யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
PTR: `அது அவருக்கே பலவீனமாக மாறிவிடும்; புரிந்துக் கொள்வார் என...' - பி.டி.ஆருக்கு ஸ்டாலின் அறிவுரை!
நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவரும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுமான பி.டி.ராஜனின் ‘வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதில் சட்டப்பேரவையில் நிதி குறைவு என்று வெளிப்படையாகப் பேசிய PTR பழனிவேல் தியாகராஜனுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு அறிவுரை வழங்கியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், " அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவார்ந்த வாதங்களை வைக்கக் கூடியவர். அவரது சொல்லாற்றால் அவருக்கு பலமானதாக மட்டுமே இருக்க வேண்டும், பலவீனமாக மாறிவிடக் கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என அவருக்குத் தெரியும். என் சொல்லை தட்டாத அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், என் அறிவுரையின் அர்த்தத்தையும் ஆழத்தையும் நிச்சயம் புரிந்துக் கொள்வார் என நம்புகிறேன்” என்று விழா மேடையிலேயே பேசியிருக்கிறார்.
வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிகிறது
வாரிசு குறித்துப் பேசியவர், "பி.டி.ராஜனுக்கு நம்முடைய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் வாரிசு அல்ல, நானும் வாரிசுதான். திராவிட வாரிசுகள். இங்கே இருப்பவர்கள் எல்லோரும் திராவிட வாரிசுகள். வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிகிறது. பற்றிக்கொண்டு எரிகிறது. அப்படி எரியட்டும் என்று தான் நாம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு எப்படி திராவிடத்தை ஒழிப்போம் என்று சில கைக்கூலிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அதே மாதிரி, பி.டி.ராஜன் காலத்திலும், நீதிக்கட்சியை குழி தோண்டி பாதாளத்தில் புதைத்துவிடுவேன்” என்று ஒரு தலைவர் சொன்னார். ஆனால், பி.டி.ராஜனோடு தொடர்ச்சியாக, பழனிவேல் ராஜன் வந்தார். இப்போது, பழனிவேல் தியாகராஜனும் நம்முடன் இருக்கிறார்." என்று பேசியிருக்கிறார்.
பின்னணி
நேற்றைய (21 ஏப்ரல்) சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆரிடம் தனது தொகுதி மேம்பாடு குறித்து அதிமுக எம்.எல்.ஏ ஜெயசீலன், "எனது கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான எந்த நிறுவனங்களும் இல்லை. எனவே, எனது தொகுதியில் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காவினை அமைத்துத் தருவதற்கு அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்" என்று கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இந்த கூட்டத் தொடரிலேயே என்னுடைய துறையில் இருக்கின்ற சிக்கல்களை நான் கூறியிருக்கிறேன். நிதியும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல எல்லா தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் தொழில்நுட்பத் துறையில் செயல்படுவதில்லை.

எனவே, யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் அது இல்லை" என்று வெளிப்படையாகப் பேசினார்.
அமைச்சரின் இந்தப் பதிலை சற்றும் எதிர்பாராத சபாநாயகர் அப்பாவு, மேலோட்டமாகக் கண்டிக்கும் தொனியில், "இதை உள்ளுக்குள்ளே முதல்வரிடம் பேசி முடிவெடுக்க வேண்டியது. பாசிட்டிவாகப் பதில் சொன்னால் எம்.எல்.ஏ-க்களுக்கு நன்றாக இருக்கும்" என்றார்.
சொந்தக் கட்சியை பற்றியே சட்டப்பேரவையில் சூசகமாக விமர்சித்த பி.டி.ஆரின் பேச்சு விவாதப் பொருளாகியிருந்தது. இந்தப் பின்னணியில்தான் முதல்வர் ஸ்டாலின், அறிவுரை வழங்கியிருக்கிறார்.
"நிதியும், அதிகாரமும் இருப்பவரிடம் கேளுங்கள்; என் துறையில் இல்லை" - சட்டமன்றத்தில் PTR ஓப்பன் டாக்