Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த ...
Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த கண்ணீருடன் ஜெமிமா!
பெண்கள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. சவால் நிறைந்த இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஜெமிமா சிறப்பாக ஆடி சதமடித்து 127 ரன்களை சேர்த்து அணியை வெல்ல வைத்தார். அவருக்குதான் ப்ளேயர் ஆப் தி மேட்ச் விருதும் வழங்கப்பட்டது.

விருதை வாங்கிவிட்டு நெகிழ்ச்சியாக பேசிய அவர், ''என்னுடைய அம்மா, அப்பா, பயிற்சியாளர் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்திருந்த அத்தனை பேருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இது ஒரு கனவு போல இருக்கிறது. இன்னும் என்னால் முழுமையாக இதை உணர முடியவில்லை.
நம்பர் 3 இல் வருவேன் என நினைக்கவில்லை. குளித்துக் கொண்டிருந்தேன். திடீரென என்னிடம் சொன்னார்கள். களமிறங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்புதான் என்னிடம் நம்பர் 3 என சொன்னார்கள். என்னுடைய அரைசதத்தையும் சதத்தையும் விட அணியின் வெற்றிதான் எனக்கு முக்கியமாக இருந்தது. நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். கடந்த ஆண்டு அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டேன். இந்த உலகக்கோப்பையிலும் ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டேதான் இருந்தேன்.

மனரீதியாக நான் சௌகரியமாக இல்லை. ஒரு மாதிரியாக பதட்டமாகவே இருந்தேன். நான் கட்டாயம் பெர்பார்ம் செய்தாக வேண்டும் என தோன்றியது. கடவுள்தான் எல்லாவற்றையும் நிகழ்த்தினார். பைபிளுள்ள ஒரு வசனத்தை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். 'நீங்கள் நிலைத்திருங்கள். கடவுள் உங்களுக்காக சண்டையிடுவார்!' இந்த வசனத்தை நினைத்துக்கொண்டு நிதானமாக ஆடினேன். கடைசியில் நான் கொஞ்சம் அதிரடியாக ஆட நினைத்தேன், முடியவில்லை. தீப்தி என்னை ஊக்கப்படுத்தினார். நான் சோர்வுறும் போது என்னுடைய சக வீராங்கனைகள் என்னை தேற்றுகிறார்கள். எதற்கும் நான் க்ரெடிட் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. நான் எதையும் தனி ஆளாக செய்யவில்லை.' என்றார்.
















