Ooty Carrot: உச்சம் தொட்ட ஊட்டி கேரட்; கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை!
இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலை காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் நீலகிரி முக்கிய இடத்தில் இருக்கிறது. இங்கு விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர். மலை காய்கறி சாகுபடியில் கேரட் முக்கிய பயிராக இருக்கிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் கேரட் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல ஆயிரக்கணக்கான விவசாய கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேரட் அறுவடையை மட்டுமே சார்ந்திருக்கிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கேரட்டை மேட்டுப்பாளையம், சென்னை போன்ற பகுதிகளில் உள்ள மொத்த ஏல மண்டிகளுக்கு அனுப்பி வருகின்றனர். ஒரு கிலோ கேரட் ரூ.25 முதல் ரூ.35 விற்பனையாகி வந்த நிலையில், நேற்று திடீரென விலை உயர்வு ஏற்பட்டு ஒரு கிலோ 110 ரூபாய் வரை விற்பனையாகியிருக்கிறது.
இந்த திடீர் விலை உயர்வு குறித்து தெரிவித்த கேத்தி பாலாடா பகுதியைச் சேர்ந்த மலை காய்கறி மொத்த வணிகர் ஹரிஹரன், "நீலகிரியைப் பொறுத்தவரை நாள்தோறும் இரவு பகலாக கேரட் அறுவடை செய்யப்படும். கேரட் அறுவடைக்கு மனித உழைப்பே அடிப்படை என்பதால், அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தேவை.
தீபாவளி பண்டிகை காரணமாக தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. மண்டிகளுக்கு கேரட் வரத்து அப்படியே சரிந்ததால் திடீர் உச்சம் ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஒன்றிரண்டு நாள்களில் சீராகும்" என்றார்.