Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த ...
Ind v Aus : 'ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா!' - ஆட்டத்தை மாற்றிய குயின் ஜெமிமா!
பெண்கள் உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதமடித்து கடைசி வரை நின்று போட்டியை வென்று கொடுத்திருக்கிறார்.

நவி மும்பையில் நடந்த இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஸா ஹீலிதான் டாஸை வென்றிருந்தார். ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 49.5 ஓவர்களில் அத்தனை விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் ஓப்பனர் லிட்ச்பீல்ட் மிகச்சிறப்பாக ஆடி 119 ரன்களை அடித்திருந்தார். கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரைசதத்தை அடித்திருந்தனர். இந்திய அணியின் சார்பில் ஸ்ரீசரணியும் தீப்தி சர்மாவும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
இமாலயா டார்கெட்
இந்திய அணிக்கு டார்கெட் 339. இமாலய டார்கெட். அதுவும் நாக் அவுட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எனும் போது இன்னும் கூடுதல் சவால். அதற்கேற்றார் வகையில் இந்திய அணியின் ஓப்பனர்களான ஸ்மிருதி மந்தனாவும் ஷெபாலி வர்மாவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடக்கத்தில் ஒரு மொமண்டமே கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் ஹர்மன்ப்ரீத் கவுரும் ஜெமிமாவும் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டனர்.

ஸ்ட்ரைக்கை தொடர்ந்து ரொட்டேட் செய்து ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு தள்ளி ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்துக் கொண்டனர். ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் கேட்ச் ட்ராப்கள், தவறான அப்பீல்கள் ஆகியவை இந்த ஜோடிக்கு கூடுதல் வாய்ப்புகளை கொடுத்தது. இருவரும் இணைந்து 167 ரன்களை சேர்த்திருந்தனர். இந்தியாவின் மீதிருந்த அழுத்தம் மொத்தத்தையும் ஆஸி மீது திருப்பிவிட்டனர். பார்ட்னர்ஷிப் வெற்றியை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கையில் சதர்லேண்ட்டின் பந்தில் ஹர்மன் 89 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக வந்த தீப்தி சர்மாவும் வேகமாக ஆடி வேகமாகவே வெளியேறினார். இப்போது அழுத்தம் இந்தியா மீது. ஜெமிமா சதத்தை கடந்து நின்றார். கடைசி நான்கு ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. இதே மாதிரியான சமயங்களில் இந்தியா பல முறை Choke செய்திருக்கிறது. ஆனால், இங்கே ஜெமிமா ரொம்பவே பக்குவமாக ஆடி 9 பந்துகள் மீதமிருக்கையிலேயே இந்திய அணியை வெல்ல வைத்தார்.

உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை ஒரு இமாலய டார்கெட்டை எட்டி வீழ்த்துவது அசாத்தியம். அதை இந்தியா நிகழ்த்தியிருக்கிறது. ஜெமிமா அடித்திருக்கும் 127 ரன்கள் என்றைக்கும் வரலாற்றில் நிற்கும்!
















