பிளவு எவ்வளவு ஆழமானது என்பதை இது காட்டுக்கிறது." எனக் கூறியுள்ளார்.
பீகாரில் வருகின்ற நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 14ம் தேதி முடிவுகள் வெளியாகும்.

















