Pongal FDFS: போக்கிரி, ஆடுகளம், விஸ்வாசம், பேட்ட - 2000 முதல் இன்று வரை 'பொங்கல் வின்னர்' யார்?
தமிழர் திருநாளை சிறப்பிக்க கரும்பும், சர்க்கரைப் பொங்கலும், புத்தாடைகளும் மட்டுமே போதாது. புதிய படங்கள் பார்ப்பதும் நம் மக்களுக்கு கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதான்.
விஷேசம்னாலே சினிமாதான்!
தொலைக்காட்சியிலோ அல்லது திரையரங்கிலோ குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஒரு ஸ்டார் படம் அல்லது ஜாலியான ஒரு படம் தேவை. அந்த நேரத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் போட்டியும் அதிகம்.
இந்த ஆண்டு `வணங்கான்', `மத கஜ ராஜா', `கேம் சேஞ்சர்', `மெட்ராஸ்காரன்', `நேசிப்பாயா', `காதலிக்க நேரமில்லை' உட்பட பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
இதேப்போல கடந்த ஆண்டுகளில் போட்டி போட்டு ரிலீஸ் ஆன முக்கிய திரைப்படங்கள் என்னென்ன, அவற்றில் வெற்றிபெற்றவை எவை என்பதை பார்க்கலாம்.
2001
`தீனா', `ப்ரண்ட்ஸ்', `வாஞ்சிநாதன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. தீனா மற்றும் ப்ரண்ட்ஸ் இரண்டும் மிகப் பெரிய வெற்றிய பெற்றது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய முதல் திரைப்படமான தீனா படத்தில் புதியதொரு அஜித்தை அவரின் ரசிகர்கள் கண்டனர். இந்தப் படத்திற்குப் பிறகுதான். தல என அஜித்குமாரை அவரின் ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர். ப்ரண்டஸ் படம் விஜய், சூர்யா இருவரின் நடிப்பில் வெளியாகியிருந்தது. இன்றளவும் இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. விஜயகாந்த் போலீஸ் கதாப்பாத்திரமாக நடித்திருந்த வாஞ்சிநாதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
2002
`பம்மல் கே சம்பந்தம்', `ரெட்', `அழகி', `புன்னகை தேசம்' என நான்கு படங்கள் ரிலீஸ் ஆகின. பம்மல் கே சம்பந்தம், அழகி திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசனின் நகைச்சுவை காட்சிகளை நாம் இன்றளவும் ரசித்துவருகிறோன். புன்னகை தேசம் திரைப்படம் இளைஞர்களால் வரவேற்கப்பட்டது. ரெட் திரைப்படம் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
2003
விக்ரம் நடிப்பில் தூள், கமல்ஹாசனின் அன்பே சிவம், விஜய்யின் வசீகரா என மூன்று திரைப்படங்கள் வெளியாகின. அன்பே சிவம் இன்று கொண்டாடப்பட்டாலும் அன்று விமர்சன ரீரியிலான வரவேற்பையே அதிகம் பெற்றது. வசீகரா திரைப்படம் இப்போதும் ரீவாட்ச் வேல்யூ கொண்டிருந்தாலும், 2003 பொங்கல் `தூள்' பொங்கலாகவே அமைந்தது.
2004
விருமாண்டி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், எங்கள் அண்ணா, கோவில் என நான்கு படங்கள் ரிலீஸ் ஆகின. அன்றும் இன்றும் விருமாண்டி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெருந்தீனி. எங்கள் அண்ணா திரைப்படம் விஜயகாந்த் ஸ்டைல் 'குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி'. இளம் ஹீரோக்களாகக் களமிறங்கிய தனுஷ், சிம்பு இருவரின் படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன.
2005
திருப்பாச்சி, ஐயா, தேவதையைக் கண்டேன் படங்கள் ரிலீஸ் ஆகின. விஜய்யின் திரைவாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான வெற்றியைப் பெற்றது திருப்பாச்சி திரைப்படம். ஐயா திரைப்படம் விமர்சன ரீதியிலும் கமர்சியலாகவும் வெற்றிபெற்றது.
2006
ஆதி, பரமசிவன், சரவணா என மூன்று படங்களும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி, எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் போயின.
2007
போக்கிரி, ஆழ்வார் மற்றும் தாமிரபரணி என மூன்று திரைப்படங்கள் வெளியாகின. போக்கிரி திரைப்படம் வெளியான பொங்கலை விஜய் ரசிகர்களால் மறக்க முடியாது. மிகப் பெரிய கொண்டாட்டமாக அமைந்தது. தாமிரபரணி திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டது. ஆழ்வார் திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
2008
பீமா, காளை, பழனி திரைப்படங்கள் வெளியாகின. இவற்றில் பீமா மட்டுமே கவனிக்கப்பட்டது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
2009
வில்லு, படிக்காதவன் படங்கள் வெளியாகின. இவற்றில் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்காக மாறாக படிக்காதவன் திரைப்படம் வெற்றியடைந்தது, வில்லு சுமாரான வரவேற்பையே பெற்றது.
2010
ஆயிரத்தில் ஒருவன் மற்றும் குட்டி படங்கள் ரிலீஸ் ஆகின. பெரும் உழைப்பைக் கொட்டி வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குட்டி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாரான வெற்றியைப் பெற்றது.
2011
ஆடுகளம், சிறுத்தை, காவலன் திரைப்படங்கள் வெளியாகின. ஆடுகளம், சிறுத்தை ஹிட் படங்களாக அமைந்தன. காவலன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் விஜய் ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் படமாக அமைந்தது.
2012
நண்பன் மற்றும் வேட்டை திரைப்படங்கள் வெளியாகின. நண்பன் விஜய் ரசிகர்கள், மாணவர்கள், குடும்பங்கள் என எல்லா பக்கமும் ஹிட் ஆனது. வேட்டை நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
2013
சமர், அலெக்ஸ் பாண்டியன், கண்ணா லட்டு திங்க ஆசையா படங்கள் வெளியாகின. சமர், அலெக்ஸ் பாண்டியன் படங்களை ரசிகர்கள் தொடர்புபடுத்திக்கொள்ள முடியாமல் போக, காமெடி படமான கண்ணா லட்டு திங்க ஆசையா ஹிட் ஆனது.
2014
ஜில்லா, வீரம் திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் ப்ளாக் பஸ்டர் ஹிட்!
2015
ஐ, டார்லிங், ஆம்பள படங்கள் போட்டிபோட்டன. அந்நியனுக்குப் பிறகு விக்ரம்-சங்கர் கூட்டணியில் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ஐ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பொங்கல் வெற்றிக்குத் தேவையான காமெடி-மசாலா உடன் வந்த ஆம்பள குடும்பங்களால் கொண்டாடப்பட்டது. டார்லிங் படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
2016
தாரை தப்பட்டை, ரஜினி முருகன், கெத்து படங்களில் ரஜினி முருகன் ரசிகர்களாலும் குடும்பங்களாலும் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியைப் பெற்றது. தாரைத்தப்பட்டை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. கெத்து, கதகளி திரைப்படங்கள் சுமாராகவே ஓடின.
2017
பைரவா, கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படங்கள் வெளியாகின. பைரவா ஹிட் ஆனது. கோடிட்ட இடங்களை நிரப்புக சுமாராக ஓடியது.
2018
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி மூன்று கமர்ஷியல் படங்களும் கமர்ஷியல் வெற்றியை பெறவே தடுமாறின.
2019
பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின. இரண்டு படங்களும் பெரும் வெற்றியைப் பெற்றன.
2020
பட்டாசு, தர்பார் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. பட்டாசு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், தர்பார் வெற்றி பெற்றது.
2021
மாஸ்டர், பூமி, ஈஸ்வரன், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. மாஸ்டர் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஆனது. ஈஸ்வரன் படம் சிம்பு நீண்ட நாட்கள் கழித்து நடித்ததால் எதிர்பார்ப்புடன் வெளியானது . பூமி, புலிக்குத்தி பாண்டி திரைப்படங்கள் சுமாராக ஓடின.
2022
கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர், தேள் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. மூன்று படங்களும் ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில் சுமாரான வெற்றியைப் பெற்றன.
2023
துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் ஹிட் ஆகின. வாரிசு திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்படது.
2024
கேப்டன் மில்லர், அயலான், மேரி கிறிஸ்துமஸ், மிஷன் சாப்டர் 1 படங்கள் வெளியாகின. அயலான், கேப்டன் மில்லர் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. மிஷன் சாப்டர் 1 எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மேரி கிறிஸ்துமஸ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
நீங்கள் பொங்கல் FDFS -ல் பார்த்த படம் எது என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!